எம்.ஜி.ஆரின் வரலாற்றில் நம்ம பி.ஆர்.ஓ யூனியன் இடம் பிடித்து விட்டது!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போட்டுக் கொடுத்த அடிளத்தின் மீது ஆட்சி செய்து கொண்டிருக்கிற தமிழக அரசு செய்திருக்க வேண்டிய, தென்னிந்திய நடிகர் சங்கம் செய்திருக்க வேண்டிய, எம்.ஜி.ஆரை தெய்வமாக வணங்குகிற அவரது ரசிகர்கள் இணைந்து செய்திருக்க வேண்டிய மகத்தான காரியத்தை செய்து முடித்திருக்கிறது  சினிமா பி.ஆர்.ஓ.க்களான தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர் யூனியன்’.

தன் உறுப்பினர்களுக்கான நலன், சங்கத்தின் வசதியை பெருக்குதல் என்பதை தாண்டி ‘மக்கள் தொடர்பாளர்’ என்ற புதிய தொழில்முறையை உருவாக்கியர் என்பதற்கான நன்றிக் கடனுக்காகவும். தமிழ் சினிமாவில் எவராலும் வெல்ல முடியாத ஆளுமை என்பதாலும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி முடித்திருக்கிறது பி.ஆர்.ஓ யூனியன்.
எம்.ஜி.ஆருடன் நடித்தவர்கள், அவருக்காக எழுதியவர்கள், பாடியவர்கள், மேக் அப் போட்டவர்கள், இசை அமைத்தவர்கள், அவருடன் ஏதோ ஒரு வகையில் பணியாற்றிவர்கள் என 60க்கும் மேற்பட்டவர்களை ஒரே மேடையில் ஏற்றி கவுரப்படுத்தியது. இனி எந்தவொரு சங்கத்தாலும் செய்ய முடியாத மகத்தான சாதனை இது. அன்று மேடை ஏறியவர்கள் அனைவருமே தங்கள் வாழ்நாளின் இறுதி பகுதியை மலரும் நினைவுகளோடு கடந்து கொண்டிருப்பவர்கள்.

அவர்கள் முகத்தில்தான் எத்தனை புன்னகை, எத்தனை பெருமிதம், எத்தனை கொண்டாட்டம், ஜமுனா சின்ன குழந்தைபோல ஆடியபடி மேடையில் ஏறுவதும், இறங்குவதுமான காட்சி, மேடையில் ஏற முடியாதவர்களுக்கு விழா அழைப்பாளர்கள் அவர்கள் இருந்த இடத்துக்கே வந்து விருது வழங்கிய காட்சி. 70 வயதை தாண்டிய பிறகும் இன்னும் தங்களை இளமையாக வைத்துக் கொண்டிருக்கிற ஹீரோயின்கள், விருதாக கிடைத்த தங்க நிற எம்.ஜி.ஆர் சிலையை மார்போடு அணைத்து முத்தமிட்டது என அன்று காணக்கிடைக்காத அபூர்வ காட்சிகள் நிறைய. இனி இப்படி ஒரு நிகழ்வை பி.ஆர்.ஓ யூனியனே நினைத்தாலும் நடத்திக் காட்ட முடியாது என்பதுதான் உண்மை.

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர்கள் என்ற முறையில் விஷால் கலந்து கொண்டதும், அரசியலுக்கு அப்பாற்பட்டு உடல்நலம் சரியில்லாத நிலையிலும் விஜயகாந்த் கலந்து கொண்டதும். எம்.ஜி.ஆரின் பக்தன் என்ற வகையில் சத்யராஜ் கலந்து கொண்டதும் விழாவின்   ஹைலைட்டான விஷயம். விழாவின் சூத்திரதாரியான யூனியன் தலைவர் டைமண்ட் பாபு மேடை ஏறாமல் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றது பண்பாட்டின் சிகரம்.

இத்தனை மகா கலைஞர்களை ஒரு இடத்தில் இணைத்துவிட்டு அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. கலந்து கொண்ட கலைஞர்களை பற்றிய ஒரு சின்ன வீடியோ ஒளிபரப்பியிருக்கலாம் ஒவ்வொரு கலைஞர்களையும் தனித்தனியாக மேடை ஏற்றி அவரின் சிறப்புகளை கூறி அவர்களையும் பேச சொல்லியிருந்தால் விழா இன்னும் சிறப்பாக அமைந்திருக்குமோ என்று கருதுகிறேன். ஒருவேளை பட்ஜெட்டும், நேரமும் இதற்கு இடம்தராமல் போயிருக்கலாம்.

இன்னும் அதிகமான குறிப்பாக இளம் தலைமுறை நட்சத்திரங்கள் அதிக அளவில் கலந்து கொண்டிருக்கலாம். வழக்கமாக ஒரு சிறிய பிரஸ்மீட்டுக்கே அரங்கை நிறைக்கும் பத்திரிக்கையாளர்களை அன்று காணமுடியவில்லையே ஏன்?. மீடியாக்களும் அதிக முக்கியத்தும் தரவில்லையே ஏன்? இந்த கேள்விகள் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

என்றாலும் ‘2018 ஜனவரி 3ந்தேதி’ தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க வரலாற்றில் மட்டுமல்ல எம்.ஜி.ஆரின் வரலாற்றிலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். இப்படி ஒரு நிகழ்வை நடத்திக் காட்டியதற்காக பி.ஆர்.ஓ யூனியன் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

மீரான்