ஓவியா ஃப்ரீதான் – ஆனா அவர் படங்கள் ஸ்பீடா ரெடியாகுது!

தனியார் சேனல்  ஒன்று  தன் வளர்ச்சிக்காக தயாரித்து வழங்கி  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளிவந்ததிலிருந்து அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.வி. குறைந்து விட்டதாம். அதே சமயம் ஓவியாவுக்கு அடுத்தடுத்து  பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனாலும், அவர் எந்தப் படங்களிலும் கமிட் ஆகாமல்  தவிர்த்து வருகிறார். இதனிடையே  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அவர் நடித்த படங்கள் கிடப்பில் இருந்தன. தற்போது அவர் நடித்த படங்களை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது, மலையாளத்தில் அவர் நடித்த படங்களைத் தமிழில் டப் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக அவர் நடித்த ‘மனுஷ்ய மிருகம்’ என்ற திரைப்படம் தமிழில் வெளிவரவிருக்கிறது. அப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே ‘ஓவியா ஆர்மி’ என அவரது ரசிகர்கள் எக்கச்சக்கமானோர் ஆதரவு தெரிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்பு ‘சீனி’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட படத்தை ஓவியா ரசிகர்களை ஈர்ப்பதற்காக ‘ஓவியாவ விட்டா யாரு @ சீனி’ எனப் பெயர் மாற்றி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் மலையாளப் படம் ஒன்றை டப் செய்து வருகின்றனர்.

‘மனுஷ்ய மிருகம்’ என்ற இத்திரைப்படம் ஆறு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்தது. பிருத்வி ராஜ், கிரண், ஓவியா ஆகியோர் நடித்திருந்தனர். பாபு ராஜ் இயக்கிய இப்படத்துக்கு சயன் அன்வர் இசையமைப்பாளராகவும், கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருந்தனர். இந்த நிலையில் இப்படம் தமிழில் ‘போலீஸ் ராஜ்ஜியம்’ என்ற பெயரில் டப் செய்து வெளிவரவிருக்கிறது. அன்னபூரணி மூவிஸ் சார்பில் கே.அருணாச்சலம் இப்படத்தை வெளியிடுகிறார்.

தற்போது ‘போலீஸ் ராஜ்ஜியம்’ படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்குத் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள், டப் படங்கள் என அவரது மவுசு எகிறி வருகிறது. இப்படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளது.