கமல் நடிப்பில் வெளியான ‘குணா’ ரிலீஸான நாள்!

சில படங்களை நெனச்சு பக்கம் பக்கமாக எழுதலாம். கமலின் குணா அப்படியொரு படம். 34 ஆண்டுகளுக்கு முன் 1991 இதே நவம்பர் 5 ஆம் தேதி இதே நாளில் குணா ரிலீஸாச்சே பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் ஆச்சரிய அலையை ஏற்படுத்திச்சு. அதேநேரம் பொதுப்பார்வையாளர்களை படம் சென்றடையுமா என்ற கேள்வியும் எழுந்துச்சு.

மாஸ் ஹீரோ படத்திற்கென ஒரு ஃப்ரேம் உண்டு. அவன் எவராலும் வெல்ல முடியாதவன், தீமைகளை அழிப்பவன்… இப்படி. ஆனா குணா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கதை, கதாபாத்திரங்கள், காட்சிகள் அம்புட்டும் அதுவரை தமிழ் சினிமா அறியாத தளத்தை, வண்ணத்தை கொண்டிருந்துச்சு..அந்த வகையில் குணாவின் கதையும் காட்சிகளும் பல வருடங்களாக இன்னிக்கும் பேசப்பட்டும், வியந்து போற்றப்பட்டும் வருது.

குணா படத்தின் பின்னணி தகவல்களும் அதேயளவுக்கு ஆச்சரியம் கொண்டவை. மலையாளத்தின் சிறந்த இயக்குநர்களை தமிழில் பயன்படுத்தோணும் அப்படீங்கற விருப்பம் கமலுக்கு முன்பே இருந்துச்சு. பரதன், சிபி மலையில், பாலச்சந்திர மேனன் என பலருடன் இணைஞ்சு படம் செய்ய முயன்று அது மிஸ் ஆகி கொண்டே போச்சு . ஒரு சூழலில் ஐ.வி.சசி இயக்கத்தில் மட்டும் தமிழில் கமல் நடிச்சிருந்தார்.சிபி மலையில் டைரக்‌ஷனில், ஈழப் பின்னணியில் ஒரு படம் நடிக்க முடிவாச்சு. படத்தின் கதை, திரைக்கதையை சாப் ஜான் எழுதினார். இந்த ஜான் கமல் நடித்த மலையாளப் படம் சாணக்கியனின் கதை, திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் டி.கே.ராஜீவ் குமாருடன் எழுதியவர். அந்த ராஜீவ் குமாருடன் மீண்டும் இணைந்து படம் செய்ய முயன்றதும், கடைசியில் சபாஷ் நாயுடு படத்தை ராஜீவ் குமார் இயக்குவதாக முடிவாகி, முதல்கட்ட படப்பிடிப்போடு உடல்நலக்குறைவால் ராஜீவ் குமார் விலகியதும் தனிக்கதை. ஜானின் திறமையில் நம்பிக்கை வைத்து சிபி மலையில் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதும் பொறுப்பை கமல் அவரிடம் ஒப்படைச்சார்.

ஈழ அரசியல் குறித்து துக்ளக் சோ ராமசாமியிடம் கமல் விவாதிச்சார். ஈழ அரசியல் பின்னணியில் ஒரு படத்தை எடுத்து தமிழகத்தில் வெளியிடுவதில் உள்ள சிரமங்களை சோ எடுத்துக்கூற, அப்படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜான் பொட்டன் (முட்டாள், தத்தி) என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு கதையைச் சொல்ல, கதை பிடித்துப்போன கமல் அதனை விரிவாக எழுதச் சொன்னார். மதிகெட்டான் சோலை என்ற பெயரில் அக்கதை தயாராகிபுடுச்சு. அதனை படமாக்கும் வேளையில் சிபி மலையில் வேறு படத்தில் பிஸியாக இருக்க, சந்தான பாரதியை வைத்து படத்தை தொடங்கிபுட்டார். அந்தப் படம்தான் குணா

ஜான் அதன் பிறகு சில்லுன்னு ஒரு காதல் உள்பட ஒரு சில தமிழ்ப் படங்களில் ஒர்க் பண்ணினார். ஈழத்தை மையப்படுத்திய கதையில் கமல் கமிட் செஞ்சிருந்த மூன்று பேர் இயக்குநர் சிபி மலையில், எழுத்தாளர் ஜான் மற்றும் கேமராமேன் வேணு. திறமையான பிறமொழி ஒளிப்பதிவாளர்கள் எத்தனை பேரை கமல் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் அப்ப்டின்னு தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். அந்தளவுக்கு அவரது ஒளிப்பதிவாளர் தேர்வுக்குப் பின்னால் விஷயங்கள் கீது.

