அன்னக்கிளி வெளியாகி ஒரு சில மாதங்களில், ‘பேசும் படம்’ (நவம்பர் 1976) இதழில் வெளிவந்த இசைஞானியின் ஒரு ஆரம்பகால பேட்டி ஒன்றினை இணையத்தில் வாசிக்கும் பேறு பெற்றேன். ‘அன்னக்கிளி’ வெளியான இன்றைய (மே 14) சிறப்புப் பதிவாய் அது அப்படியே உங்கள் பார்வைக்கென…
இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த படங்களிலேயே நூறு நாட்களைத் தாண்டி, வெள்ளி விழாக்கொண்டாடும் ஒரே படம் ‘அன்னக்கிளி’. ஒரு சாதாரண கறுப்பு வெள்ளைப் படம் ஏனைய கலர்ப்படங்களை எல்லாம் மீறி வெற்றி வாகை சூடிக்கொண்டது. அதன் வெற்றிக்குரிய பல காரணங்களில் ஒன்று, இளையராஜாவின் இனிமையான இசை. இன்று நகர வீதிகளிலும், பட்டிதொட்டிகளிலும், ‘அன்னக்கிளி’ படப்பாடல்கள் எங்கு நோக்கினும் ரீங்காரமிடுகின்றன.
திரையுலக இசையமைப்பாளர்கள் அறிமுகமாவது வெகுஅபூர்வம். அப்படியே அறிமுகமானவர்களில் பலருக்கு தொடர்ந்தாற்போன்ற வாய்ப்புகளும் கிடைத்ததில்லை. ஆனால் இளையராஜா அறிமுகமான முதல் படத்தின் மூலமாகவே, இதுவரை வேறு எந்த இசையமைப்பாளரும் பெற்றிடாத வரவேற்பைப் பெற்றார். ‘அன்னக்கிளி’யின் பாடல்கள் கேட்டோர் மனத்தைக் கிறங்க வைக்கின்றன.
ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதைப் பலரின் மத்தியில் வெளிப்படுத்திக் காண்பிக்கும்போதுதான் அவர்க்ளின் திறமை நமக்குத் தெரியவருகிறது. அந்த வகையில் பார்க்கும்போது இளையராஜாவைவிட பஞ்சு அருணாசலம் பாராட்டுக்குரியவர். காரணம் – இளையராஜாவின் திறனறிந்து தக்க தருணத்தில் பயன்படுத்தி அவரை வெளியுலகுக்கும் தெரியும்படிச் செய்தாரே. அதனால்தான். ஒரு திறமைமிக்க இசையமைப்பாளரைத் தமிழ்த் திரையுலகுக்கு நல்கிட்ட பெருமை கதாசிரியர் பஞ்சு அருணாசலத்தையே சாரும்.
பெயரில் மட்டுமல்ல, வயதிலும் உருவத்திலும் இளையவரான இளையராஜாவை சமீபத்தில் சந்தித்தேன். அவருடன் அவருடைய சகோதரர்கள் பாஸ்கரும், அமர்சிங்கும் வந்திருந்தனர்.
”இசைத்துறையில் தாங்கள் பிரவேசிக்கக் காரணமென்ன? அதற்கு யார் உறுதுணையாக இருந்தார்கள்?” என்று கேட்டேன்.
♫ ‘மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைப்புரம்தான் என் சொந்த ஊர். என்னுடைய அண்ணன் பாவலர் வரதராசன் ஒரு மெல்லிசைக்குழு வைத்திருந்தார். அக்குழுவில் நான் பாடுவேன். சிறிது காலம் செல்லவும் நண்பர் பொதும்பு முருகன் மூலமாக ஓ.ஏ.கே.தேவரிடம் அறிமுகமானேன். நாடகங்களுக்கு இசையமைக்கத் துவங்கினேன். தொடர்ந்து சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் நடித்த நாடகங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நண்பர்கள் பாரதிராஜ், செல்வராஜ், இருவரின் அன்பும், உற்சாகமும் எனக்குப் பெரிதும் உதவின. செல்வராஜ்தான் என்னை பஞ்சு (அருணாசலம்) அண்ணனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அதன் பயனாகத்தான் ‘அன்னக்கிளி’ படத்திற்கு இசையமைப்பாளராகப் பணிபுரியும் பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” – இளையராஜா தான் இந்தத் துறைக்கு வந்த விவரத்தைக் கோடிட்டுக் காண்பித்தார்.
