மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி?

படு கேஷூவலாக பல்வேறு ரோக்லளில் நடிக்க ஆரம்பித்து தர்போது டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற்று கடந்த ஆண்டு 6 படங்களை வெளியிட்டு வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டில் அவரது நடிப்பில் மார்ச் மாதம் வெளியான ‘கவண்’ ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தாதாவாக அவர் நடித்த ‘விக்ரம் வேதா’ கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தில் மாதவனுடன் இணைந்து அவர் நடித்துள்ளார்.

மேலும் தற்போது கருப்பன், அநீதி கதைகள், 96, சீதக்காதி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர ஏற்கனவே இவர் நடித்து முடித்துள்ள இடம் பொருள் ஏவல், புரியாத புதிர் ஆகிய படங்கள் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில், இந்த ஆண்டில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதி அண்மையில் இயக்குநர் மணிரத்னத்தை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது புதிய படத்தில் நடிப்பது குறித்து விவாதிக்கவே விஜய் சேதுபதி அங்கு சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தோற்றத்துக்கும், நடிப்புக்கும் ஏற்றவாறு கதையைத் தேர்வு செய்து நடித்து நல்ல பெயரை பெற்று வரும் விஜய் சேதுபதி, ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரலில் மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படம் வெளியானது. இந்தப் படத்துக்கு பின்னர் அவர் இயக்க இருக்கும் படத்தின் ஹீரோவாக துல்கர் சல்மான், ஃபஹத் பாசில், ராம் சரண் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் பெயரும் அடிபடுகிறது.