வேணு மோலிவுட்டின் சிறந்த கேமராமேன்களில் ஒருவர். 1985 இல் வேணு ஒளிப்பதிவு செய்த கே.ஜி.ஜார்ஜின் இரகள் ஒரு அட்டகாசமான திரைப்படம். தொண்ணூறுகளுக்கு முன் அவர் ஒளிப்பதிவு செய்த தேசாடனக்கிளி கரையாறில்லா, பரதனின் ப்ரணமம், தாழ்வாரம்,, பத்மராஜனின் கரியிலக்கட்டு போல், நமக்குப் பார்க்கான் முந்திரித்தோப்புகள், அபரன், மூணாம் பக்கம், சிபி மலையில் இயக்கிய தசரதம், ஜான் ஆபிரஹாமின் அம்ம அறியான் உள்பட எல்லாப் படங்களுமே மலையாள சினிமாவின் முன்வரிசையில் இருப்பவை. சித்திக் – லால் இயக்குநர்களாக அறிமுகமான ராம்ஜிராவ் ஸ்பீக்கிங் படத்துக்கும் இவர்தான் ஒளிப்பதிவு. கிளாஸிக், கல்ட், கமர்ஷியல் என்று அனைத்துவித திரைப்படங்களுக்கும் அதற்கேற்ப லைட்டிங் செய்வதில் வேணு நிபுணர்.குணா படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் வேணுவின் திறமையை, உழைப்பை, அர்பணிப்பைப் பார்க்கலாம்.

அதிலும் உலகில் இருக்கும் சுற்றுலா பகுதிகளையும் தேடிச்சென்று ஒவ்வொரு மொழி சினிமா டீமும் படமாக்குது. ஆனா ஷூட் செய்த ஒரு இடத்தைப் பின்னாளில் டூரிஸ்ட் ஸ்பாட்டா மாற்றிய பெருமை இந்த குணா திரைப்படத்தையேச் சாரும். ‘மரணத்தின் சமையலறை’ என்று அழைக்கப்பட்ட பாறைகள் பின்னாளில் ‘குணா பாறை’களாக மாறிபுடுச்சு. சுமார் 600-700 அடி ஆழமுள்ள குகையில் வாழ்ந்தபடி இக்கட்டாண நிலையிலும் நடிப்பின் மறுமுகத்தைக் காட்டியிருந்தார் கமல். மொத்த யூனிட்டும் கொடைக்கானலின் கடும் குளிரில் உறைஞ்சுது. ஆபத்தான அந்தப் பாறைகளில் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தியதன் விளைவு தான் நாம், இன்னிக்கும் குணாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கோம்.

குணாவின் இன்னொரு முக்கியமான படைப்பாளி வசனம் எழுதிய பாலகுமாரன். நாயகன் குணாவின் குணாதிசயத்தை, பாலியல் தொழில் செய்யும் தாயின் இடத்திலிருந்து வெளியே வேண்டும் என்ற வேட்கையை, அபிராமி என்ற தேவதை வந்து அங்கிருந்து தன்னை அழைத்துப் போவாள் என்ற நம்பிக்கையை, அபிராமி மீதான காதலை என்று அனைத்தையும் வசனங்கள் உணர்த்தி உயிரூட்டியிருப்பார். குறிப்பா “இங்க எல்லோரும் பைத்தியம் தான். பணப் பைத்தியம்…பொம்பளப் பைத்தியம்” – அப்படீனு பைத்தியக்காரன் குணாவிடம் அபிராமி சொன்ன வசனம். இச்சமூகத்தை இன்னிக்கும் செருப்பால் அடிக்கும் சொற்கள். நாகரீக மனிதனாய் வாழும் ஒவ்வொருத்தரும் யோசிக்க வேண்டிய வார்த்தைகள் அவை. ஆசை என்னும் போர்வைக்குள் உறங்கிக்கொண்டு, சக மனிதனை காயப்படுத்துபவர்களைவிட உன்னதமான, மனிதனாய் தான் அபிராமியின் கண்களில் விழுந்தான் குணா.

