கலைமாமணி விருது வழங்கும் விழா -துளிகள்!

0
434

இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது வழங்கும் விழா நேற்று (ஆகஸ்ட் 13) மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திரைப்படம், கலை, இலக்கியம், நாடகம், இசை உள்ளிட்ட துறைகளில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்குத் தமிழக அரசினால் ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் கலைமாமணி விருது 1954ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது. 2011 முதல் கடந்த எட்டு ஆண்டுகளாக கலைமாமணி விருது அறிவிக்கப்படவே இல்லை. இந்த நிலையில், சமீபத்தில் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.

நடிகர்களில் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரசன்னா, ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், ஸ்ரீகாந்த், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, பொன்வண்ணன், பிரபு தேவா, சரவணன், பாண்டு, சந்தானம், டி.பி.கஜேந்திரன், பி.ராஜு, ஆர்.ராஜசேகர், சிங்கமுத்து ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

நடிகைகளில் குட்டி பத்மினி, நளினி, சாரதா, காஞ்சனா தேவி, டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி, பிரியாமணி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

நடன இயக்குநர்கள் புலியூர் சரோஜா, தாரா ஆகியோரின் பெயர்களும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

பின்னணிப் பாடகர்கள் சசி ரேகா, கானா உலகநாதன், கிருஷ்ணராஜ், மாலதி, கானா பாலா, உன்னி மேனன் ஆகியோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன.

ஆடை வடிவமைப்பாளர் காசி, ஒளிப்பதிவாளர்கள் பாபு என்கிற ஆனந்த கிருஷ்ணன், ரத்தினவேலு, ரவிவர்மன் ஆகியோர் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

இயக்குநர்கள் சித்ரா லட்சுமணன், சுரேஷ் கிருஷ்ணா, பவித்ரன், ஹரி ஆகியோருக்கும், சண்டைப்பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், கலைஞானம், புகைப்படக் கலைஞர்கள் ஸ்டில்ஸ் ரவி, சேஷாத்ரி நாதன், சுகுமாரன் ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவை தவிர, கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு பாரதி விருதும், பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு விருதுக் குழுவினர் நேரில் சென்று விருதை வழங்கியுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விருது குறித்து சில அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். கலைமாமணி விருது மூன்று சவரனுக்குப் பதிலாக இனி ஐந்து சவரன், அதாவது 40 கிராம் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மூன்று சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவதாகவும் அவையும் தலா ஐந்து சவரன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

நலிந்த மூத்தக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.