டி. ஆர். ராமச்சந்திரன் இன்னிய யூத்-களுக்கு தெரியாத பெயர்
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகரான இவர் கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனா கவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது.
1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர்.
அதிலும் செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒரு விதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது.
இன்னும் சொல்லப் போனால் காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கி வைத்தவர் இந்த ரியல் டி.ஆர்-தான். இவர் ஹீரோவாக நடித்த, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் சிவாஜியே செகண்ட் ஹீரோதான். அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்க்கு ஜோடி ராகினி. மேலும் வைஜெயந்திமாலா, அஞ்சலி தேவி, சாவித்ரி எனப் பல முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை.
அப்போது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். மேலும் ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.
1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். ராமச் சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த ராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு ஜோடியாக நடித்தார்.
ஒருப் படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர். (தகவல் திரட்டு : கட்டிங் கண்ணையா)
சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப் படம் வெற்றிப் படமாகி பெரும் புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர். சபாபதி படத்திற்கான மொத்த பட்ஜெட் 32,000 ரூபாய்.
டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் “யாரடி வந்தார் என்னடி சொன்னார்’ என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி).
திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின், அமெரிக்காவில் தன் மகள்கள் ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து வந்தார். 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானார். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.
ஹேப்பி பர்த் டே டிஆர்