சந்திரஹாசன் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த்!

நடிகர் கமல்ஹாசன் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான சந்திரஹாசன் சமீபத்தில் லண்டனில் மரணம் அடந்தார். அவரது மறைவுக்கான இரங்கல் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சந்திரஹாசன் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
“என் நண்பர் கமல்ஹாசனுக்கு அவரை பெற்றவர் மற்றும் வளர்த்த சாருஹாசன், ஆளாக்கிய சந்திரஹாசன் என்று மூன்று தகப்பனார்கள். சந்திரஹாசனை நான் இரண்டு தடவை பார்த்து இருக்கிறேன். அவரிடம் பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. நண்பர் கமல்ஹாசன் சினிமாவில் அதிகம் சம்பாதிக்காதவர். இப்போது உள்ள நடிகர்களிடம் இருக்கும் பணம் கூட அவரிடம் கிடையாது. அதற்காக அவர் கவலைப்பட்டதும் இல்லை. அதையும் மீறி கொஞ்சம் அவரிடம் பணம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம், சந்திரஹாசன்.
இனிமேல் எப்படி கமல்ஹாசன் சம்பாதிக்கப்போகிறார். சம்பாதித்ததை எப்படி பாதுகாக்கப்போகிறார் என்றுதான் நான் இப்போது சிந்திக்கிறேன். கமல்ஹாசன் மாதிரி ஒரு கோபக்காரரை நான் பார்த்தது இல்லை. நீங்கள் 10 சதவீதம்தான் அவரது கோபத்தை பார்த்து இருப்பீர்கள். நான் 100 சதவீதம் பார்த்து இருக்கிறேன். அதனால்தான் எப்போதும் அவரிடம் நான் ஜாக்கிரதையாக இருப்பேன்.
அப்படிப்பட்ட கமல்ஹாசனை அன்பாகவும், அதட்டியும் வளர்த்து பொறுப்போடு பார்த்துக்கொண்டவர் சந்திரஹாசன். அனந்து, பாலசந்தர், சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர் கமல்ஹாசனுக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்களில் மூன்று பேர் இப்போது இல்லை. அவர்களின் ஆத்மா இருக்கிறது. நாமும் கமலுடன் இருக்கிறோம்”.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
“சந்திரஹாசன் எனக்கு நிறைய அறிவுரைகள் சொல்லி அதன்படி நான் வளர்ந்து இருக்கிறேன். ஒரு சகோதரனாக எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு அவர் கற்றுக் கொடுத்து இருக்கிறார். எனது குடும்பமே மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றுதான் எனக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறது. வந்தான், போனான் என்று பேசமாட்டார்கள். எனக்கு இந்த பழக்கவழக்கங்களை சந்திரஹாசன் அதட்டி மிரட்டி கற்றுக்கொடுத்தார்.
பிறகு அவரிடம் இருந்து அபிப்பிராயங்களாக அவை வந்தன. அவர் எனக்கு அண்ணனாக கிடைத்தது தனிப்பட்ட பாக்கியம். அவர் விட்டுச்சென்ற இடத்தில் உங்கள் சகோதரர்களாக நாங்கள் இருக்கிறோம் என்று அனைவரும் தெரிவித்தார்கள். இதை முக்கியமானதாக எடுத்துக்கொள்கிறேன். சந்திரஹாசனை இயற்கை எடுத்துக்கொண்டாலும் என்னுள் ஒரு அங்கமாக கலந்துவிட்டார்”.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்
நாசர்-சத்யராஜ்
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், அக்காள் நளினி, சுஹாசினி மணிரத்னம், சந்திரஹாசனின் மகன் நிர்மல்ஹாசன், மகள் அனுஹாசன், அக்‌ஷராஹாசன், நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், நடிகைகள் அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், ரோகிணி, டைரக்டர்கள் பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி,
இசையமைப்பாளர் இளையராஜா, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் ராம்குமார், புஷ்பா கந்தசாமி, கே.ஈ.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, ராஜராஜன் உள்பட பலர் கலந்துகொண்டு சந்திரஹாசன் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.