நான் முதலில் ரசிகன்!- ஒன் ஹார்ட் படைப்பாளி ஏ. ஆர். ரகுமான் ஓப்பன் டாக்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ரோஜாவில் தொடங்கிய இவரது இசைப்பயணம் 2 ஆஸ்கர்கள் மற்றும் கிராமி விருது என சென்று தற்போது ஒன் ஹார்ட்: தி ஏ.ஆர்.ரகுமான் கான்செர்ட் படம் வரை சென்று கொண்டே இருக்கிறது. அவரின் லேட்டஸ்ட் ரிலீஸ் ஒன் ஹார்ட் ’. நம் சினிமா ரசிகர்கள் எப்போதும், புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்காகவே கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட்’ படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஏ.ஆர் ரகுமான். அதாவது ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படமே தான் கான்சர்ட் ஃபிலிம். ஹாலிவுட்டில் இதற்கு முன் ஏராளமான இசைக் கலைஞர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை முன் வைத்து இது போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அவரை வைத்து உருவாக்கப்பட்ட திஸ் இஸ் இட் (This is it) என்ற கான்சர்ட் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் இது போன்ற முன்னணி இசைக் கலைஞராக புகழ்பெற்று திகழும் ஏ.ஆர். ரஹ்மானை முன்னிறுத்தி உருவான கான்சர்ட் ஃபிலிம் தான் ஒன் ஹார்ட்.

ஏ ஆர் ரஹ்மான், அமெரிக்காவில் மேற்கொண்டஇசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இசைப்பயணத்தின் போது பதினாறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பதினாறு இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து ஒரே படமாக உருவாக்குவதின் முதல் முயற்சி தான் ஒன் ஹார்ட். இந்த படத்திற்கான ஒலிக் கலவை முழுவதும் டால்பி அட்மாசில் பதிவு செய்திருக்கிறார்கள். இதைக் கேட்ட டால்பி நிறுவனம், தாமே முன்வந்து இப்படத்திற்கு விளம்பரதாரராகியிருக்கிறது. அத்துடன் இப்படத்தின் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலியின் தரத்தையும் உலகளாவிய அளவில் பாராட்டி அங்கீகரித்திருக்கிறது.இப்படத்தை கனடாவில் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டபோது ஏராளமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்திருக்கிறது. இந்த ஒன்ஹார்ட் படத்தில் பதினாறு பாடல்கள் இருந்தாலும் தமிழ் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. இத்தகைய சிறப்பைப் பெற்ற ஒன் ஹார்ட் படம் உலகமெங்கும் விரைவில் வெளியான நிலையில் இந்தியாவில் வரும் 8ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தபடம் குறித்தும் தனது இசைப்பயணம் குறித்தும் ரகுமான் அளித்த பேட்டியின் சாராம்சம் இதோ:

ஒன் ஹார்ட் கான்செர்ட் எதை பற்றிய படம்?

இது ஒரு கான்செர்ட்(இசை நிகழ்ச்சி) படம். நான் என்னை திரையில் பார்க்க விரும்ப மாட்டேன். ஆனால் நாங்கள் 2 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் 14 நகரங்களில் லைவ் இசை நிகழ்ச்சி நடத்தினோம். இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்று தோன்றியது. எனவே அனைத்தையும் ரெக்கார்ட் செய்தோம். அந்த வீடியோக்களை எடிட் செய்த போது முழு நீல திரைப்படம் போன்று இருந்தது. அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் தமிழ் பாடல்கள் தான் பாடினோம். எனவே இதனை வெளியிட முடிவு செய்தோம். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் நிதியை இசை கலைஞர்களுக்கு உதவி வரும் ஒன்ஹார்ட் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.

இது தமிழில் வரும் முதல் கான்செர்ட் படமா?

ஆமாம் என்று தான் நினைக்கிறேன். மைக்கெல் ஜாக்சனின் திஸ் இஸ் இட் வாஸ் மேட் இதே போன்று உருவானது தான். இது போன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சில சிறு இசைக்குழுக்கள் முயற்சி செய்துள்ளனர். இதனை பார்வையாளர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது புதிய முயற்சியாக இருக்கும். இந்தபடத்தில் இசை தான் மொழி. அதனை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

இது போன்ற ஒரு முயற்சியை செய்ய ஏன் உங்களுக்கு 25 வருடங்களானது?

