வேலை இல்லா பட்டதாரி 2- ல் என்ன ஸ்பெஷல்?

ரகு, ரகு என சரண்யா பொன்வண்ணன் அழைத்துக்கொண்டிருந்த வரை, நமக்கே ரகுவரன் மீது அத்தனை ஈர்ப்பு இல்லை. ‘என் முழுப் பேரு ரகுவரன்’ என தனுஷ் வில்லத்தனம் காட்டியதுதான் திருப்புமுனை. ரகுவரனுக்கு அப்பா என்றால் பயம். அம்மா மீது பாசம். தம்பி என்றால் அன்பு கலந்த வெறுப்பு என வி.ஐ.பி படத்தில் பார்த்துவிட்டு, வி.ஐ.பி-2 படத்தில் என்ன செய்திருப்பார்களோ என்ற பயம் ஏற்பட்டபோது, அதை சுக்குநூறாக உடைத்தது வி.ஐ.பி 2 டீசர்.

டீசரில் சமுத்திரக்கனிக்கு எதிரியே இல்லைன்னா வாழ்க்கையே போருடா என்ற வசனம் கொடுத்திருப்பார்கள். அதுதான் ரகுவரனின் தாரக மந்திரம். தனக்கு சமமான எதிரியை வைத்துக்கொண்டு வீழ்த்துவதைவிட, தன்னைவிட பல மடங்கு உயரத்தில் இருக்கும் எதிரியை அதற்கும் மேலே சென்று அடித்து வீழ்த்துவதுதான் வீரத்தின் அடையாளம். ஆனால், வி.ஐ.பி 2 படத்தில் அது வில்லனுக்கு(ரகுவரனுக்கு) அடையாளம்.

ரகுவரனின் எதிரியாக வரும் வசுந்தராவின் கேரக்டரை உச்சத்தில் வைத்ததிலேயே, ரகுவரனின் அடுத்த பாய்ச்சல் எத்தனைப் பெரியதாக இருக்கப்போகிறதென தெரிந்துகொள்ளலாம் . ஆனால், ரகுவரன் எனும் இரண்டாவது பயணத்தை எங்கிருந்து தொடங்குகிறார்கள் என்பது மிக முக்கியம்.

டிரெய்லரைப் பார்ப்பதற்கு முன்பு வரை, நம்மைப் பொறுத்தளவில் ரகுவரன் இப்போது மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்திருக்கவேண்டும் என்ற கணிப்பு இருந்தது. ஒரே பாடலில் பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கத் தெரிந்த தமிழ் சினிமாவில், கட்டுமானத்தொழில் நிறுவனம் என்பது மிகப்பெரிய சவால் அல்ல என்று நினைத்திருந்த சமயத்தில், என் பேர் ரகுவரன். நான் மறுபடியும் ஒரு வேலையில்லா பட்டதாரி என ரகுவரனுக்கு அறிமுகம் கொடுப்பது, இதில் புதிதாக செய்திருக்கிறார்கள் என ஏற்படும் எண்ணத்தை உருவாக்குகிறதல்லவா? அங்கிருந்து தொடங்குகிறது ரகுவரனின் இரண்டாவது வெற்றி.

வசுந்தரா கேரக்டர், கார்ப்பரேட் வேர்ல்டுங்குறது வேற. அது ஒரு அரசியல் விளையாட்டு என்று சொல்லி வி.ஐ.பி 2 படத்தை அடுத்த லெவலில் உயர்த்தி வைக்கிறது. ஒவ்வொரு பொறியியல் மாணவரும் படித்து முடித்து வேலை தேடும்போது பாதிக்கப்படும் தகுதி என்ற வார்த்தை ரகுவரனின் மிகப்பெரிய பலம். எனக்கு என்னைக்கும் ஒரு நிரந்தரமான பெயர் இருக்கு. அது வி.ஐ.பி என ரகுவரன் சொல்வதுதான் அனைத்து பொறியியல் மாணவர்களின் பிம்பமாக ரகுவரன் உயர்ந்து நிற்பது.

கட்டுமானத் தொழில் சார்ந்த திரைப்படம் என்பதால், சிவில் இஞ்சினியர்களை மட்டும் ரகுவரனுடன் சேர்க்காமல், ஒரு கட்டிடத்துக்கு எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்ய எலக்ட்ரிக்கல் இஞ்சினியர், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய கம்ப்யூட்டர் இஞ்சினியர், கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு மெக்கானிக்கல் இஞ்சினியர் என அனைத்து பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் முகமாகவே தன்னை ரகுவரன் முன்நிறுத்திக்கொள்வதுதான் மிகப்பெரிய பலம். இப்படியொரு மனநிலையில் ரகுவரனைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொறியியல் படிக்கும், படித்துமுடித்த மாணவர்களுக்கு நான் சிங்கத்துக்கு வாலா இருக்கிறதைவிட பூனைக்கு தலையா இருப்பேன் என்று ரகுவரன் வசனம் பேசும்போது கைதட்டல்களும் விசில்களும் வானில் பிரதிபலிப்பதில் ஆச்சர்யமில்லையே. இஞ்சினியரிங் மாணவர் கேரக்டர் என்றாலே படித்துவிட்டு, அரியருடன் பெண் பின்னால் சுற்றும் கேரக்டர்களையே பார்த்து வந்த தமிழக மக்களுக்கு, நல்லா படிச்சிட்டு வேலை கிடைக்காம நாங்களும் இருக்கோம் என்று உரக்கச் சொல்லும் ஊடகமாக ரகுவரன் கிடைத்திருப்பது காலத்தின் தேவையல்லவா?

எல்லாவற்றுக்கும் மேலாக, ரகுவரனின் அம்மாவின் மீதான பாசம். பொறியியல் சார்ந்து படிக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான இடைவெளி என்பது எப்போதும் அதிகமாகவே இருக்கும். அதிகப் பணத்தைக் கொடுத்திருக்கிறோம் என்பதால் பிள்ளைகளை அழுத்தும் பெற்றோர்களும், அதீத மன அழுத்தத்தால் பணம் தான் முக்கியம். பிள்ளை இல்லையா? என்று கொதிக்கும் பிள்ளைகளும் பொறியியல் உலகில் அதிகம். அதேசமயம் இதனால் ஏற்படும் இடைவெளி அவ்வப்போது நெட்டிமுறித்து பெற்றோரைப் பற்றி யோசிக்கவும் வைக்கும். அப்படிப்பட்ட பிள்ளையாக ரகுவரன் அம்மாவுக்கு லவ் யூ சொல்லி முத்தத்தை ஃபோட்டோ நோக்கி பறக்கவிடும் காட்சியைப்போல மீதமிருக்கும் பல காட்சிகளையும் பார்க்க வேலையில்லா பட்டதாரி 2 ரிலீஸாகும் ஜூலை 28 வரை காத்திருக்கவேண்டும்.