அரசியலை காமெடியாக சொல்ல வருது ‘அண்ணனுக்கு ஜே’

விசாரணை ‘ படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கிற படம் ‘ஒரு நாள் கூத்து’. இப்படத்தை அடுத்து ‘அண்ணனுக்கு ஜே’ என்ற படத்தில் நடிக்கிறார் ‘அட்டகத்தி ‘ தினேஷ். வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார் இப்படத்தை இயக்குகிறார். அட்டகத்தி’ தினேஷூடன் , மகிமா நம்பியார், ராதாரவி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநராய் அறிமுகமாகிறார் ராஜ்குமார். ‘ஃபாக்ஸ் ஸ்டார்’ நிறுவனம் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.

2014ஆம் ஆண்டே படத்தின் பணிகள் தொடங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் சில காரணங்களால் பணிகள் தொடங்குவதில் காலதாமதமானது. இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, ரஞ்சித் இயக்கிய கபாலி படங்களில் நடித்தார் தினேஷ். அந்த இரண்டு படங்களிலும் இவருடைய நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. கடந்த வருடம் (2016) தொடங்கப்பட்டு பிரேக்கான ‘அண்ணனுக்கு ஜே!’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

அரசியலை விமர்சிக்கும் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இதில் ஓர் அரசியல்வாதியாக நடித்துள்ளார் தினேஷ். ஒரு சாதாரண மனிதன் எப்படி அரசியல்வாதி ஆகிறான் என்பதை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள இதில் காதல், தொழில், சிறைவாசம், அரசியல் பிரவேசம் என்று நாயகனின் வாழ்க்கை நிகழ்வுகளை காமெடியாக சொல்லும் படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அரோல் கொரேலி இசையமைப்பாளராகவும், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகவும், ஜி.பி.வெங்கடேஷ் படத் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.