இப்போ யார், யாரையெல்லாமோ ப்ளே பாய், சாக்லேட் பாய், ஹேண்ட்ஸம் லுக் அப்படீன்னு அடைமொழி போட்டு கூப்பிடறாங்களே அதுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த ரொமான்ஸ் பர்சனுக்கான வார்த்தை காதல் மன்னன் என்பது.இப்பத்திய ஜெனரேஷன்களுக்கு தெரிஞ்ச அரவிந்த்சாமி, அஜித், அப்பாஸ், மாதவன் போன்றோர் பெண்களின் சாக்லேட் பாய்ஸ் என்று வர்ணிக்கப்பட்டாலும் அவர்களுக்கெல்லாம் சீனியராக இருந்தவர் காதல்மன்னன் ஜெமினி கணேசன் என்றால் மிகையல்ல. ஆனாலும் ஜெமினி கணேசனை வெறும் காதல் மன்னனாக மட்டுமே தமிழ்த் திரை உலகம் இதுநாள் வரை சித்திரித்திருக்கிறது. உண்மையில், ஜெமினியின் ஆளுமை பன்முகப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையுமே திகைக்க வைத்த போட்டியாளர் இவர். ஸ்டைல், நடிப்பு என்று ஆளுக்கொரு திசையில் கொடிகட்டிப் பறந்தபோது, தனக்கென்று ஓர் அசத்தலான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் ஜெமினி. ஜெமினிக்கு, யாருடனும் சச்சரவுகள் இருந்ததில்லை. ஆனால் சர்ச்சைகளோ ஏராளம். பார்க்கும் பெண்கள் அத்தனை பேரையும் வசீகரிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்ததுதான் பிரச்னையே.
ஜெமினி கணேசன் 1920 ஆம் ஆண்டு இதே நவம்பர் 17ல் திருச்சியில் பிறந்தார். ஜெமினிகணேசனின் தந்தை பெயர் ராமசாமி. தாயார் கங்கம்மா. புதுக்கோட்டையில் நல்ல வசதியுடன் வாழ்ந்த குடும்பத்தில், முதல் குழந்தை பிறந்த சில நாள்களிலேயே இறந்து விட ராமசாமி – கங்கம்மா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர்தான் ஜெமினி கணேசன். பெற்றோர் சூட்டிய பெயர் கணேஷ்.
புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய நாராயணசாமி அய்யர் ஜெமினி கணேசனுக்கு சின்னத் தாத்தா முறையாகும். ஜெமினி கணேசன் தனது பத்து வயது வரை நாராயணசாமி அய்யர் வீட்டில்தான் வளர்ந்தார். மேலும், தேவதாசி முறையை ஒழிக்க காரணமாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜெமினிக்கு அத்தை முறையாகும்.
ஜெமினி கணேசன் புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் இருந்த குலமது பாலையா பிரைமரி ஸ்கூலில் பள்ளிப்படிப்பை தொடங்கினார். அதன்பிறகு, தனது ஏழாம் வகுப்பை சென்னையில் உள்ள ராஜாமுத்தையா செட்டியார் பள்ளியிலும் அதன்பிறகு பிற வகுப்பை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும் படித்தார் ஜெமினிகணேசன்.
சென்னையில் காலேஜ் படிப்பை முடிச்சவர் தான் படிச்ச சென்னை கிறிஸ்துவ காலேஜூலேயே பார்ட் டைம் லெக்சரரா ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தார். ஆனால் விதியது வலியது ஆச்சே.. அந்த வாத்தியார் பணி இந்த ராமஸ்வாமி கணேசனுக்கு அவ்வளவு நிறைவாக இல்லை.
தனது கனவை அடைய ஜெமினி ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாக சேர்ந்தார். அதன்படி, ஜெமினி ஸ்டூடியோவில் நடிப்பதற்கு சான்ஸ் கேட்டு வருபவர்களை நேரில் அழைத்து, அவர்களின் திறமையை எடை போட்டு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டார் ஜெமினிகணேசன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அப்படி ஜெமினிகணேசன் அதிகாரியாகப் பணியாற்றியபோது, ஜெமினி ஸ்டூடியோவில் வேலை கேட்டு வந்தவர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர்.