கமல் படங்களில் நடிகர்கள் தேர்வு கதைக்கும், கேரக்டருக்கும் நியாயம் செய்வதா இருக்கும். அந்த வகையில் சித்தப்பாவா வரும் ஜனகராஜ், காகா ராதாகிருஷ்ணன், மனநல மருத்துவரா வரும் க்ரிஷ் கர்னாட், ரேகா அப்படீனு பலரும் அதற்கு முன் கமலுடன் நடிச்சவவிய்ங்க. பிரபலமானவய்ங்க. வில்லனா நடிச்ச சரத் சக்சேனா ஹிந்தி ஆக்டர். குணாவில் கமல் அவரை இண்ட்ரஸ்டியூஸ். மலையாளத்தில் அதற்கு முன்பே ஒருசில படங்களில் அவர் நடிச்சிருந்தாலும் குணா ரிலீஸான அதே வருடம் மலையாளத்தில் வெளியான கிலுக்கம் படம் சரத் சக்சேனாவுக்கு புகழை பெற்றுத் தந்துச்சு. குணா படத்தைத் தொடர்ந்து 1992 இல் ரஜினியின் மன்னன் படத்திலும் அவரை வில்லனாக நடிக்க வைச்சாய்ங்க .

குணாவின் முக்கியமான ரோல் ரோஷினியாக வரும் கமலின் அபிராமி. இவரை கமல் கண்டுபிடிச்சதே தனிக்கதை. ஹிந்தி, டோலிவுட் படங்களில் நடிச்சிக்கிட்டிருந்த டெய்ஸி இரானி அப்போது நடிப்புப் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். அதில் நடிப்புப் பயிற்சி பெற்று வந்த ரோஷினியைப் பார்த்து, குணாவில் அவரை கமல் நாயகியாக்கிப்புட்டார். இந்த டெய்ஸி இரானிக்கும் களத்தூர் கண்ணம்மா கமலுக்கும் ஒரு லிங்க் உண்டு. ஐம்பதுகளில் டெய்ஸி இரானி ரொம்ப பேமஸான சைல்ட் ஸ்டார் . தமிழில் யார் பையன் (1957) படத்தில் சிறுமியான அவரை; சிறுவனாக நடிக்க வைத்திருந்ந்த்தாய்ங்க . அவரது ஆக்டைப் பார்த்து, பத்தாயிரம் ரூபாய் முன்பணம் தந்து களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருந்தார் ஏவி மெய்யப்ப செட்டியார்.அந்த சமயம் செட்டியாரின் ஃபேமிலி டாக்டர் சாரா ராமச்சந்திரன் ஃபோர் இயர்ஸ் கமலை செட்டியாரின் மனைவி ராஜேஸ்வரியிடம் அறிமுகப்படுத்துறார். அவர் தனது மகன் சரவணனிடம் சொல்ல, அவர் கமலை செட்டியாரிடம் அழைத்துச்சுட்டு போனா ர். யார் பையன் படத்தில் டெய்ஸி இரானி நடிச்சது மாதிரி கமலிடம் அவர் நடிக்கச் சொல்ல, கமல் அப்படியே நடிச்சுக் காட்ட, பத்தாயிரம் அட்வான்ஸ் போனால் போவுது -னு முடிவு செஞ்சு கமலை களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அந்த டெய்ஸி இரானியின் பள்ளியில் இருந்துதான் குணா நாயகியை கமல் கண்டு பிடிச்சார்.

பாலசந்தருடன் ஒர்க் பண்ணிபுட்டு பின்னர் கமலுடன் பல படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் அனந்துவையும் குணாவில் கமல் நடிக்க வைச்சார். டைட்டில் பாடலை படத்தில் அவர்தான் பாடுவார். குணா படத்தின் கதை, காட்சிகளைப் போல் படத்திற்கு வெளியே உள்ள விஷயங்களையும் நாள் முழுக்க எழுதிக் கொண்டே போலாம். வெளியான நேரத்தில் படம் சுமாராகப் போனது ஒரு பொருட்டேயில்லை. குணா போன்ற ஒரு படத்தை வழக்கமான கமர்ஷியல் ஹீரோ படங்களுடன் ஒப்பிடுவதே தவறு. அந்த ஹீரோ படங்கள் 100 நாள்கள் ஓடுவதும் குணா போன்ற படம் 30 நாள்கள் ஓடுவதும் சமம். இன்னும் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் குணா படத்தைப் பற்றி பேசுகிறவர்களும், பார்த்து வியப்பவர்களும் இருந்து கொண்டேயிருப்பார்கள். அதுவே இந்தப் படத்தின் தனிச்சிறப்பு