நிழல் தாதாக்களின் கதைதான் இந்த பொதுநலன் கருதி திரைப்படம்!

AVR Productions சார்பில் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பொது நலன் கருதி’. இத்திரைப்படத்தில் கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித் மூவரும் நாயகர்களாக நடித்திருக்கின்றனர். சுபிக்சா, அனு சித்தாரா, லிசா மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், இமான் அண்ணாச்சி, ‘பில்லா’ பட வில்லன் யோக் ஜோபி, ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘சுப்ரமணியபுரம்’ ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஹரி கணேஷ், ஒளிப்பதிவு – சுவாமிநாதன், கலை இயக்கம் – கோபி ஆனந்த், இணை தயாரிப்பு – விஜய் ஆனந்த், எழுத்து, இயக்கம் – சீயோன்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் சீயோன், “பணக்கார வர்க்கத்துக்கும், நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்துக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.

சூழ்நிலை கைதிகளாய் மாறி தங்களது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்கும் சில அப்பாவி இளைஞர்களின் கதைதான் இத்திரைப்படம்.

‘இல்லாதவனே பொல்லாதவனாம் ஊரிலே’ என்று சொல்வதுபோல சகல துறைகளிலும் பந்தாடப்படும் நடுத்தர வர்க்கம், எதையாவது செய்து முன்னுக்கு வர முடியாதா.. என்று துடிக்கும் இளைஞர்கள் பலர் எதையும் செய்யத் துணியும் ஆக்டோபஸ் பண முதலை களிடத்தில் சிக்கி தங்களது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிக் கொள்வதுதான் படத்தின் திரைக்கதை.

பணம் படைத்த பலரும் பணற்றவர்களிடம் செலுத்தும் அதிகாரமே கந்து வட்டி பிரச்சினை. இந்த கந்து வட்டியால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றன. பல குடும்பங்கள் திக்கற்று திசை தெரியாமல் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு முன்பாக பாளையங்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து-சுப்புலட்சுமி தம்பதிகள் கந்து வட்டி கொடுமையால் தங்களது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது. இதன் பின்னணியில் உள்ள நிழல் தாதாக்களின் கதைதான் இந்த பொதுநலன் கருதி திரைப்படம்.

இத்திரைப்படம் வெளிவரும்போது எனக்கு பல அச்சுறுத்தல்கள் வரும். ஆனாலும் உண்மையைச் சொல்ல பயப்பட தேவையில்லை என்பதால்தான் துணிச்சலுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்..” என்கிறார் இயக்குநர் சீயோன்.