அதன் பின் 1947ஆம் ஆண்டு ஜெமினி நிறுவனம் தயாரித்து ராம்நாத் இயக்கிய ‘மிஸ்மாலினி’ படத்தின் மூலம் நடிப்புப் பயணத்தை ஆரம்பித்தார். ஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேசன் என்றே இடம் பெற்றது. ஆனால் ‘பராசக்தி’ மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமை யால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து ‘ஜெமினி’ கணேசன் ஆனார்.
இந்தத் தமிழ் சினிமாவில் சண்டை கற்றுக்கொடுக்க எம்.ஜி.ஆர் இருந்தார், நடிப்புக்கு சிவாஜி இருந்தார். காதலை கற்றுக்கொடுக்க ஜெமினிதான் இருந்தார். இவருக்கு சினிமாவில் மட்டும் பல நாயகிகளுடன் நடிக்கவில்லை. நிஜ வாழ்விலும் நாயகிகள் அதிகம் தான். ஜெமினி கணேசனிற்கு மூன்று மனைவிகள், ஏழு பிள்ளைகள். இவரது மூன்றாவது மனைவி நடிகை சாவித்ரி. ஜெமினியும் சாவித்ரியும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதில் ஏற்பட்ட நட்பு தான் காலப்போக்கில் காதலாக மலர்ந்து, திரையில் ரசிகர்கள் கொண்டாடிய ஜோடிப் பொருத்தம் நிஜமானது.1954ஆம் ஆண்டு சாவித்ரியை திருமணம் செய்துகொண்டார். ஜெமினி திருமணமானவர் என்று அறிந்தும் நடிகை சாவித்ரி ‘மணம் முடித்தால் அது ஜெமினியுடன்தான்’ என்று நின்று மணமுடிக்கும் அளவிற்கு ஜெமினியின் மீது காதல் வைத்திருந்தார் என்பதும் அதன் நிலைமை என்பதையும் ஓரளவு நடிகையர் திலகம் படம் மூலம் பலர் அறிந்திருக்கலாம் . இதில் அடிசினல் விஷய்ம் என்னவென்றால் எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசனில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தவர் ஜெமினி கணேசன்தான். அந்தப் படத்தின் பெயர் “மனம் போல் மாங்கல்யம்”. ஜெமினிகணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான். ஜெமினியின் வாழ்வில் சாவித்திரி இடம்பெற வழிவகுத்த படம் “மிஸ்ஸியம்மா.” அதற்கு முன்பு இணைந்து நடித்திருந்தாலும் கூட, மிஸ்ஸியம்மாவில் இருந்துதான் ஜெமினிகணேசனும் சாவித்திரியும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.
ஜெமினி கணேசன் நடிகர் மட்டுமன்றி சிறப்பாக கார் ஓட்டுவதில் வல்லவர். இவர் வேகத்துக்கு யாராலும் கார் ஓட்ட முடியாதாம். இவர் கார் ஓட்டும் வேகத்துக்குப் பயந்து, சில ஸ்டுடியோக்களில் இவருக்காகவே வேகத்தடை வைத்த நிகழ்வுகள் நடந்ததுண்டு.
ஜெமினி கணேசன் தயாரித்து நடித்த ஒரே படம் ‘நான் அவனில்லை’. இதேபோல் ஜெமினிகணேசன், தாமரை மணாளனுடன் இணைந்து ‘இதய மலர்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் விருப்பத்திற்குரிய நடிகர்களில் ஒருவர் ஜெமினிகணேசன். இவரது இயக்கத்தில் புன்னகை, இரு கோடுகள், தாமரை நெஞ்சம், பூவா தலையா, காவியத்தலைவி, நான் அவனில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களில் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆருடன் ‘முகராசி’ என்ற ஒரே படத்தில் இணைந்து நடித்த ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனுடன் 13 படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஜெமினிகணேசன். ஜெய்சங்கருடன் ‘ஒருதாய் மக்கள் ‘ படத்தில் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஜெமினிகணேசன். பின்னர் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் ஜெமினிக்கு பதில் முத்துராமன் அந்தப் படத்தில் நடித்தார்.
