கிஷோர் மற்றும் ஸ்ருதி மேனன் நடிப்பில் சஜீத் ஏ இயக்கத்தில் ஒலி வடிவமைப்பாளர் ரசுல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர் கெய்கோ நகஹாரா, இசையமைப்பாளர் பிஜிபால் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் கைவண்ணத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் சர்வதேசப் பிராஜெக்ட்ஸ் ஷோகேஸ் ஆப்ஸில் இடம்பெற்ற முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ளது. பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழா (BIFFF) என்பது FIAPF இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஃபிலிம் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் மிகவும் மதிக்கப்படும் மற்றும் அங்கீகாரம் பெற்ற திரைப்பட விழா ஆகும்.
கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக கூடுதல் அங்கீகாரம் பெற்ற திரைப்பட விழா இது ஆகும். பல ஆண்டுகளாக பீட்டர் ஜாக்சன், டெர்ரி கில்லியம், வில்லியம் ஃப்ரீட்கின், பார்க் சான்-வூக், கில்லர்மோ டெல் டோரோ போன்ற புகழ்பெற்ற பிரபலங்களை பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழா கவுரவித்துள்ளது. இதுபோன்ற உலகப்புகழ் பெற்ற ஒரு அரங்கில் வடக்கன் படம் இடம் பெற்று இருப்பது இந்த படத்தில் பணியாற்றி உள்ள படைப்பாளர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது.
ஆஃப்பீட் மீடியா குழுமத்தின் துணை நிறுவனமான ஆஃப்பீட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் வடக்கன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பண்டைய வட மலபார் நாட்டுப்புறக் கதைகளின் புதிரான கதைகளை ஒன்றாக இணைத்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லராக படம் உருவாகி உள்ளது. இந்த படம் குறித்து பேசிய பிரம்மயுகம் மற்றும் பூதகாலம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராகுல் சதாசிவன், “வடக்கன் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அமானுஷ்ய மற்றும் திரில்லர் படங்களுக்காக கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மலையாள சினிமாவில் இருப்பதற்கு பெருமை சேர்த்துள்ளது. இது மலையாள சினிமாவின் பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று கூறினார்.
ஆஃப்பீட் மீடியா குழுமத்தின் நிறுவனர் & தயாரிப்பாளர், ஜெய்தீப் சிங் பேசும் போது, “வடக்கன் படம் உலகத் தரம் வாய்ந்த நடிகர்கள் & பட குழுவினரால் எடுக்கப்பட்டுள்ளது. ஹைப்பர்லோகல் கதைகளை உலகளவில் எடுத்து சென்று இந்திய சினிமாவை மறுவரையறை செய்வதே எங்கள் நோக்கம் ஆகும். இது வெறும் அமானுஷ்ய த்ரில்லர் படம் மட்டுமில்லை. உலகம் முழுவதும் உள்ள நமது கலாச்சாரத் தை எடுத்து கூறும் ஒரு படமாக இருக்கும்” என்று கூறினார். பலதரப்பட்ட ரசிகர்களை சென்றடைவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக, வடக்கன் படம் இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் இடம் பெறவுள்ளது. மேலும் வடக்கன் படம் கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் மற்ற பிராந்திய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.