ஹர ஹர மஹாதேவகி -க்கு ஏன் ‘ ஏ சர்டிபிகேட்’ தெரியுமா? – இயக்குநர் விளக்கம்!

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஹர ஹர மஹாதேவகி’. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, சதீஷ், பால சரவணன், ராஜேந்திரன், கருணாகரன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுரளி இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப்படம் குறித்து கேட்ட போது இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், “18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் குடும்பத்தோடு பார்ப்பது அவரவர் விருப்பம். புதுமையான ஒன்றை இப்படத்தில் முயற்சித்து  உள்ளோம். முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிந்து நடனம், ஆபாசக்காட்சிகள் போன்ற எதுவுமே இப்படத்தில் கிடையாது. நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வது தான் இப்படத்தின் கதை. இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோஷமாக பார்க்கலாம்.

இயல்பு வாழ்க்கையை படமாக்கியுள்ளதால், இப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை. இப்படத்தை பார்த்து மக்கள் கெட்டுப் போவார்கள் எனத் தோன்றவில்லை. ட்ரெய்லரை பார்த்து இரட்டை அர்த்த வசனங்கள் மிகவும் ஜாலியா இருக்கிறது என பலர் கூறினர். அப்படித்தான் படமும் இருக்கும். அதை தவிர்த்து வேறு எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது.

இதில் கவுதம் புதுமையான தொழில் ஒன்றை செய்பவராக நடித்திருக்கிறார். நிக்கி, கல்லூரி மாணவி. இரண்டு பேரும் ஒரு நாள் காலை தங்களது காதலை ப்ரேக்-அப் செய்கிறார்கள். அப்போது யாரை எல்லாம் சந்திக்கிறார்கள், அவர்களுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே கதை.

‘ஹர ஹர மஹாதேவகி’ என்ற விடுதியில் நடப்பது தான் கதை எனவே அத்தலைப்பையே படத்துக்கு வைத்தோம். தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் அனுமதி கொடுக்குமளவுக்கு படமாக்கியுள்ளோம். தணிக்கையிலும் பெண் அதிகாரிகள் பார்த்துவிட்டு நல்ல ஜாலியாக இருந்ததாக கூறினார்கள். மற்றபடி படத்தில் ஒரு கருத்தும் கிடையாது.

18 பேருக்கு பிறகு தான் கவுதம் இக்கதையை கேட்டு கார்த்திக் சாருடைய ’உள்ளத்தை அள்ளித்தா’ மாதிரி இருக்கிறது என்று கூறினார். கவுதம் கார்த்திக் உட்பட 18 நாயகர்களுக்கும் இப்படத்தின் கதையை நான் கூறியுள்ளேன். அவர்கள் அனைவருக்கும் இக்கதை பிடிக்கவில்லை என்று கூற முடியாது. ஆனால் அவர்கள் அனைவரும் வெவ்வேறு விதமான கதைகளை எதிர்பார்த்து இருந்ததால் அவர்களால் இக்கதையில் நடிக்க முடியவில்லை”இவ்வாறு சந்தோஷ் தெரிவித்துள்ளார்.