ஊழலில் பீஹாரை மிஞ்சியது தமிழகம் – கமல் காட்டம்!

நாடு முழுவதும் ஜூலை 1 -ம் தேதி முதல் மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரண்டுமே அமலில் உள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பு முறையை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.மத்திய மற்றும் மாநில அரசின் இந்த வரிவிதிப்புக்கு தமிழ்த் திரையுலகரினர் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது. இப்பிரச்சினையைப் பொறுத்தவரை, பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். அதேவேளையில், சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.

தமிழ்நாட்டைத் தவிர பிற அண்டை மாநிலங்கள் ஜிஎஸ்டி-யை கருத்தில் கொண்டு சினிமாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்கு விலக்களித்துள்ளன. கேரள திரைத்துறையினர், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் வரிவிதிப்பு குறித்து வேண்டுகோள் விடுத்தபோது, அவர் உடனடியாக திரைப்படத் துறைக்கு இனி எந்த வரியும் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய அரசுகளும் திரைத்துறைக்கு பல்வேறு சலுகைகளை செய்து தந்துள்ளன.

தமிழகம் ஊழலில் பீஹாரையே விஞ்சிவிட்டது. தமிழகத்தில் நிலவும் ஊழலில் திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கிக் கொண்டுள்ளன. இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன்” இவ்வாறு கமல் தெரிவித்தார்.