ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ராகவா லாரன்ஸ் கட்டிக் கொடுத்த வீடு!

0
329

சேலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ரயிலில் ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டிக் கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலம் அம்மாபேட்டை சத்யா நகரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி யோகேஸ்வரன், சத்திரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீது ஏறி போராட்டம் செய்தார். அப்போது ரெயிலின் மேல் பகுதியில் சென்ற மின் வயர் யோகேஸ்வரன் மீது பட்டதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் உயிரிழந்தார். அப்போது அவரது தாயாரை சந்தித்த லாரன்ஸ், தன்னை மகனாக நினைத்துக் கொள்ளும் படி கூறியிருந்தார்.

பின்னர், யோகேஸ்வரன் தாய்க்கு வீடு கட்டி கொடுக்க முடிவு செய்த லாரன்ஸ், யோகேஸ்வரன் வசித்த பகுதியில் 11 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கி அவர் 11 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டினார். யோகேஸ்வரனின் நினைவு நாளான இன்று வீட்டு பத்திரத்தை நடிகர் ராகவா லாரன்ஸ், யோகேஸ்வரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்தார். இதற்காக சேலம் வந்த லாரன்சை ஏராளமானவர்கள் திரண்டு வரவேற்றனர்.

தொடர்ந்து புதிய வீட்டிற்கான பத்திரத்தை யோகேஸ்வரன் குடும்பத்தினரிடம் லாரன்ஸ் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யோகேஸ்வரன் தாய்க்கு வீடு கட்டிக் கொடுத்தது மன நிறைவை அளிப்பதாக கூறியுள்ளார்.  மேலும் இது குறித்து ராகவா லாரன்ஸ்  தன் ட்விட்டர் பக்கத்தில் “நண்பர்களே! சென்ற ஆண்டு இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி பெற்றோம். ஆனால் போராட்டத்தின் போது யோகேஸ்வரன் என்ற இளைஞரை இழந்து விட்டோம். நான் அவனது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டபோது ஜல்லிக்கட்டு போரட்டத்தின் வெற்றி எவ்வளவு முக்கியமோ, அதே போல் யோகேஸ்வரனின் குடும்பத்தின் மகிழ்ச்சியும் முக்கியம் என்று எண்ணினேன். அப்போது அவனது அம்மாவிடம் யோகேஸ்வரன் இந்த குடும்பத்திற்கு என்ன செய்வானோ அதை நான் செய்கிறேன் என்று சத்தியம் செய்தேன். இப்போது நான் யோகேஸ்வரன் இடத்தை பூர்த்தி செய்து விட்டேன் என்று மகிழ்ச்சியில் இருக்கிறேன். இன்று அவர்களுக்காக கட்டப்பட்ட வீட்டின் கிரகபிரவேசம். ஆனால் இது உதவி அல்ல இதை என் கடமையாகவே நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.