”கட்சியாட்கள் எங்களை மிரட்டினார்கள்”! ‘கற்பு பூமி’ திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்வில் நக்கீரன் கோபால்!

 

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கற்பு பூமி’. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

 

பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசும் போது…

இயக்குநர் நேசமுரளி பேசியதைப் பார்த்தால் இனி படம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று நினைக்கிறேன். இந்தப் பிரச்சினைகளுக்காகத் தான் நான் சினிமாவுக்கே வரவில்லை. பத்திரிகை பக்கம் போய்விட்டேன். இவர் பேசின மணல்மேடு, பொள்ளாச்சி மற்றும் மணிப்பூர் இவைகளை நாங்களும் பேசி இருக்கிறோம்.

இங்கு சென்சாரை நம்பித்தான் படமே எடுக்க வேண்டியிருக்கிறது. நாங்களும் கூஸ் முனுசாமி வீரப்பன்னு ஒரு டாக்குமெண்டரி பண்ணோம். அதைப் பார்த்துவிட்டு சிலர் கேட்டார்கள்… ஏன் இதை படமாகச் செய்யவில்லை என்று. வேறுவினையே வேண்டாம். சென்சாரிடம் இருந்து ஒரு ரீலும் தப்பாது. ஏன் தேவையின்றி அவர்களிடம் போய் கெஞ்ச வேண்டும் என்று கூறினேன். இந்த பொள்ளாச்சி மேட்டருக்கே வருகிறேன். மொத்தம் 1100 வீடியோக்கள், எங்களிடமிருந்தது வெறும் 3 மட்டும் தான். வெளியிடக் கூடாது என்று அதிகாரிகளும் ஒரு அரசியல் பிரமுகரும் மிரட்டினார்கள்.

இப்படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று யோசித்து செயல்படுங்கள். அதற்கு நக்கீரனும் துணை நிற்கும் என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும் போது…

எல்லோருக்கும் வணக்கம். வெற்றி, வெற்றி, ஜெயிக்கிறோம். இயக்குநர் நேசமணியைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். பெரும் போராட்டங்களுக்கு நடுவில் தான் அவர் படங்களை எடுக்கிறார். ஆனால் அந்தப் படங்கள் வெளிவர முடியாத படங்களாகவே அமைந்துவிடுகின்றன. இந்த தருணத்தில் நாம் அனைவரும் அவருக்கு ஆறுதலாக இருப்போம். இந்தப் படத்தில் ஒரு காதல் பாடல், ஒரு குத்துப் பாடல், பாரதி ஐயாவின் பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. இரண்டு புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது….

அனைவருக்கும் பணிவான வணக்கம். காலையில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகள். அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளில் நான் பங்கேற்க வேண்டிய நெருக்கடியான நிலையில் கால தாமதம் ஆகிவிட்டது. அதற்காக பொறுத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நேசமுரளி அவர்கள் முற்போக்கான இயக்குநர். சொல்லப் போனால் இடதுசாரி சிந்தனையுள்ள இளைஞர். வணிக நோக்கில் படங்களை இயக்க வேண்டும் என்று நினைக்காமல், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம், ஆனால் சமூகச் சிக்கல்கள் குறித்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் வகையில், இளைய, புதிய தலைமுறையினரை முற்போக்காக சிந்திக்கத் கூடிய உந்துதலை, தூண்டலை கொடுக்கும் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்கின்ற வேட்கை உள்ளவர்.

படமாக்கி பணமாக்க வேண்டும் என்பதல்ல அவரின் நோக்கம். அவர் உள்வாங்கி இருக்கும் அரசியல் கோட்பாடு தான் அவரை துணிவாக இருக்கும்படி இயங்கும்படி தூண்டிக்கொண்டும் இயக்கிக் கொண்டும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.90களில் ஒரு கவிதை எழுதினேன். ”எதனையும் எதிர் கொள்ள இரு விழிப்பாய்,. இமயம் போல் தடை வரினும் எகிறிப் பாய்” என்று. எதனையும் எதிர்கொள்வோம், அந்த துணிச்சல் நமக்குத் தேவைப்படுகிறது. பெரியார் சொல்வார், “நீ போராடிப் போராடி உரிமையை வென்றெடுப்பாய், பாராளுமன்றத்தில் பேசி அதற்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தை இயற்றுவாய், ஆனால் நீ இயற்றும் சட்டமே செல்லாது என்று சொல்லுகிற இடத்தில் அவன் இருப்பான்” என்று சனாதன சக்திகளை அப்போதே தோலுரித்துக் காட்டியவர் தந்தை பெரியார்.

‘கற்பு பூமி’ என்பதில் என்ன சிக்கல் இருக்கிறது…? இதில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை எங்கே உருவாகிவிடப் போகிறது. பெண்களுக்கு எதிரான குரூரம் இந்த மண்ணில் அரங்கேறி இருக்கிறது. அதை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஏன் 109 வெட்டுகள்?

ஏன் அவர்கள் அச்சப்படுகிறார்கள். நூற்றுக்கு நூறு இது கருத்தியல் சார்ந்த பகைதான். நேசமுரளி உள்வாங்கி இருக்கும் இடதுசாரி அரசியல் தான், அதாவது கம்யூனிஸ்ட் சிந்தனை அல்ல, வலதுசாரி சிந்தனைக்கு எதிரான எல்லாமே இடதுசாரி சிந்தனை தான். பழமைவாதத்திற்கு எதிரான, ஜனநாயகத்தைப் பேசும் அனைத்து சிந்தனையும் இடதுசாரி சிந்தனை தான். பன்மைத் தன்மையை பேசுபவை எல்லாம் இடதுசாரி சிந்தனை தான். இந்தப் படத்திற்காகவே நாம் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதை நீங்கள் முன்னெடுத்தால் கண்டிப்பாக நாங்கள் அனைவரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து பங்கெடுப்போம் என்று சொல்லி வாழ்த்தி விடை பெறுகிறேன்.