ராதா மோகனோடு மீண்டும் இணைஞ்சிட்டார் அருள்நிதி!

உணர்வு பூர்வமான கதைக்களங்களால் நெஞ்சை வருடிச் செல்லும் இயக்குநர் ராதா மோகன் மற்றும் அருள்நிதி கூட்டணி, ‘பிருந்தாவனம்’ படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்திற்காக மீண்டும் ஒரு முறை கைக்கோர்த்துள்ளனர்.

“பிருந்தாவனம் படம் மிக அழகாக உருவாகி இருப்பதை எண்ணி, ஒட்டுமொத்த படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனக்கும், ராதா மோகன் சாருக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல புரிதல் உண்டு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது எனக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கின்றது என்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்லுவேன். தற்போது நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்திருப்பது எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது.

கதைக்களத்தை முடிவு செய்த நாங்கள், படத்தின் தலைப்பை சரியான நேரத்தில் அறிவிக்க இருக்கின்றோம். தற்போது படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. வருகின்ற ஜூலை மாதம் முதல் நாங்கள் படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கின்றோம்” என்று கூறினார் அருள்நிதி