”முதன் முதலில் தாங்கள் பதிவு செய்த பாடல் எது? அன்று தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?” என்று கேட்டதுதான் தாமதம்.
♫ ”அன்னக்கிளி உன்னத்தேடுதே” என்ற பாடலைத்தான் முதன் முதலில் ரிக்கார்ட் செய்தோம். இப்பாடலை லதா மங்கேஷ்கரைப் பாடச் செய்வதாகத் திட்டமிட்டிருந்தனர். சில காரணங்களால் முடியாது போகவே ஜானகி அவர்கள் பாடினார்கள். ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்கெனவே இப்பாடலுக்கான ஒத்திகையை முடித்து விட்டேன்.
ஏ.வி.எம்.மில்தான் இப்பாடல் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. முதல் நாள் ரிக்கார்டிங் பூஜை முடிந்தது. திடீரென்று எல்லா விளக்குகளும் அணைந்துவிட்டன. ‘நல்ல சகுனம்’ என்று ஒருவர் கிண்டலாகக் கூறியது என் காதில் விழுந்தது. முதல் நாளும் அதுவுமாக இப்படி விளக்குகள் அணைந்து விட்டதே என்ற வேதனையில் ரிக்கார்டிங் தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டேன். டைரக்டர் மாதவன் அவர்கள் வேறு ஒரு பூஜைக்குச் சென்றுவிட்டு அங்கு வந்தார். சோர்ந்து போயிருந்த எனக்கு அன்போடு பிரசாதத்தைக் கொடுத்தார்.
சிறிது நேரம் சென்றிருக்கும். கரண்ட் வந்துவிட்டது. அணைந்திருந்த விளக்குகள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. முதல் டேக், ரிக்கார்ட் ஆகவில்லை. மீண்டும் சோதனை. பிறகுதான் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல் பதிவு செய்யப்பட்டது. இன்று அந்தப் பாடலைக் கேட்டுப் பலரும் பாராட்டுகின்றனர். ஆனால் அந்தப் பாடலை நான் கேட்கும்போதெல்லாம் எனக்கு அன்று நடந்த சோதனைகள்தான் நினைவிற்கு வருகின்றன!” – சோதனைக்கு வித்திட்ட அப்பாடல்தான் இன்று இசைத்தட்டு விற்பனையில் பெரும் சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
நீங்கள் பின்நாளில் ஓர் இசையமைப்பாளராக வரவேண்டுமென்பதற்காக உங்களை எந்த அளவுக்குத் தயார் செய்து கொண்டீர்கள்?” என்று கேட்டேன்.
♫ ”என் மதிப்பிற்குரிய இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், சலீல் சௌத்ரி, ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார், சங்கர் கணேஷ், தேவராஜன், தட்சிணாமூர்த்தி, கே.வி. மகாதேவன், விஜயபாஸ்கர் ஆகியோரிடம் உதவியாளனாக பல படங்களுக்குப் பணிபுரிந்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருந்தது. ஒவ்வொருவரும் ஒரு பாடலை இசையமைக்கும் விதத்தினைக் கூர்ந்து பார்ப்பேன். பின்னணி இசை சேர்க்கும்போது எந்தெந்த இடங்களில் பிரத்தியேகக் கவனம் வைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். பாடல் பதிவின் போது சிறு விஷயங்களைக் கூட கவனிக்கத் தவறுவதில்லை. இசையமைப்பாளனாக வரவேண்டுமென்ற ஆர்வத்தில் திறமைமிக்க இசையமைப்பாளர்களிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இன்று எனக்கு அது உதவுகிறது” என்றார் இளையராஜா.
’ரீ ரெக்கார்டிங்கிற்கு நீங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?”
