
அதாவது இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த படப்பிடிப்பில் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து பெப்சி சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் உட்பட பல்வேறு திரைப்படங்களை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே தயாரிப்பாளர் சங்கம் அவுட்டோர் யூனியன் ஆதரவுடன் திரைப்பட தொழிலாளர்களுக்கான புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர் அடையாள அட்டையை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வழங்கினார். பெப்சிக்கு போட்டியாக புதிய அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெப்சி அமைப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை மட்டுமே வழங்கப்படுவதாகவும், புதிய அமைப்பு எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் அவுட்டோர் யூனியன் தலைவர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.