வெள்ளித்திரையின் தனிப்பெருங்கவி- ரகுவரன்: பிறந்த நாளின்று!

திரைப்பட ரசிகர்களின் மனவெளியில் ஒருபோதும் மங்காத தனித்துவமான பிம்பம் ரகுவரன். வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தனது ஆழ்ந்த கவிதை மனம், தனித்துவமான இசை ரசனை, மற்றும் அழுத்தமான உடல்மொழி ஆகியவற்றால் தலைமுறைகளைத் தாண்டியும் ஈர்க்கும் அபூர்வக் கலைஞன் அவர். இன்று டிசம்பர் 11, அந்தக் கலை ஆளுமையின் பிறந்த தினம். 

வில்லனுக்கும் ஒரு ஆத்மா உண்டு

ரகுவரனின் நடிப்பு எல்லைகள் அற்றது. அவர் வில்லனாகத் திரையில் தோன்றியபோது, அது வெறும் வில்லத்தனமாக மட்டும் இருந்ததில்லை; அது புத்திசாலித்தனம், வலி, இயலாமை, மற்றும் துரோகம் ஆகிய உணர்வுகளின் சிக்கலான கலவையாக இருந்தது. குறிப்பிட்டு சொல்வதானால் வில்லன் என்றால் காட்டுத்தனமாக கத்த வேண்டும், முரட்டு லுங்கி, அழுக்குப் பனியன், கடா மீசை, கையில் பாட்டில், வாயில் புகை என்ற செட்டப்புக்குள் வராத ஒரே வில்லன் ரகுவரன் மட்டுமே கோட்சூட் அணிந்து ஹைடெக் வில்லனாக வலம் வந்து சாதித்தவர் ரகுவரன் மட்டுமே .

புதிய பரிமாணம்: உல்லாசம்’ படத்தில் ஜேகேவாக கலக்கியிருப்பார். ‘லவ்டுடே’யிலும்துள்ளித்திரிந்த காலம்’ படத்திலும் அப்படியொரு அசத்தலான அப்பாவாக அசத்தியிருப்பார். ’ஆஹா’வில் ஆஹா போடச் செய்தார். ‘பாட்ஷா’வில் பாட்ஷாவையே மிரட்டும் ஆன்டனியாக ஸ்டைல் காட்டினார். ‘முகவரி’யில் அன்புக்கணவன், அண்ணன், மகன் என பந்தத்தை பாந்தமாகக் காட்டினார். குரல் வழியே பலப்பல அவதாரம் எடுப்பது இவர் தனி ஸ்டைல். இப்படி சொல்லிக்கொண்டே போக படங்கள் பல உள்ளன. சொன்ன படங்களில் இவரின் கேரக்டரையும் மேனரிஸத்தையும் சொல்லி முடிக்கவே முடியாது. குறிப்பாக பாட்ஷாதிரைப்படத்தின் மார்க் ஆண்டனி பாத்திரம் இன்றளவும் கொண்டாடப்படுவதற்குக் காரணம், ரகுவரன் அந்தப் பாத்திரத்திற்கு அளித்த ‘நாகரிகமான கிரிமினல்‘ என்ற பரிமாணம்தான். அதில் ஒரு பார்வையாலோ, அமைதியான புன்னகையாலோ மிரட்ட முடியும் என்பதை அவர் நிரூபித்தார்..

பாத்திரத்தின் ஆழம்:ஒரு காட்சியில் எத்தனை நடிகர் நடிகைகள் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பார்கள். அப்படி சேர்ந்து நடிக்கும்படியான் சூழலில், கதையில் சில காட்சிகள் இருக்கும். அந்தக் காட்சிகளில், எல்லா நடிகர்களையும் கடந்து, அத்தனை பேர் நடிப்பையும் தூக்கிச்சாப்பிடுவது போல், தன் நடிப்பால் மிரட்டியெடுக்கக் கூடிய நடிகர்கள் பலர் உண்டு. எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, பானுமதி என்று பலரையும் சொல்லுவார்கள். எண்பதுகளில் அப்படியொரு நடிகரிவர். ‘அஞ்சலி’ திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தாலும் சரி, அல்லது ‘சிவா’ திரைப்படத்தில் ரௌடியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பாத்திரத்தின் உளவியலையும் அவர் மிக நுணுக்கமாக உள்வாங்கிக் கொடுத்தார். 

திரைக்குப் பின்னால் ஒரு இசை ஞானி 

வெள்ளித் திரை நடிப்புக்கு வெளியே, ரகுவரன் தீவிரமாகக் காதல் கொண்டது கவிதை வாசிப்பிலும், இசையமைப்பிலும்தான். திரையுலகின் வெளிச்சம் இவரது இந்தப் படைப்புத் திறன்களை அதிகம் அறிய விடவில்லை என்றாலும், அவரது நெருங்கிய வட்டாரங்கள் அவர் ஒரு தேர்ந்த இசையமைப்பாளர் என்பதைக் கூறத் தவறுவதில்லை

மெல்லிய ரசனை: அவரது உரையாடல்களிலும், மேடைப் பேச்சுகளிலும் ஒரு மெல்லிய இசை லயம் இழையோடும். அவரது தனிப்பட்ட ரசனை, திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரத் தேர்வுகளிலும் வெளிப்பட்டது. குறிப்பாக, மனதை நெருடும் கதையம்சம் கொண்ட பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் தனித்துவமானது

தனித்துவமான நடைமுறை 

ரகுவரன் தனது திரைப் பயணத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவரது உடல்மொழி மற்றும் உரையாடல் பாணியில் பொதிந்துள்ளது..குரல் வளம்: தனித்துவமான, சற்றுப் பீங்கான் ஓசை கொண்ட அவரது குரல், பாத்திரத்தின் தன்மையைப் பொறுத்து மென்மையாகப் பேசவோ அல்லது கூர்மையாகப் பேசவோ அவரால் இயன்றது.

மாற்று நாயகன்: முன்னணி நட்சத்திரங்களின் படங்களில்கூட, ரகுவரனின் பாத்திரம் அழுத்தமாகவும், சமமாகவும் இருக்கும். ஒரு வில்லனாக இருந்தும், பார்வையாளர்களின் ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்தும் திறன் அவருக்கு இருந்தது. இவரைப் போன்ற நடிகர்களால்தான், தமிழ் சினிமா, வெறும் நாயகன்-வில்லன் என்ற சண்டைத் தளத்தில் இருந்து விலகி, மனவியல் ரீதியான போராட்டங்களின் களமாக மாறியது.

ரகுவரன் போன்ற கலைஞர்கள் மறைவதில்லை; அவர்கள் தாங்கள் விட்டுச்சென்ற கலைப் படைப்புகள் வழியாகத் தொடர்ந்து வாழ்கிறார்கள். அவரது அகால மறைவு திரையுலகிற்கு ஒரு பேரிழப்பு என்றாலும், தீராப் பிம்பமாய் ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் அவர் நிலைத்திருக்கிறார். அவரது கலைத் தாகத்தையும், தனித்துவத்தையும் இன்றைய அவரின் பிறந்த நாளில் நினைவு கூர்வது, தமிழ் சினிமா கண்ட ஒரு தனிப்பெருங்கவிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

error: Content is protected !!