என்னுடைய முதல் முகவரி நடிகன்தான்!- ‘யார் இவன்’ நாயகன் சச்சின் பெருமை!

தெலுங்கில் ‘பீமிலி கபடி ஜட்டு’, ‘எஸ்.எம்.எஸ்.ஷங்கரா’ ஆகிய படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட இயக்குநர் T.சத்யா இயக்கியிருக்கும் முதல் தமிழ் படம் ‘யார் இவன்’.  இப் படத்தில் அறிமுக சச்சின் நாயகனாகவும், ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ், வெண்ணிலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர். 

விளம்பர டிஸைன்ஸ் – வெங்கட், பி.ஆர்.ஓ. – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – சிவபிரசாத் குடிமிட்லா, சண்டை பயிற்சி – கனல் கண்ணன், படத் தொகுப்பு – பிரவின் புடி, ஒளிப்பதிவு – பினேந்திரா மேனன், இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – நா.முத்துக்குமார், தயாரிப்பாளர் – ரெய்னா ஜோஷி, எழுத்து, இயக்கம் – டி.சத்யா.

படத்தின் இயக்குநரான டி.சத்யா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ‘படகோட்டி’, நடிகர் திலகம் சிவாஜிகணேசன்  நடிப்பில் உருவான ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய தமிழின் மிக மூத்த இயக்குநர்களில் ஒருவரான T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரனாவார். ‘யார் இவன்’ ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சுவாரசியமான ஆக்‌ஷன் த்ரில்லர் படத்திற்கேற்ற திரைக்கதையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் டி.சத்யா பேசும்போது, “இது ஒரு கிரைம் அண்ட் திரில்லர் கலந்த திரைப்படம். கபடி விளையாட்டின் பின்னணியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். 

ஹீரோ ஒரு கபடி வீரன். கபடியை ரசிக்கும்  கோடீஸ்வரப் பெண் ஒருத்தி அவனை காதலிக்க அவளது காதலில் விழுகிறான் ஹீரோ. ஆனால் அதற்கு முன்பாகவே கதாநாயகியை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதை ஹீரோ அறிகிறான். அவளை காப்பாற்றவும் நினைக்கிறான். இதனாலேயே அவளை கல்யாணமும் செய்து கொள்கிறான்.

ஆனால் கல்யாணமான இரண்டாவது நாளே அந்தப் பெண் கொலை செய்யப்பட கொலைப் பழி ஹீரோ மீது விழுகிறது. ஹீரோயினின் கோடீஸ்வர அப்பா தன் மகளை கொலை செய்தவன் ஹீரோதான் என்று நினைத்து ஹீரோவை போலீஸில் சிக்க வைக்கிறார். ஆனால் ஹீரோவோ உண்மையான குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என்பதில் போலீஸைவிடவும் தீவிரமாக இருக்கிறார்.  

ஒரு பக்கம் போலீஸ்.. இன்னொரு பக்கம் நிஜமான கொலைகாரன்.. இவர்களுக்கிடையில் ஹீரோ இந்தப் போராட்டத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார்..? யார்தான் அந்தப் பெண்ணை கொலை செய்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

கொலைப் புதிரை விடுவிக்கும் படம்தான் என்றாலும் வித்தியாசமான திரைக்கதை, வித்தியாசமான காட்சிகளுடன் இந்தப் படத்தினை உருவாக்கியிருக்கிறோம். இது வழக்கமான திரில்லர் படம் போல இருந்தாலும், உளவியல் ரீதியாகத்தான் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். நிச்சயமாக ரசிகர்களுக்கு இதுவொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்..” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஷ், “இந்தப் படத்தின் நாயகனான சச்சின், ஒரு பெரிய பிஸினஸ்மேன். அவரைச் சுற்றி எப்போதும் ஆட்கள் இருப்பார்கள்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு கப்பலில் நடைபெற்றது. அப்போது நான், ‘கப்பல் நல்லா இருக்குல்ல சார்…’ என்று நாயகன் சச்சினிடம் சொன்னேன். அதற்கு அவர், ‘இந்த கப்பலே நம்மோடதுதான் சார்’ என்றார். அடுத்து ஒரு ஹோட்டலில் படப்பிடிப்பு நடத்தினோம். ‘இந்த ஹோட்டல் சூப்பரா இருக்கு’ என்றேன். இதற்கும் சச்சின், ‘இந்த ஹோட்டலும் நம்மளோடதுதான் சார்’ என்றார். இப்படிப்பட்ட மெகா பிஸினஸ்மேனுடன் படத்தில் நடிப்பது எனக்கு இதுதான் முதல் முறை.

இந்தப் படம் மிக பரபரப்பாக இருக்கும். பொதுவாக பல திரைப்படங்களை ‘சீட்டு நுனியில் உங்களை உட்கார வைக்கும் படம்’ன்னு சொல்வாங்க. கடைசீல பார்த்தால் சீட்டு கிழிஞ்சிருக்கும். இல்லைன்னா உக்காந்தவங்க பேண்ட் கிழிஞ்சிருக்கும். ஆனால் இதுல, அப்படி எதுவும் இல்லாமல் உண்மையிலேயே உங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் படமாக இது உருவாகியிருக்கிறது…” என்றார்.

actor sachin

கதையின் நாயகனான சச்சின் பேசும்போது, “நான் ஒரு பிரபலமான பிஸினஸ்மேன் என்று சதீஷ் சொன்னார். ஆனால் நான் என்னுடைய எட்டு வயதிலேயே படங்களில் நடித்திருக்கிறேன்.  நடிப்பு என்பது என்னுடைய ஆசை மட்டுமல்ல… நான் விரும்பும் தொழிலும்கூட. நான் செய்யும் பிஸினஸ் எல்லாம் என்னுடைய தந்தை ஆரம்பித்தது. எனவே என்னுடைய முதல் முகவரி நடிகன்தான். அடுத்ததுதான் பிஸினஸ்…” என பெருமையுடன் பேசினார்.

படம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெள்ளியன்று உலகெங்கும் வெளியாகிறது..!