விஜயகாந்த் மகனை வைத்து ‘மதுரை வீரன்’ – ஏன்? – இயக்குநர் விளக்கம்!

தேமுதிக தலைவரான விஜயகாந்த  வாரிசு சண்முகப்பாண்டியன் நடிக்கும் படமான ‘மதுர வீரன்’ டீசர்  அண்மையில்தான் வெளியானது. இது ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தின் காட்சிகளில் இருந்து ஆரம்பமாகி, மதுரை வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியினோடு அதில் பங்குபெறும் மனிதர்களைப் பற்றி சொல்லிச் செல்கிறது. ‘அவங்க அழிக்கணும் நினைக்கிறது ஜல்லிக்கட்டை மட்டும் இல்ல… நம்மளோட கலாசாரத்தை’ என சமுத்திரக்கனியின் குரல் பின்னணியுடன்  தொடங்கும் இந்த டீசர், படம் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தைப் பற்றியதோ என்ற கேள்வியையும் ஏற்படுத்தியது. ஆனால், படத்தின் இயக்குநர் பி.ஜி.முத்தையா, ‘இத்திரைப்படம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை பற்றியதோ பீட்டாவுக்கு எதிராக எடுக்கப்பட்டதோ அல்ல; இது முழுக்க ஜல்லிக்கட்டைப் பற்றியது’ என்று விவரிக்கிறார்..

அறிமுக இயக்குநரான முத்தையா, ‘நம்ம படம்  இந்த வீர விளையாட்டின் பல்வேறு சிக்கல்களை யும் உள் அரசியலையும் விவரிக்கிறது’ என்று அண்மையில் அளித்த ஒரு  பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ‘ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் ஜல்லிக்கட்டு பற்றி நான் விளக்கவேண்டிய அவசியம் இல்லாமல் பார்வையாளர்கள் அனைவரும் இந்தச் செய்தியை எடுத்துச் சொல்லியுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே ஒளிப்பதிவாள ரான முத்தையா ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தனது முதல் படத்துக்கான கதைக்களமாக்க முடிவெடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ‘2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜல்லிக்கட்டு பற்றி படம் இயக்க நினைத்தேன். ஆனால், படம்பிடிக்க கடினமான கதைக்களம் என்பதால் முதலில் யோசித்தேன். அதன்பின் வித்தியாசமாக எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படத்தைப் பார்த்தேன். அது ஜல்லிக்கட்டைப் படமாக்கும் நம்பிக்கையை அளித்தது. அந்த உத்வேகத்தில் திரைக்கதையை எழுதினேன். அந்த வருட இறுதியில் தொடங்கி நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துக்குப் பின் எனது திரைக்கதையில் சில மாற்றங்களை செய்தேன்.’ என்றார்

சண்முகப்பாண்டியன், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில் மீனாட்சி கதாநாயகியாக அறிமுகமாகிறார். முத்தையா 2008ஆம் ஆண்டிலிருந்து கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சகுனி, ஒரு ஊரிலே ரெண்டு ராஜா உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். படம் இயக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் அது மனதுக்கு நெருக்கமான கதையாக இருக்க வேண்டும் என தீர்மானித்துக்கொண்டார்.

‘நான் வளர்ந்தது திருச்சிக்கு அருகில் உள்ள துறையூர் என்ற கிராமத்தில்தான். மதுரையைச் சுற்றியுள்ள இடங்களில் படத்துக்காக ஆய்வு செய்தேன். அப்போதே காட்சிகளுக்கான கோணமும் மனதில் தோன்றிவிட்டது. கதை கிராமத்தைவிட்டு வெளியே செல்லாது. உண்மை சம்பவங்கள் சிலவற்றையும் இதில் உபயோகித்துள்ளேன்.’

முத்தையா இப்படத்துக்கு சண்முகப்பாண்டியனை கதாநாயகனாக தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் அவரது தந்தை விஜயகாந்த் தான். ‘விஜயகாந்த் மதுரை பின்னணியில் இருந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது பேச்சில்கூட மதுரை வட்டார வழக்கு இருக்கும். அதனாலே  அவரது மகன் இந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவராக இருப்பார் என முடிவு செய்தோம். ஏனெனில் இதில் கதாநாயகன் 15 வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு ஊருக்குத் திரும்புபவராக உள்ளார். இது சண்முகப்பாண்டியன் விஷயத்திலும் ஒத்துபோகிறது. இது அவர் படப்பிடிப்பின் வழியாக அவரது வேரைத் தேடிச் செல்லும் விதமாகவும் அமைந்தது.

மதுர வீரன் படம் மூலம் முத்தையா தனது அரசியலைப் பேசுகிறார். ஜல்லிக்கட்டு ஆதரவாளரான முத்தையா இந்த வீர விளையாட்டை தடை செய்ய முடியாது என நம்புகிறார். ‘மாடுகளை வண்டியில் பூட்டவும், இறைச்சிக்காக உண்ணவும் அனுமதிக்கும்போது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடைவிதிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது கலாசாரத்தின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்’ என்று சொன்னார் முத்தையா