இசை பெருங்கடல் போன்றது. நான் அதில் தான் இருக்கிறேன். பார்வையாளர்களுக்கு ஏற்றார் போல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். எனவே தற்போது இந்த முயற்சி என்னை இன்னும் வழி நடத்தும் என்று நினைத்தேன்.

இப்போதெல்லாம் இன்டிபெண்டன்ட் இசையில் ஆர்வம் காட்டுகிறீர்களே?

நான் இப்போது இசைத்துறையில் எங்கு இருக்கிறேன் என்று பார்க்க நினைத்தேன். இசையை ரசிப்பவர்கள் என்னை எப்போதும் முதல் 3 இடத்திலேயே வைக்கின்றனர். ஆனால் நடிகர், நடிகை, இயக்குநர், தயாரிப்பாளருக்கு பிறகு தான் இசையமைப்பாளர்கள் வருகிறார்கள். நான் சங்கர், மணி ரத்னம், இம்தியாஸ் அலி போன்றோருடன் வேலை செய்யும் போது அவர்கள் சொல்வதை தான் நான் செய்ய முடியும். இந்நிலையில் நான் வேறு மாதிரியான முயற்சியை செய்வதற்கு இன்டிபெண்டன்ட் இசைதான் உதவுகிறது. இதற்காகவே நான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி விட்டேன்.

ரகுமான் படம் இயக்குவாரா?

என்னால் ஒரு பாடலை ஒரு மணி நேரத்திலோ அல்லது ஒரு வாரத்திலோ உருவாக்கிவிட முடியும். ஆனால் படம் இயக்குவது வேறு. இதற்கு நிறையவே நேரம் வேண்டும். தற்போது நான் 99 என்னும் படம் ஒன்றை தயாரிக்கிறேன். இது இசை பற்றிய படம். இது முழு நீல கமர்ஷியல் படமாக இருக்கும்.

பல இளம் இசையமைப்பாளர்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் தங்களை இன்றும் வெற்றிகரமாக வைத்திருப்பது எது?

என்னுடைய ஆர்வம்தான் என்னை வழிநடத்துகிறது. மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். நான் ஹார்ட் அறக்கட்டளையை தொடங்கியது என்னை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லத்தான். இது கிராமி, அகெடமி விருதுகள் போன்று எதிர்காலத்தில் உருவாகவும் வாய்பிருக்கிறது.

நீங்கள் ஒரு சாதனையை செய்து விட்டு அதனை நீங்களே முறியடிக்கிறீர்களே அதெப்படி தங்களுக்கு சாத்தியமாகிறது?

நான் முதலில் ரசிகனாக இருக்கிறேன். என்னுடைய வேலை எனக்கு பிடிக்கவில்லை என்றால் நிச்சயமாக மற்றவர்களுக்கு பிடிக்காது. புது புது முயற்சிகளை செய்வது எனக்கு உற்சாகத்தை தருகிறது. என்னுடைய ஒலி பொறியாளர்களிடம் புதிய முயற்சிகளை செய்யுங்கள் என்றே தொடர்ந்து கூறுவேன். எனக்கு ஒன்று பிடித்திருந்து அது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கு அது பிடிக்கும் வரை காத்திருப்பேன். எனக்கு நான் தான் முதல் விமர்சகர். எனது வேலை அனைத்தும் மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை.

படங்களில் பாடல்கள் இப்போதெல்லாம் இடைவேளை போன்று ஆகிவிட்டது என்று நினைக்கிறீர்களா?

பாலிவுட்டிலும் இதே பிரச்சனை இருந்தது. ஆனால் இசை சம்பந்தமான லா லா லேண்ட் திரைபடம் தான் ஆஸ்கர் விருதினை பெற்றது. இந்த முறை மாறாது என்று நினைக்கிறேன்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு யார் என்று நினைக்கிறீர்கள்?

நான் ரோஜா படத்தில் அறிமுகமான போது நிறைய பேர் வாய்பிற்காக காத்திருந்தனர். இன்றைய சூழ்நிலையில் பல தடைகள் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி ஒருவர் இசைக்காக முழு நேரத்தை செலவிட்டால் அவர் இத்துறையில் நன்றாக வரலாம்.