ஓம் புரியின் வாழ்க்கையைச் சொல்லும் படம் தயாராகவுள்ளது

இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஓம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்து பிரபலமாவர். 1980 ஆண்டு வெளியான ‘ஆக்ரோஷ்’ படத்தின் தனது அபாரமான நடிப்பால் பல்வேறு விருதுகளை வென்றார். 1982ம் ஆண்டு உருவான ‘காந்தி’ படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தவர். உலகளவில் பிரிட்டிஷ் படங்களான ‘My Son the Fanatic’, ‘East is East’, ‘The Parole officer’ உள்ளிட்டவற்றில் நடித்து அறியப்பட்டவர். அப்படங்களைத் தொடர்ந்து ‘City of Joy’, ‘The Ghost and the Darkness’ போன்ற ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், டாம் ஹாங்க்ஸ், ஜுலியா ரோபட்ஸ் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்துள்ளார்.பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் ஓம் புரி, இந்தி படங்களில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அக்‌ஷய்குமார் போன்ற நடிகர்களோடு நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் கமலோடு ‘ஹே ராம்’ படத்தில் நடித்துள்ளார். ஆக்ரோஷ், அர்த் சத்யா, சாச்சி 420 உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஓம்புரி, கடந்த ஜனவரி மாதம் காலமானர். இந்நிலையில் மறைந்த நடிகர் ஓம் புரியின் வாழ்க்கையைச் சொல்லும் படம் தயாராகவுள்ளது என அவரது மனைவி நந்திதா புரி தெரிவித்துள்ளார்.

அன்லைக்லி ஹீரோ: தி ஸ்டோரி ஆஃப் ஓம் புரி எனப் பெயரிடப்பட்ட புத்தகத்தை எழுதியுள்ள நந்திதா, அந்த புத்தகத்தின் அடிப்படையில் படத்தை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.ஓம் புரியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் 2009ல் வெளியானது. தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை அதில் குறிப்பிடதற்காக மனைவி மீது அதிருப்தியில் இருந்தார் ஓம் புரி. அப்போதிலிருந்தே இருவருக்கும் பிரச்சினை ஆரம்பித்தது.

மேலும் இது பற்றி பேசுகையில், “ஓம் புரி வேடத்தில் நடிக்க யாரும் தேர்வு செய்யப்படவில்லை. அது மிகக் கடினமும் கூட. இப்போதுதான் திரைக்கதை உருவாகி வருகிறது. புத்தகத்திலிருந்து சில பகுதிகள் படத்தில் இருக்கும். அவரது போராட்டத்தை மையப்படுத்தி கதை இருக்கும். அப்படித்தான் அவர் விரும்பினார். ஒரு பத்திரிகையாளராக நான் அவரை பேட்டி காண சென்றிருந்தேன். அவர் மிகவும் எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவர். குடும்பத்துக்காக, 6 வயதில், டீ கடையில் வேலை செய்திருக்கிறார்.

பல கடினமான சூழல்களை அவர் சந்தித்துள்ளார். திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது பட்டினியோடு இருந்திருக்கிறார். கிரிஷ் கர்னார்ட் மட்டும் இல்லையென்றால் அவரால் திரைத்துறையில் நுழைந்திருக்க முடியாது. அதில் கிடைத்த ரூ.3000த்தைக் கொண்டு கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்.பிரபல இயக்குநர் ஷ்யாம் பெனகல் என்னிடம் ஓம்புரி பற்றி சொல்லியிருக்கிறார். ஓம்புரி மும்பையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏழ்மையிலும், ஒல்லியாகவும் இருந்திருக்கிறார். மஞ்சள் காமாலை நோய் தாக்கிய போது அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா என்று கூட அவருக்கு தெரியாது. இப்படி அவர் வாழ்க்கையில் சிறு வயதிலிருந்து பிறருக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் நடந்த பல சம்பவங்கள் இருக்கின்றன.” என்று நந்திதா தெரிவித்தார்