மேலும், கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது அவருடன் நடித்த ஜெமினிகணேசன் பின்னர் அவர் பெரிய நடிகரானதும், `உன்னால் முடியும் தம்பி’, ’அவ்வை சண்முகி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். ரஜினியும் கமலும் இணைந்து நடித்த ‘அலாவுதினும் அற்புத விளக்கும்’ படத்திலும் ஜெமினி நடித்திருந்தார். விஜயகாந்துடன் ’பொன்மனச்செல்வன்’, கார்த்திக்குடன் ’மேட்டுக்குடி’, பிரபுதேவாவுடன் “நாம் இருவர் நமக்கு இருவர்”, அர்ஜுனுடன் “கொண்டாட்டம்” ஆகிய படங்களில் இணைந்து நடித்தார் ஜெமினிகணேசன். இதுதவிர “கிருஷ்ண தாசி” என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார் ஜெமினிகணேசன்.
முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால் ஜெமினி கணேசன் புகழ் பெற்ற நட்சத்திரம் ஆன பின்பும் சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் என்று அனைத்து நடிகர்களுடனும் எந்த ஒரு பாகுபாடும், மருப்பும் சொல்லாமல் நடித்தவர் . அதில் முக்கியமான திரைப்படங்கள் வீரபாண்டியன் கட்டபொம்மன், பாசமலர், பார்த்தால் பசி தீரும், சரஸ்வதி சபதம், கப்பலோட்டிய தமிழன் ஆகியவை. எம்.ஜி.ஆருடன் முகராசி திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் 1970க்கு பின் ஜெமினியின் படங்கள் இறங்கு முகமாக இருந்தது. மீண்டும் தனது இடத்தை குணச்சித்திர வேடங்களின் மூலம் பிடித்தார். 1988ஆம் ஆண்டு சீரஞ்சீவி நடிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘ருத்ர வீணா’ திரைப்படத்தில் ஒரு கர்நாடக இசைக் கலைஞராக நடித்திருந்தார். அதே படம் தமிழில் கமல் நடிப்பில் ‘உன்னால் முடியும் தம்பி’ என்று வெளியானது. இதில் ஜெமினியின் கதா பாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
கமல் நடிப்பில் வெளியான ‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் கமல் பெண் வேடம் போட்டிருப்பார். அந்த கதாபாத்திரம் தன் மனைவிபோல் இருப்பதாக எண்ணி கமலிடம் காதலைக் கூறுவார் ஜெமினி. இந்தப் படத்தில் நடிக்க கமல் முதலில் அணுகியது சிவாஜியைதான் என்றும், ‘இந்தக் கதாப்பாத்திரத்திற்கு சரியான ஆள் நானில்லை, காதல்மன்னன் ஜெமினிதான்’ என்று சிவாஜி கூறியதாக கமல் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கார்த்திக், கமல், சத்யராஜ், விக்ரம், விஜயகாந்த் என அடுத்ததலைமுறை நடிகர்களின் படங்களில் எந்த பாகுபாடும் இல்லாமல் நடித்த கலைஞர் ஜெமினி கணேசன்.
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் என 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்ததில் 30 படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடிய வெற்றி படங்கள். “கல்யாணப்பரிசு” வெள்ளி விழா கண்டது.
அப்பேர்பட்ட ஜெமினி 2005ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக உயிர்பிரிந்தார். ஆனாலும் தமிழ் திரையில் காதல் மன்னன் என்ற இடம் அவருக்கே இன்னும் நிலைத்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
தகவல் உதவி : கட்டிங் கண்ணையா