புரியாத புதிர் 294 திரையரங்குகளில் வெளியாகி இருக்குது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி, மஹிமா நம்பியார் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகி இருக்கும் படம் ‘புரியாத புதிர்’. ரெபெல் ஸ்டுடியோ உடன் இணைந்து ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் ஜே சதீஷ்குமார் படத்தை தயாரித்திருக்கிறார். பல தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தை பற்றி பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர் படக்குழுவினர். 
இயக்குனர் ராம் சாரிடம் உதவியாளராக பணி புரிந்தேன்.  2009ல் வாட்ஸாப் வருவதற்கு முன்பே இந்த கதையை எழுதி விட்டேன். 60 நாட்களில் படத்தை முடித்து விட்டோம். ஆனாலும் பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தொழிலிலும் தாமதம் என்பது தவிர்க்க முடியாதது. விஜய் சேதுபதி பெரிய ஹீரோவாக ஆவதற்கு முன்பே ஆரம்பித்ததால் அவரின் இப்போதைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி படமாக கொடுக்க முடியவில்லை. இப்போது என்னிடம் இருக்கும் கதை விஜய் சேதுபதியின் மாஸ் இமேஜுக்கு ஏற்ற மாதிரி கதை. அவர் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அவரின் இமேஜுக்கு ஏற்ற படமாக கொடுப்பேன். எனது அடுத்தடுத்த படங்களும் திரில்லர் படங்கள் தான் என்றார் அறிமுக இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.
குற்றம் 23க்கு முன்பே நான் ஒப்பந்தமாகி நடித்த படம். இந்த படத்தில் நான் கதாநாயகி இல்லை. ஆனாலும் நல்ல படம் என்பதால் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று தான் நடித்தேன். படத்தின் சஸ்பென்ஸுக்காக படம் ரிலீஸ் ஆகும் வரை நான் இந்த படத்தில் நடித்ததை வெளியில் சொல்லக் கூடாது என்று சொல்லி விட்டார் இயக்குனர். இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் படத்தின் இன்னொரு நாயகி மகிமா நம்பியார்.
2016லேயே இந்த படத்தை பார்த்து விட்டு ரெபெல் ஸ்டுடியோவிடன் இருந்து வாங்கி பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் அப்போது வெளியாகவில்லை. இதற்கிடையில் விஜய் சேதுபதி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகியதால் இப்போது ரிலீஸ் செய்திருக்கிறோம். எப்போதுமே கடைசி நேரத்தில் கணக்கு வழக்குகளை செட்டில் செய்வோம். ஆனால் எங்களிடம் எதுவும் சொல்லமலேயே பெப்சி அமைப்பினர் கோர்ட்டுக்கு போய் விட்டார்கள். நேற்று இரவு தான் எல்லா பிரச்சினைகளையும் பேசி முடித்தோம். அதன் பிறகு கிளியரன்ஸ் வாங்கி கொடுக்க கொஞ்சம் நேரம் ஆனதால் தான் ரிலீஸில் தாமதம் ஆகி, காலைக்காட்சி ரத்தானது.
நாம் தேவையில்லாத விஷயங்களை மொபைலில் இன்றும் பரப்பி வருகிறோம். அதை பற்றிய ஒரு விழிப்புணர்வு இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். புரியாத புதிர் 294 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதுவரை நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எங்களின் அடுத்த படங்களாக அண்டாவ காணோம், மம்மி, வா டீல் ஆகிய படங்களை சரியான தேதிகளில் ரிலிஸ் செய்ய திட்டமிட்டு வருகிறோம்.
தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு செய்தித்தாள் விளம்பரம் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் தான் பெப்சி ஸ்ட்ரைக் திடீரென அறிவித்து நடந்து வருகிறது. கூடிய விரைவில் அனைத்து பிரச்சினைகளும் சுமூகமாக முடியும் என்றார் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்.
படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, நடிகர்கள் அர்ஜூனன் நந்தகுமார், ஆர் ஜே ரமேஷ், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.