சாகச ஒளிப்பதிவாளர் & கெளபாய் இயக்குநர் கர்ணன்!

அமரர் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம், கைகொடுத்த தெய்வம், ரஜினியின் பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட சுமார் 150 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இந்த கர்ணன். காலம் வெல்லும், எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளிட்ட 25 படங்களை இயக்கியும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அதிக அளவு கௌபாய் படங்களை இயக்கியவர் கர்ணன். சண்டை, சாகசக் காட்சிகளைப் படமாக்குவதில் தனித் திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அமரர் எம்ஜிஆர் தனது நீதிக்குத் தலைவணங்கு படத்தின் சண்டை, சேஸிங் காட்சிகளை இவரை வைத்துதான் எடுத்தாராம். அதே போல் மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்தின் போர்க்கள காட்சி, குதிரையேற்றக் காட்சிகள் இவர் படமாக்கியதுதான். எம்ஜிஆருக்குப் பிடித்த ஒளிப்பதிவாளரும் கூட.

தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்க ஆரம்பித்த பிறகு, கர்ணன் 20 குதிரைகள் 10 கார்களை சொந்தமாக வாங்கி சேஸிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை எடுத்தாராம். அதே போல தண்ணீருக்கடியில் படம் பிடிப்பதில் அந்தக் காலத்திலேயே அசத்தியவர் இவர். கர்ணன்.

புகழ்பெற்ற நடிகைகளான கே.ஆர்.விஜயா, மாதவி ஆகிய இருவரையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் கர்ணன்தான்.

இவர் குறித்து பத்திரிகையாளர் அமலன் டைரிக் குறிப்பிலிருந்து சில விஷயங்கள் இதோ:

‘கர்ணன் சார் மாதிரி தைரியமான கேமராமேனை பார்க்குறது அபூர்வம். அப்போ மிருகங்களை வைச்சு ஷூட்டிங் எடுக்குறப்போ அதுங்க யாரையும் கடித்துவிடாமல் இருப்பதற்காக முதலில் வாயைத் தைப்பார்கள். பிறகுதான் கூண்டுக்கு வெளியே திறந்து விடுவார்கள்.

சிறுத்தை மட்டுமின்றி சிங்கம், புலின்னு தேவர் மாதிரியே நிறைய விலங்குகளை வளர்த்து வந்தார் கர்ணன். 15 குதிரைக்கும் மேல அவர்கிட்ட இருந்துச்சு. இப்போ சென்னை டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானம் இருக்குல்ல… அதுக்குப் பக்கத்துலதான் கர்ணனோட வீடு இருந்துச்சு.

சேசிங் சீன், சண்டைக் காட்சிகளை கர்ணன் சார் மாதிரி எடுக்க முடியாது. அந்தக் காலத்துல நவீன கேமராவெல்லாம் இல்ல. 9 பாயின்ட் லென்ஸ் கேமராவில்தான் நிறைய காட்சிகளை எடுத்திருக்கிறார்.

கார் சேஸிங் சீனை கார் டிக்கிக்குள்ள உட்கார்ந்தபடி எடுப்பார். ஆளு ரொம்ப கனத்த உடம்பு. ஆனாலும் அந்த டிக்கிக்குள்ள தன்னை அடக்கிக்கொண்டு சேஸிங் சீனை எடுப்பார்.

குதிரை தாண்டிப் போற மாதிரியான காட்சிகளை, தரையில் குழி வெட்டி அதில் படுத்துக்கொண்டு எடுப்பார். குதிரைகள் ஓடுற மாதிரியான சீன் என்றால், கனமான பெட்ஷீட்டில் கேமராவோடு படுத்துக்கொள்வார். பெட்ஷீட் முனையை ரெண்டு பேர் தரையில் இழுத்துக்கொண்டு ஓட, உடம்பு வலியைப் பொருட்படுத்தாமல் அந்தக் காட்சியை பிரமாதமா எடுத்துத் தருவார்.

தமிழ்நாடு – ஆந்திரா பார்டர்ல கன்னங்கோட்டை என்கிற ஊரில் அவருக்கு சொந்தமா பெரிய இடம் இருக்கு. அந்த இடத்தில் நிறைய சண்டைக் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். அன்றைக்கு ஆக்ஷன் ஹீரோவா இருந்த ஜெய்சங்கரை வச்சு ‘ஜக்கம்மா’ படத்தை அங்கதான் எடுத்தார்.

கேமராமேனா அவர் ஒர்க் பண்ணாத படமா இருந்தாலும், சண்டைக் காட்சிகளை படமாக்க கர்ணன் சாரைத்தான் கூப்பிடுவாங்க. ஆபத்தான காட்சிகளைப் படமாக்குவதெல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.’’

அப்பேர்பட்ட ஜாம்பவான் கர்ணன் காலமான தினமின்று