புளூ ஐ புரொடக்ஷன்ஸ் சார்பில் அரங்கன்னல் ராஜூ இயக்கி தயாரித்துள்ள படம் ‘தோட்டம்’. இந்த படத்தில் சிங்கை ஜெகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக தனா மற்றும் சீன நடிகை விவியாஷான் நடிக்க, இவர்களுடன் கே.எஸ்.மணியம், ரூபன் லோகன் தியாகு, ஜீவி, அகில்வர்மன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மலேசிய நடிகர் நடிகைகள் மற்றும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியில் உருவாக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அரங்கண்ணல் ராஜ் படம் குறித்து , “ஒவ்வொரு நாடும் பொருளாதாரா முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தை கொண்டே! இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும். அங்கு விவசாய கூலி தொழிலாளிகளாக பயன்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே! அதிலும் குறிப்பாக தமிழர்களே! அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்கள் பெரும் வணிக சந்தையாகி விட்டது. தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கை மாறி விட்டது. அப்படி கைமாற இருந்த ஒரு தோட்டத்தை எப்படி போராடி மீட்கிறார்கள் என்பதை 200 வருடமாக இருந்து வந்த பிரச்சனையை இதில் அலசியிருக்கிறோம். அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ், பையனுக்கும் சீனப் பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இந்த ‘தோட்ட’த்தில் சொல்லி இருக்கிறோம்’’ என்றார்.
மலேஷியா என்றாலே நமக்கு விண்ணைத் தொட முயற்சிக்கும் கட்டிடங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அது மட்டுமல்ல மலேஷியா என்பதையும், தலைமுறை தலைமுறையாய் அங்குள்ள தோட்டங்களில் வேலை பார்க்கும் தமிழர்களின் வாழ்வையும் இந்தப்படம் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது என்றார் இயக்குநர் சீனு ராமசாமி. அன்றைய தினம் தன் மனைவியின் பிறந்த நாள் என்பதால் சில நிமிடங்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த இயக்குநர் சீனு ராமசாமி, துவக்கத்திலிருந்து முழு படத்தையும் பார்த்ததுடன், பங்கு பெற்ற கலைஞர்க ளையும் பாராட்டிவிட்டு சென்றதிலிருந்தே படம் எந்த அளவுக்கு அவரைக் கவர்ந்திருக்கும் என்பதை புரிநது கொள்ளலாம்.
மேலும் இதில் இயக்குநர்கள் , ஷக்தி சிதம்பரம், ராபர்ட் ராஜசேகர், ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், பாடலாசிரியர் யுகபாரதி, நடிகர்கள் ஆரி, அபி சரவணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசியவர்கள், நாம் திரைப்படங்களில் பெரிய பெரிய கட்டிடங்கள் உள்ள மலேசியாவை தான் பார்த்திருக்கிறோம். ஆனால், தமிழர்களின் உழைப்பால் உருவான தோட்டங்களும், அதை நம்பி வாழும் தமிழ் மக்களையும் இதுவரை பார்த்ததில்லை. இந்த படத்தில் அதை பார்க்கலாம். அந்த தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையை ரொம்ப எதார்த்தமாக இப்படம் சொல்லியிருப்பதாக, வாழ்த்தினார்கள்.