திரையரங்குகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள்!

அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

நாடு முழுவதும் 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த முறை அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளா்வுகளில் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள்:

* 50 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

* தகுந்த இடைவெளி விட்டு பார்வையாளர்கள் அமரவேண்டும்.

* காலியாக உள்ள இருக்கைகள் குறித்து குறிப்பிட வேண்டும்.

* கை கழுவுவதற்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

* பார்வையாளர்களின் வெப்ப நிலையைப் பரிசோதனை செய்யவேண்டும். அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.

* டிக்கெட் கட்டணத்தை இணையம் வழியாகச் செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.

* இடைவேளையின்போது பார்வையாளர்கள் வெளியே செல்வதைத் தடுக்க முயற்சி செய்யவேண்டும்.

* பார்வையாளர்கள் எச்சில் துப்ப அனுமதிக்கக் கூடாது.

* திரையரங்கில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே விற்கவேண்டும்.

* பார்வையாளர்களின் தொடர்பு எண்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

* ஏ.சி. அளவை 24 முதல் 30 டிகிரி வரை கடைபிடிக்க வேண்டும்.

* கரோனா விழிப்புணர்வு விடியோக்களை திரையரங்கில் ஒளிபரப்ப வேண்டும்.

* ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் திரையரங்கைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.