என்னை நடிக்கவிடாமல் தடுப்பீர்கள்! அவ்வளவுதானே! – சிம்பு பேச்சு!.

ஜஸ்ட் நடிகனாக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். மேலும் விவேக், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. பாடல் வெளியீட்டு விழாவில் சந்தானம், சிம்பு, தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷ் பாடல் சிடியை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட தனுஷ் பேசியதாவது, “இந்த விழாவிற்கு சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே வந்தேன். நான் விழாக்களுக்கு அழைப்பு விடுத்தால் அவரும் வருவார். அவரும் நானும் நல்ல நட்புடன் தான் உள்ளோம். மற்றவர்கள் கூறுவது போல் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள் தான் பிரச்சனை உள்ளது. அவர்கள் தான் எங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். நான் இங்கு வந்தபோது சிம்புவின் ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் என் விழாக்களுக்கு அவர் வரும்பொழுது எனது ரசிகர்களும் அவருக்கு இதேபோன்ற வரவேற்பை அளிப்பார்கள். ரசிகர்கள் அப்படிதான் இருக்கவேண்டும். சிம்பு தனது ரசிகர்களுக்காக ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்களாவது நடிக்க வேண்டும். அது உங்கள் கடமை. உங்கள் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”, என தனுஷ் கூறினார்.

அதன்பின்னர் நடிகர் சிம்பு பேசுகையில், என் நண்பர் சந்தானம் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக தான் இந்த படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டேன். அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன்.கடந்த சில நாட்களாக என்னைப்பற்றி சில பிரச்சனைகள் போய்கொண்டிருக்கிறது. அவை அனைத்தும் பொய் என்று நான் சொல்லமாட்டேன். அன்மானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. அந்த விஷயத்தில் என் மீது தவறுகள் இருந்தால் அதை படம் எடுக்கும் போதோ அல்லது எடுத்து முடித்தபின்னரோ அல்லது படம் வெளியிட்ட உடனேயாவது கூறியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு படம் வெளியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆன பின்னர் அதைபற்றி யாரோ பேசுவதை வைத்து இந்த மாதிரி பண்ணிவிட்டார்கள். என் மீதும் சில தவறுகள் இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களை பற்றி பேசுவதற்கு ஒரு முறை உள்ளது, அவர்கள் செய்தது சரியல்ல. நான் நல்லவன் என்று சொல்லவில்லை. நடந்தது நடந்துவிட்டது அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அதிகபட்சமாக என்ன செய்து விடுவீர்கள். என்னை நடிக்கவிடாமல் தடுப்பீர்கள். ஆனால் என் ரசிகர்களுக்கு நான் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது. மணிரத்னம் இப்போதும் நான் படத்தில் இருக்கிறேன் என்று தான் கூறிவருகிறார். அவருக்கு என் மீது ஏன் அவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அவரும் உங்களை போல எனது ரசிகரா என்பதும் தெரியவில்லை. 20-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார். அந்த படத்தில் நடிப்பதற்காக தாம் உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இருப்பினும் அது சற்று கடினமாக இருக்கிறது. விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன்”இவ்வாறு அவர் பேசினார்.