மலேசியா- நட்சத்திர விழாவில் ரஜினி & கமல் பேச்சு முழு விபரம்!

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நேற்று தமிழ்த் திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மலேசியாவில் உள்ள புக்கிஜாலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களின் நடனம், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி உள்ளிட்டவை நடந்தன. கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் ஸ்டேடியத்துக்குள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச முடிவை அறிவித்த பிறகு கமல்ஹாசனு டன் இணைந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

முன்னதாக  தமிழ் நாடு மற்றும் மலேசியா இசை ஒலிக்கபட்டது. பின் 6அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அணி கேப்டன்கள் விலை உயர்ந்த மோட்டார் பைக்கில் பின்னால் நின்று கொண்டு மைதானத்தை சுற்றி வந்தனர். இறுதிப்போட்டிக்கு சிவா அணியும் சூர்யா அணியும் தேர்வாகின. சிவாவின் திருச்சி டைகர் அணி கோப்பையை வென்றது.இதன் பின்னர் ரஜினி யிடம் விவேக் கேட்ட கேள்விகளுக்கு பதிலை அளித்தார் நடிகர் & நாளைய அரசியல்வாதி ரஜினி.

🎯முதலில் நடிகை லதா 3 கேள்விகளை ரஜினி முன் வைத்தார்

70 களில் இருந்து உங்களை பார்த்து கொண்டு இருக்கிறேன் நினைத்ததை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர் நீங்கள். இவ்வளவு பேர் புகழ்கிடைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும் எளிமையின் காரணம் என்ன?

எப்படினு எனக்கே தெரியலிங்க என்றார்

இந்த கேள்வியை தப்பாக எடுத்துக்க கூடாது. டீன் ஏஜில் காதலித்த அனுபவம் உண்டா?

எஸ். ஹை ஸ்கூல் படிக்கும் போது ஒரு லவ் வந்தது.முதல் காதல் எப்பவுமே மறக்க முடியாது. பர்ஸ்ட் லவ் நிறைய பேருக்கு இருக்கும். அதில் நிறைய பேர் வெற்றி அடைந்து இருக்காங்க நிறைய பேர் தோல்வி அடைந்து இருக்காங்க..அந்த காதலில் நானும் தோல்வி அடைந்து இருக்கேன். என்றார்

அவங்க பேர் நினைவு இருக்கா?

நினைவு இல்லாமல் இருக்குமா. மன்னிக்கவும் சாரி என்று சொல்லி முடித்தார்.

அடுத்து விவேக் சில கேள்விகளை ரஜினி முன் வைத்தார் கஷ்டமான கேள்விகள் வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொண்டார் ரஜினி.

பைரவி டு இந்திரன் , சிவாஜிராவ் டு ரஜினிகாந்த், நடிகர் டு தலைவர் இந்த பயணம் பற்றி?

என்45 வருட சினிமா பயணத்தில் என்னால் முடிந்த அளவு என் படங்களில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லி இருக்கிறேன்

நீங்கள் இப்போது நடந்து வரும்போது ஆடியன்ஸ் வெறி பிடித்த மாதிரி கத்தினாங்க.கேபி சார் உங்களுக்கு நடிப்பை தூண்டினாரா இல்லை உங்களுக்குள் இருந்த ஸ்டைல் கேபி சார் மூலமாக வெளி வந்ததா?

இப்ப நான் எப்படி இருக்கேனோ எப்போதும் அப்படித்தான் இருப்பேன். நான் பஸ் கண்டக்டராக இருக்கும் போது கூட வேற பஸ்களில் அரை மணி நேரத்தில் 40 டிக்கெட்டுகள் கொடுத்தால் நான் பத்து நிமிடங்களில் அந்த டிக்கெட்டுகளை கொடுத்து விடுவேன். கர்நாடக பஸ்ஸில் நான் வேலை பார்த்த போது ஆண்கள் பஸ் பின்னால் அமருவார்கள். பெண்கள் பஸ் முன் பகுதியில் அமருவார் கள். நான் எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டு பஸ் முன் பகுதியில் தான் இருப்பேன் அப்போது தலைமுடி அதிகமாக இருக்கும்.. காதுக்கு பின் பறக்கும் முடிகளை கையால் கோதிவிட்டு speeda டிக்கெட் டிக்கெட் என்று கொடுப்பேன் இதை கேபி சார் பார்த்து இருக்கிறார்.டேய் சினிமா வுக்கு நீ போனா இந்த ஸ்டைல் புதுசு.ஜனங்களுக்கு பிடிக்கும் இதை எப்பவும் மாற்றாதே என்று அட்வைஸ் பண்ணார். அதை நான் அப்படியே மெயின்டெயின் பண்றேன்.

உங்களுடைய குறைந்த பட்ச ஆசை என்ன? அதிக பட்ச ஆசை என்ன?

