திரைப்படங்கள் பல்வேறு விதமாக உருவாகின்றன. நிஜவாழ்க்கை, உண்மை சம்பவங்கள், பிற மொழி கதைகளின் தாக்கம், கற்பனை, புராணம். இதிகாசம் நாவல்கள், சிறுகதை எனப் பரிமாணங்களிலிருந்து கதைகள் உருவாகின்றன. ஒரு கதையை மனைவியின் பேச்சைக் கேட்டு உருவாக்கி ரிலீஸ் செய்கிறார் ஒரு நடிகர்.சியான்கள் என்ற படத்தில் ஹீரோ என்று ஸ்டார் நட்சத்திரங்கள் யாரும் கிடையாது 60 வயதை கடந்த 7 பெரிசுகளின் கதாபாத்திரங்களைச் சுற்றி படம் உருவாகி உருக்குகிறது.
சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த வைகறை பாலன் இப்படத்தை இயக்கி உள்ளார். படத்தைத் தயாரித்து டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கரிகாலன். இப்படத்தின் மீடியா சந்திப்பில் படத்தில் நடித்த சியான்கள் அதாவது பெரிசுகள் நளினி காந்த், பசுபதி ராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்ரசீனி, சக்திவேல் நாராயணசாமி, மற்றும் நடிகர் இமை ராஜ் குமார், இயக்குனர் வைகறை பாலன் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது இப்பட தயாரிப்பாளாரும் நடிகருமான கரிகாலன் கூறியதாவது: கூத்துப் பட்டறையிலிருந்து நானும் இயக்குனரும் நண்பர்கள். படம் உருவாக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை அதற்காகப் பல கதைகளைத் தேர்வு செய்தோம். என் மனைவி லில்லிகரிகாலன் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய கதை ஒன்றை என்னிடம் சொன்னார். அதை இயக்குனரிடம் சொன்னபோது வித்தியாசமாக இருக்கிறது இதையே படமாக எடுப்போம் என்று முடிவு செய்தோம். என் மனைவி சொன்ன கதை சியான்கள் என்ற பெயரில் படமாக உருவாகி ரிலீஸுக்கு வந்திருக்கிறது. அந்த படத்தைப் பார்த்த இன்னொரு பெண் மணி படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார். சிறுகுழந்தையாக இருப்பது முதல் நம்மைப் பெற்றோர் வளர்க்கின்றனர் அவர்கள் வளர்ந்த பின் தங்களை வளர்த்த பெற்றோரை புறந் தள்ளுகிறார்கள். அது கூடாது. அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. இந்த படத்துக்கு குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து பார்த்தால் முதியோர் இல்லமே காலியாகி விடும். அவ்வளவு உணர்ச்சி குவியலுண்டு!
இதில் நடித்த முதியவர்கள் எல்லோருமே இயல்பான நடிப்பை வழங்கினார்கள். தேனி பகுதியில் செங்குத்தான மலைப் பகுதியில் படப்பிடிப்பு நடந்த இந்த வயதிலும் அவர்கள் படக் குழுவினருடன் கருவிகளை சுமந்துகொண்டு மலை உச்சிக்கு வந்து நடித்துக் கொடுத்தனர், பல படங்களுக்கு பாடல்கள் எழுதிய முத்தரசன் இப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்”என்று கரிகாலன் கூறினார்.
இயக்குனர் வைகறை பாலன், “முதல் படம் நல்ல படமாகவும் அது மக்களின் மனதைத் தொடும் படமாக இருக்க வேண்டும் என்று இப்படத்தை இயக்கினேன். இதில் நடித்த பெரியவர்களுக்கு வசன பேப்பரை கொடுத்தவுடன் திரு திருவென விழிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு படப்பிடிப்பின் போது சொன்னதைப் பேசி நடித்தார்கள். இதில் நடித்த சில பெரியவர்கள் சினிமாவுக்கு புதிது என்பதால் படப் பிடிப்பு நாட்கள் கூடுதலாகி விட்டது” என்று இயக்குனர் வைகறை பாலன் கூறினார்.