பிரபல நகைச்சுவை நடிகரும் கமலின் நெருங்கிய நண்பருமான ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

 

நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக பிரபலமாக அறியப்பட்டவர் ஆர்.எஸ். சிவாஜி. அதுமட்டுமல்லாமல், 1980, 90 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்து வந்தவர். கமலின் வெற்றிப்படங்களான ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘குணா’, ‘கலைஞன்’ என எல்லா படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் 1989ல் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அவர் ஜனகராஜைப் பார்த்துப் பேசிய வசனமான ‘தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க’ என்ற வசனம் மிகவும் புகழ்பெற்றது. இன்றளவும் பல திரைப்படங்களில் இந்த வசனமும் இடம்பெற்றுள்ளது.

‘8 தோட்டாக்கள்’, ‘வனமகன்’, என இன்றும் சிறுசிறு வேடங்களில் நடித்துவரும் ஆர்.எஸ். சிவாஜி, ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தந்தையாகவும் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடனான இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்ட நிலையில், கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களிலும் இவர் அதிகமாக நடித்துள்ளார்.

RS Shivaji, the veteran actor, passes away, condolences pour in from the Tamil film buffs

மேலும் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் கமல் சார்தான். என் இதயத்தில் 4 ஓட்டைகள் இருந்தது. சிகிச்சைக்கு அவரிடம்தான் உதவி கேட்டேன். எனக்கான எல்லா சிகிச்சையையும் அவரே பார்த்துக்கொண்டார். அதேபோல், கொரோனா காலத்தில் மாத்திரைகள் வாங்கவும் அவரிடம் உதவி கேட்டேன். அப்போது முதல் இப்போது வரை எனக்கு ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து மாதம் மாதம் மாத்திரைகள் வந்து கொண்டிருக்கிறது. கமல் சார் இல்லையேல் நான் இல்லை’ என்று கூறினார். தற்போது 66 வயதே ஆன நிலையில் இன்று காலமானார்.