சுவாதி கொலை வழக்கு பட டைட்டிலை ‘நுங்கம்பாக்கம்-முன்னு மாத்தியாச்சு!

0
344

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுவாதி கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பரபரப்பாக்கிய இந்த கொலை வழக்கை மையமாக வைத்து ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் சினிமா எடுக்கப்பட்டு, அதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது.   இதையடுத்து, இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதாசிரியர் ரவி ஆகியோருக்கு எதிராக மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தங்களை போலீசார் கைது செய்யக் கூடும் எனக் கூறி மூவரும் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி பிரகாஷ் விசாரித்து, 3 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற படத்தின் பெயர் ‘நுங்கம்பாக்கம்’ என்று மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து நிருபர்களிடம் படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறுகையில், ‘‘எங்கள் படத்தின் பெயரை ‘நுங்கம்பாக்கம்’ என்று மாற்றியுள்ளோம். படம் முழுவதும் முடிந்துவிட்டது. விரைவில் சென்சார் போர்டுக்கு அனுப்பப்படும். அதன்பின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். இந்த படத்துக்கு சுவாதி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தவறான கருத்தும் படத்தில் இடம்பெறவில்லை. அரசியல் ரீதியாகவோ, போலீஸ் தரப்பிலோ எந்த அழுத்தமும் தரப்படவில்லை. சென்சார் விதிகளின்படியே பெயரை மாற்றியிருக்கிறோம். சுவாதியின் தந்தை இனியும் எங்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுத்தால், அவர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும். இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.