கோலிவுட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’

தமிழ் சினிமாவின் கருவறை ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’. சென்னையில் மையம் கொண்டு இன்று ஆஸ்கர் வரை ஆழப்பாய்ந்து புதுமைகளால் வியக்க வைப்பதில் தமிழ் சினிமாவுக்கு தனி இடம் உண்டு. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமாத்துறையின் அத்தனை புதுமைகளையும் அரை நூற்றாண்டுக்கு முன்பே பரீட்சித்துப் பார்த்தது. முதல் பேசும் படம், முதல் ஜாவா கலர் படம், முதல் திகில் படம், முதல் சமூகப் படம், முதல் இரட்டை வேடம், முதல் விளம்பரப் படம், தமிழகத்தின் முதல் ஆங்கிலப் படம் என்று அத்தனை சாதனைகளுக்குமான முதல் விதை இங்குதான் விதைக்கப்பட்டது.

இன்றைய சினிமா பெண்ணை வணிகப் பொருளாக பயன்படுத்தி வரும் நிலையில் சினிமாவின் துவக்க காலம் வேறு மாதிரியாக இருந்தது. பெண்கள் சினிமாவில் கால் பதிக்க வருவதே சாதனையாக பார்க்கப்பட்ட அந்தக் காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் பெண்களுக்கு சம உரிமை அளித்தது. பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்ணியம் போற்றி பெருமை சேர்த்துள்ளது. சேலம்-ஏற்காடு சாலையில் 1935ல் நிறுவப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ், 102 தமிழ் படங்கள், 1 இந்திப் படம், 1 ஆங்கிலப் படம், பல தென்னிந்திய மொழிப் படங்களின் தயாரிப்புக் கூடமாக திகழ்ந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த முதல் பேசும் படம் ‘சதிஅகல்யா’. இது முழுக்க, முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இதில் இலங்கைக் குயில் என்று போற்றப்பட்ட தவமணிதேவி கதாநாயகியாக நடித்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கடுத்து மனோன்மணி, மந்திரிகுமாரி, கிளியோபாட்ரா, சுலோச்சனா, மாயாவதி, பக்தகௌரி, பர்மாராணி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி, தாய் உள்ளம், இல்லற ஜோதி, கதாநாயகி, மகேஸ்வரி, ஆரவல்லி, வண்ணக்கிளி, குமுதம், கொஞ்சும் குமரி என்று பெண்மையை முன்னிலைப்படுத்திய பெயர்களே இதற்கு சாட்சி.

இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் பெண்களின் ஆளுமை, அதிகாரம், அன்பு, அழகியல், துணிச்சல், வீரம், நேர்மை என்று பெண்களின் பன்முகங்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டின. மாடர்ன் தியேட்டர்ஸ். ‘காளி கோயில் கபாலி’ என்ற படத்தோடு தனது தயாரிப்புப் பணியை நிறுத்திக் கொண்டது. மாடர்ன் தியேட்டர்ஸ் குறித்து பழம் ெபரும் நடிகை சிஐடி சகுந்தலா கூறுகையில், ‘‘சேலம் மாடர்ன் தியேட்டரை, என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘சிஐடி சங்கர்’ திரைப்படத்தில் நான் நாயகியாக நடித்தது முதல் சிஐடி என்ற இன்ஷியல் எனது பெயருக்கு முன்பு பதிந்துவிட்டது. என் உயிர் உள்ளவரை அந்த இன்ஷியலையும், மாடர்ன் தியேட்டர்ஸ் குறித்த நினைவுகளையும் என்னிடமிருந்து பிரிக்க முடியாது. என்னைப் போல், பல பெண்மணிகளின் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மாடர்ன் தியேட்டர்ஸ். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தை எந்த நொடியிலும் நாங்கள் மறக்க மாட்டோம்.

அவர் கையால் குட்டுப்பட்டவர்கள் பலரும் திரையுலகில் ஜாம்பவான்களாக வலம் வந்தனர்” என்றார். பழம்ெபரும் நடிகை எஸ்.என்.பார்வதியிடம் பேசுகையில், ‘‘ஒரு காலத்தில் இந்திய திரையுலகத்தையே வியப்பில் ஆழ்த்தியது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். அது தயாரிக்கும் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது தோன்றும் வாய்ப்புக்காக ஏங்காத கலைஞர்களே இல்லை. அப்படிப்பட்ட கலைக்கோயிலில் ‘ஜஸ்டிஸ் விஸ்வநாதன்’ உள்ளிட்ட பல, படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அன்பும், பண்பும், பாசமும், கனிவும், உபசரிப்பும் நிறைந்த அந்த நாட்கள், இன்றுவரை என் ெநஞ்சில் ெபாக்கிஷமாய் இருக்கிறது” என்கிறார். ‘‘ஆண்கள், ெபண்கள், சிறியவர், பெரியவர், முதலாளி, தொழிலாளி என்று எந்த பாகுபாடும் மாடர்ன் தியேட்டருக்குள் இல்லை. அனைவரும் கலைஞர்கள் என்ற ஒரே பார்வைதான் அங்கு. இதில் பெண்களை பொறுத்தவரை, அவர்களை பாதுகாத்து, மரியாதை அளிக்கும் இடமாகவே மாடர்ன் தியேட்டர் விளங்கியது.

அந்தக்காலத்திலேயே பெண்மைக்கு புகழ் சேர்க்கும் வகையில், கதாநாயகிகளை முன்னிலை ப்படுத்தி படங்களை தயாரித்து சமூக புரட்சிக்கு வித்திட்டது மாடர்ன் தியேட்டர்ஸ் என்றால் அது மிகையல்ல. வி.என்.ஜானகி, பானுமதி, சாவித்திரி, மனோரமா, சிஐடி சகுந்தலா, எம்.என்.ராஜம் என்று திரையில் மின்னிய தாரகைகள் அனைவரும் மாடர்ன் தியேட்டரில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களே.

தாய்மையை போற்றி வணங்கும் எந்த இடமானாலும் சரி, மனமானாலும் சரி, தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே கண்ணியத்தோடு பெண்ணியம் காத்த மாடர்ன் தியேட்டரின் புகழ், காலமெல்லாம் நிலைத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை’’ என்கிறார் எஸ்.என்.பார்வதி.

– காந்தி.ஜி
படங்கள்: சங்கர்.சி