சந்தானத்தின் ‘வடக்குபட்டி ராமசாமி’ பட உரிமையை இவர்தான் வாங்கியுள்ளாரா!

 

பாக்ஸ் ஆபிஸின் வெற்றிக் கூட்டணி புதிய படத்திற்காக இணையும் போது, நிச்சயம் அது வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியான ஒரு கூட்டணிதான் ‘டிக்கிலோனா’ படப்புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம்.

சமீபத்தில் வெளியான அவரது ‘டிடி 3’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் அவரது நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தி இருக்கும் நிலையில், தற்போது பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரிப்பில் சந்தானம் நடித்திருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் பெற்றுள்ளார்.

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன், திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக மாறியுள்ள சந்தானத்தின் நட்சத்திர வேல்யூவை கருத்தில் கொண்டு, டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரிய அளவில் புரோமோஷனல் விஷயங்களைத் திட்டமிட்டுள்ளது. மேலும், சரியான வெளியீட்டுத் தேதியையும் விரைவில் அறிவிக்க உள்ளது.

இந்த படத்தில் சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் தமிழ் வில்லனாக நடிக்கிறார். ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் இந்த நட்சத்திரக் குழுவில் உள்ளனர்.

ஷான் ரோல்டனின் இசையமைப்பிலும், தீபக்கின் ஒளிப்பதிவிலும், சிவ நந்தீஸ்வரனின் படத்தொகுப்பிலும் இந்தப் படம் உருவாகி வருகிறது. கலை இயக்குநர் ராஜேஷ், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் வி.ஸ்ரீ நட்ராஜ் மற்றும் நடன இயக்குநர் ஷெரிப் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கி இருக்க, டி.ஜி.விஸ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ளார்.