குறைந்த பட்சம் ஒரு ஸ்கூட்டர் வாங்கணும் 2 பெட்ரூம் உள்ள அபார்ட் மென்ட் வாங்கணும் ஒரு டீசன்ட் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ ஆசை.. அதிகபட்சம்னா என்னை வாழ வைத்த தமிழ் மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான்

எப்ப நீங்க ரொம்ப ஜாலியாக இருந்திங்க எப்ப நீங்க ரொம்ப மனசு வருத்தபட்டிங்க?

படம் ஹிட் ஆனால் ஜாலியா சந்தோஷமாக இருந்திருக்கேன். படம் சரியாக போகவில்லை என்றால் வருத்தப்பட்டு இருக்கேன். நிறைய சந்தோஷபட்டு இருக்கேன்.. வாழ்க்கையில் நிறைய கண்ணீர் விட்டு இருக்கேன்..

 பல தலைமுறைகள் தாண்டியும் ரசிகர்கள் உங்களுக்கு இருக்காங்க.. அந்த ரசிகர்களுக்காக அந்த பட்டர் பிட்டர் வசனங்களை பேசி காட்ட முடியுமா?

சாரி மறந்து விட்டேன்..

பொது வாழ்க்கைக்கு வரும் போது குடும்பம் சுகமா? சுமையா?

பொதுவாக சொல்லி விட முடியாது. தனி தனி நபர் வாழ்க்கையை பொறுத்தது

கட்டம் சரியில்லை (ஜோதிடம்)என்று சும்மா இருக்கனுமா இல்லை முயற்சி பண்ணி பார்ப்போமே என்று உழைக்கணுமா?

ஜோதிடம் புராண காலத்தில் இருந்தே இருக்கிறது. அதையார் சொல்றாங்க என்பது முக்கியம். அதற்காக ஜோதிடத்தை கேட்டுக் கொண்டு சும்மா உட்கார முடியாது .என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும் .என்ன கிடைக்குமோ அது கிடைக்கதான் போகும். கிடைக்கிறது கிடைக்காமல் போகாது. . ஆண்டவர் கொடுத்த தொழிலில் நாம் நாணயமா நேர்மையா செய்திட்டு இருந்தால் எல்லாமே நமக்கு கிடைக்கும்

96 இல் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது (அரசியல்) அதை தவற விட்டதாக நினைத்தது உண்டா?

ஒரு செகண்ட் கூட வருத்தப்பட்டது கிடையாது..

.முதல் முறையாக மலேசியா பயணம் செய்தது பற்றி?

1977 நினைத்தாலே இனிக்கும் படபிடிப்புக்கு நானும் கமலும் வந்திருக்கோம். எனக்கு அதுதான் முதல் முறை. அப்போது கமல் பெரிய நடிகர். நான் அப்போது தான் சினிமாவுக்கு வந்தேன். கமலை அழைத்து செல்ல தனி கார் வரும் ஆனால் ரஜினி எங்கே என்று கேட்டு என்னையும் அழைத்துசெல்வார். அரவணைத்து என்னை பக்கத்தில் வைத்துக் கொண்டார். சூட்டிங் முடிநத அன்று நானும் கமலும் இரவுகளில் மலேசியா வில் ஜாலியா என்ஜாய் பண்ணிருக்கோம். காலை நான்கு மணிக்கு வந்து தூங்குவோம். கேபி சார் வருவாங்க. என்னஇந்த பசங்க இப்படி பன்றாங்க என்று .அப்படியே பேசிட்டு போய்டுவாங்க. கமலும் நானும் இதை மறக்கவே மாட்டோம். அருமையான எக்ஸ்பீரியன்ஸ்

வாழ்வின் நிறைவில் நீங்கள் என்னவாக நினைவு கூறப்பட விரும்புகிறீர்கள்?

ஒரு நடிகனாக வந்தேன் மகிழ்வித்தேன் நடிகனாக போய்ட்டேன் என்று என் வாழ்க்கை முடிந்து விட கூடாது என நினைக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக உலக ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தாய் தந்தை குடும்பம் ரொம்ப முக்கியம். அவங்க தான் தெய்வங்கள். முதலில் நீங்கள் அதை செய்தால் உங்கள் பின்னால் எல்லாமே வரும். முக்கிய மாக இளைஞர்கள் தாய் தந்தை யை வணங்குங்கள். அவர்களை சந்தோஷ படுத்துங்கள் அவர்களை சந்தோஷ படுத்தினால் போதும்..ஆண்டவர் உங்களை சந்தோஷ படுத்துவார் என்று ரஜினி பேசி முடித்தார்.

இதையடுத்து கமல், நடிகர் விவேக்கின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். கமல் அளித்த சுவாரஸ்ய பதில்கள் வருமாறு…

களத்தூர் கண்ணம்மா கமல் – காதல் நாயகன் கமல் – களமிறங்கி கருத்து சொல்லும் கமல் இதைப்பற்றி சொல்லுங்க?

