பாஸ்கர் ஒரு ராஸ்கல்: ஷூட்டிங் ஓவர்!

தமிழில் பிஸியாக நடித்து வரும் அமலா பால், அரவிந்த் சாமியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி விரைவில் இதன் டீசர் வெளிவருமென அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 24) தெரிவித்துள்ளார்.

நயன்தாரா-மம்மூட்டி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் பாஸ்கர் தி ராஸ்கல். இப்படத்திற்கான வரவேற்பையும், அங்கீகாரத்தையும் கணக்கில் கொண்டு மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். முக்கிய வேடத்தில் நிகேஷா பட்டேலும், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் `தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அரவிந்த் சாமி இடம்பெற்றுள்ள டீசர் அறிவிப்புக்கான போஸ்டர் பெரிதளவில் கவனத்தைப் பெற்று வரும் நிலையில், மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.