♫ ”ஓர் இசையமைப்பாளரின் முக்கியமான வேலையே பின்னணி இசை சேர்ப்பதுதான். ஒரு படத்தைப் பார்க்காமலேயே அதன் இசையை மட்டும் கேட்டுப்புரிந்து கொள்ளுமளவிற்கு ரீ-ரெக்கார்டிங் இருக்கவேண்டும். நான் எந்த அளவிற்குச் செய்திருக்கிறேனென்று ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்”
தற்போது இளையராஜா, ’ஆளுக்கொரு ஆசை’, ’உறவாடும் நெஞ்சம்’, ’அவர் எனக்கே சொந்தம்’, ’பத்ரகாளி’, ’காற்றினிலே வரும் கீதம்’, ’தீபம்’, ’இதயம் பேசுகிறது’, ’வாழ நினைத்தால் வாழலாம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
‘பல படங்களுக்கு இசையமைத்துவரும் தங்களுக்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய படம் எது?” என்றதற்கு….
♫ ”பாலூட்டி வளர்த்த கிளி” படத்திற்கு கவிஞர் அவர்கள்தான் பாடல் எழுதினார். நான் ஓர் இசையமைப்பாளராக அவரைச் சந்திப்பது அதுதான் முதல் தடவை. எனக்குக் கவிஞரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. கூடவே ஒரு பயமும் உண்டு. அவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் பின்னால் நடக்கப்போவதை அப்படியே பிரதிபலிக்கும். தவிரவும், ‘கவிஞன் வாக்கோ, கடவுள் வாக்கோ’ என்று ஒரு பழமொழியும் உண்டு. என்ன எழுதப் போகிறாரோ என்று பயந்து கொண்டிருந்தேன். கவிஞர் என்னைப் பார்த்ததுமே ‘நீதான் இளையராஜாவாக இருக்குமென்று நினைத்தது சரியாகப் போயிற்று..’ என்றார்.
‘கவிஞர் எழுதிய முதற் பாடல் ‘கண்ணால கண்ணு..!” என்ற பாடல்தான். அவர் எழுதிய கடைசி வரியைக் கண்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்தக் கடைசி வரி இதுதான். “ராஜா.. வா.. ராஜா.. வா..”. இளையராஜாவின் இயற்பெயரே ராஜாதான்! திரையுலகுக்கு ராஜா வா.. ராஜா வா.. என்று கவிஞரே வாழ்த்துக்கூறிவிட்டார்.
‘தங்களுடைய இசையமைப்பிற்கு இருக்கும் வரவேற்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
♫ ”நான் இசையமைத்த முதல் படத்தில் எனக்குக் கிடைத்த நற்பெயரைத் தொடர்ந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற பயம் இருக்கிறது. ரசிகர்களின் மத்தியில் நிலவிவரும் ஓர் இனிய சூழ்நிலையை இனிவரும் படங்களின் மூலம் தக்க வைத்துக்கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எனவே ஒவ்வொரு பாடலுக்கும் மிகுந்த கவனத்தோடு இசையமைத்து வருகிறேன்” – இளையராஜாவின் பயங்கலந்த கவனம் பளிச்செனத் தெரிகிறது.
ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த பழைய இசைக்கருவிகளை முடிந்த மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இளையராஜாவிற்கு நிறைய இருக்கிறது. மேலும், தயாரிப்பாளர்கள் ஆதரவு தருவார்களானால் திறமைமிக்க புதிய பின்னணிப் பாடகர்களையும், பாடகிகளையும் திரையுலகுக்குக் கொண்டுவர முடியும் என்ற நல்லெண்ணத்தை இளையராஜாவிடம் பார்க்க முடிந்தது.
♫ ”எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் என்னை பஞ்சு அண்ணன் ‘அன்னக்கிளி’ படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். என் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஓர் அன்பு உருவம் பஞ்சு அண்ணன். அவரும் ரசிகர்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் என்றென்றும் நிலைநிறுத்திக் கொள்வேன்” – நன்றியால் இளையராஜாவின் கண்கள் நனைகின்றன. உறுதியில் நெஞ்சு நிமிர்கிறது.
‘அன்னக்கிளி’ தந்த இளையராஜா எண்ணற்ற படங்களில் வரும் பாடல்களை இனிமை பயக்கச் செய்ய வாழ்த்துக்கூறி அவரிடமிருந்து விடைபெறுகிறேன்.
பேட்டி: மதுரை தங்கம்.
நன்றி: ’பேசும் படம் (நவம்பர் 1976)’