களத்தூர் கண்ணம்மா – சொன்னதை சொல்லும் கிளி. அது ஒரு குழந்தை. அதன்பின்னர் காதல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதிலும் கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்துவிட்டேன். மற்றபடி களமிறங்கும் கமல், அது என் குரல், உங்கள் குரல். என்னை பேச வைத்து கொண்டிருக்கும் குரல் எல்லாம் மக்களின் குரல் தான்.

வயது கூட கூட எங்காவது ஆன்மிகம் எட்டி பார்க்கிறதா?

நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் தான் பார்த்து கொள்வேன். இப்போது அப்படி தான் வயது கூட கூட ஞானமும், அனுபவமும், அறிவும் கூடும், அதை பகுத்தறியும் திறனும் கூடியே தீரும்.

உங்களின் ட்விட்டர் தமிழ் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சொல்ல வேண்டியதை அழுத்தி சொல்ல வேண்டும். சில விஷயங்களை பொத்தாம் பொதுவாக பேசும்போது அது கெட்டவார்த்தை போன்று தோன்றும். அதை தவிர்க்கவே சில நல்ல தமிழ் சொற்களை உபயோகிக்கிறேன். அது சில தமிழ் அறிஞர்களுக்கு புரிந்து விடாமல் போய்கிறது. அதுவும் நல்லதே.

நடனம், இசை, நடிப்பு, இயக்கம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் அறிந்தவர். உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா?

தேவை என்பது மனிதனுக்கு எல்லையில்லா ஒரு விஷயம். இது போதும் என்று நினைத்துவிட்டால் அவன் ஞானி ஆகிவிடுவான். எனக்கு எது தேவை என்பதே தெரியாமல் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எனக்கான தகுதி என்ன என்பதை ரசிகர்களின் கரகோஷம் தான் உணர்த்துகிறது. அதை நான் பெற்றுவிட்டேனா என்பது தெரியவில்லை. அதற்கான முயற்சியில் தொடர்ந்து கொண்டே இருப்பேன். அதில் வெற்றி கிடைக்காமலும் போகலாம்.

உங்களின் எந்த படத்தின் வசனத்தை இப்போது பேச சொன்னால் பேசுவீர்கள்?

என் போன்ற கலைஞர்கள் எல்லாம் நடிகர் சிவாஜியின் வனசத்தை பேசி தமிழை புரிந்து கொண்டவர்கள். அப்படிப்பட்ட சிவாஜி, நான் எழுதிய வசனத்தை தேவர்மகன் படத்தில் பேசினார். இதை விட என்ன ஒரு பெருமை இருக்க முடியும்.

மற்றவர்கள் கட்டை விரலை கூட தூக்க பயந்த நேரத்தில் நீங்கள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கினீர்கள் இந்த பயணம் தொடருமா?

இந்த பயணம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல, கனுகால் கூட நனையாமல் இருக்க வேண்டும் என்று தான் இருந்தேன். ஆனால் சென்னையில் எப்படி வௌ்ளம் தாக்கி, தண்ணீரில் மூழ்கடித்ததோ… அதுபோல் இந்த சமூக அவலம் தாக்கி எங்களை கழுத்தளவு தண்ணீரில் தள்ளி உள்ளது. எங்களை சுற்றி அழுக்கான சில அசுத்தங்கள் சூழ்ந்து கொண்டுள்ளன. அதிலிருந்து மேம்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இது தனி மனித ஒருவனால் செய்ய முடியாது, அதற்கு தமிழர்களாகிய நீங்களும் இணைந்து செயலாற்றுவோம்.

உங்களின் முதல் மலேசிய அனுபவம் பற்றி சொல்லுங்க?

ரஜினி சொன்னது போன்று எங்களின் இரண்டாவது வீடு என்று சொல்லும் அளவுக்கு இந்த மலேசியா உள்ளது. மறக்க முடியாத முதல் பயண அனுபவம் நிறைய இருக்கிறது.

சோதனைகள் நிறைய வந்தபோது ஜோசியம், ஜாதகம் பக்கம் போயிருக்கிறீர்களா?

எங்க அம்மா நிறைய ஜோசியம் பார்ப்பார்கள். ஆனால் அதை பொய்யாக்கி இருக்கிறேன். அதை எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

வாழ்வின் நிறைவில் நீங்கள் எவ்வாறு நினைவு கூறப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இருந்தான், வந்தான், சென்றான் என்றில்லாமல் இருக்கிறான் என்ற நிலையில் நிறைவு கொள்ள விரும்புகிறேன்.

மலேசிய மற்றும் உங்கள் ரசிகர்கள் சொல்ல விரும்புவது?

உலகத்தின் மை(ம)ய்யம் நீங்கள் எல்லாம். அதிலும் நானும் உண்டு. அதை மறந்து விடாதீர்கள். நீங்கள் தேட வேண்டியது, தலைமையை அல்ல திறமையை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.