வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெறும் ஒரு படத்தின் பின்னணியில் இருப்பது அந்த படத்தின் கதை, இயக்கம், முன்னணி நடிகரின் நடிப்பு, இசை ஆகிய அம்சங்களை தாண்டி கதைக்கு தூண்களாக விளங்கும் மற்ற கதா பாத்திரங்களின் பங்களிப்பும் தான். அந்த வகையில் தற்போது திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி பெற்று , அனைவரையும் கவர்ந்து ஓடிக் கொண்டு இருக்கும் ‘அறம்’ திரைப்படத்தில் , குழிக்குள் விழுந்த குழந்தையின் தந்தையாக நடித்த ராமசந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. யார் இவர் என்று எல்லோரையும் யோசிக்க வைத்த இவர் அடிப்படையில் ஒரு உதவி இயக்குனர்.
“நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன். 17 வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்தேன். முதலில் ஒளிப்பதிவு துறையில் தான் பயில வந்தேன். ஆனால் காலம் என்னை துணை இயக்குனராக ஆக்கி விட்டது. அப்படியே சில படங்களில் சின்ன சின்ன கதா பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.அதில் வந்த தொடர்பின் வாயிலாக ‘அறம்’ இயக்குனர் கோபி நாயனாரை சந்திக்க நேர்ந்தது. ‘அறம்’ படத்தின் கதையை படிக்க சொல்லி என்னிடம் கொடுத்தார். படிக்கும் போதே நான் செய்த கதாபாத்திரம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தை நான் தான் செய்ய போகிறேன் என்பது அப்பொழுது கூட எனக்கு தெரியாது.
கோபி சாரின் தெளிவு, சமூக பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவை அறத்துக்கு உரம். ஒரு சின்ன கதாபாத்திரத்திடம் கூட படைப்பு ரீதியாக படத்துக்கு பங்களிக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர் அவர். எனக்கு இவ்வளவு பெயர் வர காரணமாக இருந்த இந்த கதா பாத்திரத்தை தந்த அவருக்கு நான் வாழ் நாள் முழுக்க கடமை பட்டு இருக்கிறேன்.
நயன்தாரா மேடம் மிகவும் எளிமையானவர். இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட எல்லோரிடமும் சகஜமாக பழகினார் எங்களை ஊக்குவிக்கவும் செய்தார். தயாரிப்பாளர் ராஜேஷ் எல்லோரையும் ஒரே மாதிரிதான் கவனித்தார். அவரது உபசரிப்பு எங்களை நெகிழ செய்தது.
படப்பிடிப்பு நடந்த இடமும், காலமும் மிக கடுமையானது. இன்று எங்கு போனாலும் எல்லோராலும் பாராட்டப்படும் இந்த கதாபாத்திரம் கிடைத்தமைக்கு நான் நிச்சயமாக கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்கிறார் ராமசந்திரன்.