‘வெங்காயம்’ படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், ‘நெடும்பா’ வெளியீட்டுக்காக படும் துயர்!

0
705

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘வெங்காயம்’. கவுரவ வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். இப்படத்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டைத் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் சங்ககிரி ராஜ்குமார் தன்னுடைய அடுத்த படமான ‘நெடும்பா’வை வெளியிட தான் அடையும் துயரங்களின் வேதனையை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஃபேஸ்புக் பதிவு:

” ‘நெடும்பா’ திரைப்படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படத்தை அவ்வளவு எளிதாக திரையிட்டு விட முடியாது. அப்படி வெளியிட்டாலும் எந்த பயனும் இருக்காது. இந்நிலையில் படம் பார்த்த சேரன் அண்ணன் ‘வெங்காயம்’ திரைப்படத்தை விட பல மடங்கு சிறந்த படம் என சிலாகித்து இதை நானே வெளியிடுகிறேன் என சொல்லி ஒப்பபந்தம் செய்திருந்த நிலையில், சில சிக்கல்களால் ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. அதன் பிறகு வேறு நிறுவனம் மூலமாக வெளியிடலாம் என அவர் முயற்சித்த போது உயர்மதிப்பு நோட்டு பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளால் தொடர்ச்சியாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதற்காக காத்திருந்த நாட்களை ‘ஒன்’ படத்திற்காக செலவிட்டு சரி செய்து கொண்டிருந்தேன்.

‘நெடும்பா’ படத்திற்கான உழைப்பு மிகக் கடுமையானது. 500 ஆண்டுகளாக வெளியுலக மக்களைப் பார்க்காத ஒரு இனம் பற்றிய கதை. தென்னிந்தியாவிலுள்ள பெரும்பாலான மலை கிராமங்களுக்கு பயணித்து, ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை சந்தித்து அவர்களது அனுபவங்களைக் கேட்டு எழுதப்பட்ட கதை, திரைக்கதை. பல வேற்று மொழிப் படங்களையும் பார்த்தோம். எதற்கென்றால், எந்த இடத்திலும் மற்ற படங்களின் சாயல் எதேச்சையாக கூட வந்துவிடக் கூடாது என்பதற்காக..கிட்டத்தட்ட 300 பேரின் கடின உழைப்பு.

இந்த தாமதத்திற்க்கான முழு காரணம் நான் தான், ஒரு தயாரிப்பாளராக இருப்பதற்கு எந்த வித தகுதியும் இல்லாத நான் இதை தயாரித்திருக்கக் கூடாது. கருத்து,கதையமைப்பு,காட்சியமைப்பு என சிந்தித்துக் கொண்டிருந்த என்னை கடன், வட்டி, தவணை என சிந்திக்க வைத்து சிதைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் படம். இது நான் தயாரிக்கும் கடைசிப் படம். யாராவது என்னைக் கடத்திக் கொண்டு போய் வைத்து என் உடல் முழுக்க வெடிகுண்டைச் சுற்றி வைத்து அதன் ரிமோட்டை கையில் வைத்து கொண்டு ,அடுத்த படமும் உன் சொந்த தயாரிப்பில் தான் செய்ய வேண்டும் இல்லையென்றால் பட்டனை அமுக்கி விடுவேன் என்று சொன்னால், அந்த ரிமோட்டை பிடுங்கி நானே அமுக்கிக்கொண்டு செத்து விடுவேன்.

இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான ஒரு படத்திற்கு சேலம் ஏரியாவில் மட்டும் 25 சென்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டிருக்கிறது. அதே போல் தான் தமிழகம் முழுவதும். அந்தப் படத்தின் பெயர் ‘பச்சைக்கிளி கனகா’. பேசாமல் பெயரை மாற்றிக்கொண்டு அப்படி ஒரு படத்தை எடுத்து பிரச்சினைகளை தீர்த்துவிடலாமா என்று கூட யோசித்துவிட்டேன். சமீபத்தில் பத்திரிகைகளின் பாராட்டை பெற்ற ‘நிசப்தம்’ படம், ‘ஹோப்’ படத்தின் தமிழ் வடிவம் என தெரிந்த போது,ஒரு படத்திற்க்காக நாம் எவ்வளவு முட்டாள்தனமாக உழைத்திருக்கிறோம் என நினைக்கும் போது ஒரு விரக்தி ஏற்படுகிறது.

அலம்பல்களை ரசிக்கப் பழகிய மக்கள் மத்தியில் புலம்பல்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை உணர்வேன். இன்று வரை வெளியீடு தொடர்பான போராட்டம் தொடர்கிறது. சமீபத்தில் இதே களம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.பெரிய நடிகர்கள்,பெரிய பட்ஜெட்,பெரிய விளம்பரம் செய்யப்படும் அந்த படங்கள் இரண்டு வருடமாக போராடிக் கொண்டிருக்கும் ‘நெடும்பா’விற்கு முன்னதாகக்கூட வெளியிடப்பட வாய்ப்பிருக்கிறது.

அதற்கு பிறகு ‘நெடும்பா’ வருமேயானால் ‘இதே மாதிரிஏற்கெனவே ரெண்டு படம் வந்திருச்சு’ என்றோ அல்லது ‘அந்தப் படத்தைப் பாத்து காப்பி அடிச்சுருக்கான்’ என்றோ நீங்கள் கமெண்ட் அடித்து விட்டு போகும் தருவாயில், நான் ஊர் பக்கம் ஏதேனும் ஒரு காட்டு வேலை செய்து கொண்டிருப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.