தம்பி – எல்லோருக்கும் பிடிக்கும்!

தம்பி – இந்த வார்த்தைக்கென தமிழகத்தில் தனி மதிப்புண்டு. சகோதரர்களில் கடைக்குட்டியை மட்டுமே  தம்பி என்பது குறிப்பிட்டாலும் உறவு முறை இல்லாத இளையவர்களை விளிக்க உதவும் சொல்லும் இதுவே. அந்த வகையில் தமிழக அரசியலில் இந்த தம்பி என்று வார்த்தைக் கென தனி மதிப்புண்டு. அதிலும் திராவிட அரசியலில் அமோக வரவேற்பு பெற்ற இந்த தம்பி என்னும் தலைப்பில் குடும்பப் பாசத்தையும், அரசியலையும் சம அளவில் சேர்த்து போதுமான அளவு சமூக பொறுப்பு, அக்கறை, நாட்டு நடப்பு, குரோதம், மோசடி, த்ரில்லிங் போன்ற மசாலாக்களை போட்டு நான் வெஜ் சினிமா ஒன்றை ஜோதிகா & கார்த்தி மற்றும் சத்யராஜ் வழியாக வழங்கி இருக்கிறார் ஜீத்து ஜோசப்.

அரசியல்வாதியாக காலம் தள்ளும் சத்யராஜ் அவர் மனைவி சீதா. இவர்களின் மகள் ஜோதிகா. மகன் கார்த்தி. இதில் கார்த்தி ஸ்கூல் வயசிலேயே போதைக்கு அடிமையாகி, பிரச்னைக்குள்ளாகி 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விடுகிறான். அந்த சோகத்தில் கல்யாண வயசு தாண்டி யும் அது குறித்து அக்கறைக் கொள்ளாத மகளுக்காக தன் மகன் என்ற போர்வையில் மேற்படி  கார்த்தியை தங்கள் குடும்பத்துக்குள் கொண்டு வருகிறார்கள். அது ஏன்? அப்புறம் என்னாச்சு என்பது தான் இந்த தம்பி படத்தின் முழு கதை என்று மட்டும் சொல்லி விடுகிறோம்.. ஆனால் தியேட்டரில் படம் பார்க்கும் போது பல எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்து ஒரு குடும்ப கதைக்குள் இம்புட்டு திடுக் -குகளா என்று ஆச்சரியப்படுத்த வைத்து விடுகிறார்கள்..

ஹீரோ கார்த்தி அப்பாவி முகத்தை வைத்து கொண்டு அடுத்தடுத்து செய்யும் அப்பாடக்கர் வேலை களும் அதை ஒட்டி அவர் ரியாக்‌ஷனும் படத்தை காக்கிறது. இறுக்கமான முகத்துடன் பெரும்பா லான காட்சிகளில் வந்து போகிறார் அக்கா ஜோதிகா. அப்பாவாக வரும் சத்யராஜ் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியாத சீன்கள் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார். வழக்கமான அம்மாவாக வந்து போனாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் பார்வையாலேயே தன் முக்கியத்துவத்தை உணர்த்தி விடுகிறார் சீதா.

நிகிலா விமல் எடுபடவில்லை. அதே சமயம் மாஸ்டர் அஷ்வந்த், செளகார் ஜானகி சீன்கள் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம் என்று தோன்றுமளவிற்கு இருந்தது.. ஹரிஷ் பெராடி, அன்சன் பால், இளவரசு, பாலா, அம்மு அபிராமி போன்றோர் தேவையான அளவு நடிப்பை வழங்கி தம்பியின் கதை ஓட்டத்தை சீராக்கி இருக்கிறார்கள் .

கோவிந்த் வசந்தாவின் இசை பாடல்கள், பின்னணி ஓ கே. ஆர்.டி.ராஜேசேகரின் கேமரா தனிக் கவனம் பெறுகிறது. த்ரிஷ்யம் பாணியில் குடும்பக் கதைக்குள் சஸ்பென்ஸ் த்ரில்லர் எல்லா வற்றையும் சேர்க்க நினைத்து சில பல லாஜிக்-களை சட்டை செய்யாமல் நிதானமாக கூடவே ஓரளவு சுவைபட கொண்டு செல்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் இந்த தம்பி-யிடம் சில குறைகள் இருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும்

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்