எம்.ஜி.ஆர்-கிட்டே இருந்த ரியல் தாய் பாசம் – சிவகுமார் நினைவூட்டிய நிகழ்ச்சி

டிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1965-ம் ஆண்டில் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். அதன்பின்னர், ‘கந்தன் கருணை’, ‘உயர்ந்த மனிதன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து இன்றளவும் .
தமிழக திரைத்துறையில் நன் மதிப்புடன் இருப்பவர் சிவக்குமார். சூர்யா, கார்த்திக் என்ற இரண்டு நடிகர்களை வீட்டிலேயே வைத்திருப்பவர்.

சிறந்த பேச்சாளாரான அவர் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பேச்சு இது:

”உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.

தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.

என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழுதாங்க. நாங்க அழுதோம், அவங்க அழுதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.

அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.

“ஊருக்கு போயிருந்தியா? அம்மா… அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.