சமீபத்தில் நடைபெற்ற தனியார் இணையதளத்தின் சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார் விஜய். அப்போது இந்தியாவில் விவசாயிகளின் நிலை குறித்து கவலை தெரிவித்துப் பேசினார். தன்னுடைய பேச்சில், “அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என்றும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட. முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும், வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம்” என்று பேசினார் விஜய்.
முன்னணி நடிகர் விஜய்யின் இந்த பேச்சுக்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகளுக்காக தொடர் போராட்டங்க ளை நடத்தியவர் அய்யாக்கண்ணு என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு நன்றி தெரிவித்து அய்யாக்கண்ணு பேசிய போது, “வல்லரசாக ஆவதை விட விவசாயிக்கு நல்லரசாக வேண்டும் என்று விஜய் ஐயா சொன்னது எங்களது வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது. நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டோம்.
விஜய் ஐயாவைப் பார்த்து ஒரு சால்வை போர்த்தி நன்றி தெரிவிக்க வேண்டுமென முயற்சி செய்தோம். ஏன் என்றால் இதைப் போல யாரும் சொல்லமாட்டார்கள். விவசாயிகள் பற்றி யாரும் கண்டுக் கொள்வதே கிடையாது.
எங்களை நான்காம் தர குடிமக்களாக பார்த்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் மரியாதைக்குரிய விஜய் அவர்கள் அப்படி சொன்னதில் எங்களுக்கு மிகவும் திருப்தி. டெல்லி போராட்டத்தை முடித்து திரும்பி வரும்போது அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல முயற்சி செய்வோம்”இவ்வாறு அய்யாக்கண்ணு பேசியுள்ளார்.