இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில்
இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி பேசுகையில்,
” இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா சுபாஷ்கரனுக்கும் முதலில் நன்றி. மீண்டும் என்னை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, தமிழ் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்ததற்காக நன்றி. சந்திரமுகி படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட். அதற்கு என்னுடைய நண்பர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் பணியாற்றிய பிறகுதான் இயக்குநர் வாசு சார் மிக நல்ல பாடகர் என்பது தெரிய வந்தது. மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த படத்தில் உங்களை பாட வைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய இசையில் நீங்கள் பாட வேண்டும். என்னுடைய அடுத்த பின்னணி பாடகர் நீங்கள் தான். இந்த திரைப்படத்தை முதல் முறை அனைவருக்காகவும் பார்ப்பீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை.. படத்தில் நடித்திருக்கும் வடிவேலுவிற்காகவே… வடிவேலுவின் நடிப்பிற்காகவே அனைவரும் பார்ப்பார்கள்.
சந்திரமுகி படத்தின் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு பாடல்களை உருவாக்கிய பிறகு, இயக்குநர் வாசுவிடம் சந்திரமுகியாக நடிப்பது யார்? என்று கேட்டபோது, இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றார். இறுதியாக சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சந்திரமுகி முதல் பாகத்தில் பிரபலமான வசனம் ஒன்று உண்டு ‘லக லக லக லக லக’. இந்த வசனத்தை பேசியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவர் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னது போல் ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நீங்கள் கேட்கப் போவது ‘லைக்கா லைக்கா லைக்கா லைக்கா லைக்கா.” என்றார்.
‘வைகைப்புயல்’ வடிவேல் பேசுகையில்,
” ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை. இதற்கு முதல் படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த ரெண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற.
சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு. இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். வாழ்த்துக்கள். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன் ” என்றார்.
ராகவா லாரன்ஸ் பேசுகையில்,
சந்திரமுகி படத்தின் கதையை முதலில் தமிழ்குமரன் கேட்டார். அதன் பிறகு தமிழ் குமரன் என்னை தொடர்பு கொண்டு சுபாஸ்கரன் சென்னைக்கு வருகிறார். அவர் ஒரு முறை சந்திக்கலாமா..? என கேட்டார். சரி என்று ஒப்புக்கொண்ட பிறகு, என்னுடைய மனதில் சுபாஷ்கரன் பெரிய தொழிலதிபர். ‘2.0’, ‘இந்தியன் 2’ என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்.. என கற்பனையாக ஒரு அணுகுமுறையை எதிர்பார்த்திருந்தேன். அவரை சந்திக்க அவரது அறைக்குள் நுழைந்ததும். அவர் ஆசையுடன் தம்பி என்று சொல்லிக் கொண்டே என்னை ஆரத் தழுவிக்கொண்டார். அவருடைய கட்டிப்பிடித்தலிலேயே அவருடைய அன்பை முழுவதுமாக உணர்ந்தேன். அந்தத் தருணத்தில் அங்கு வருகை தந்த மற்றவரிடம் அதே விருந்தோம்பலும், அன்பையும் செலுத்தினார். அப்போதுதான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது. அவர் வயது வித்தியாசம் எதுவுமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்.
சந்திரமுகியாக கங்கனா நடிக்கப் போகிறார் என வாசு சார் சொன்னவுடன், அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக தனது கருத்தை பதிவு செய்பவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்.. என்பதால் எப்படி நடந்து கொள்வாரோ..! என்று எண்ணிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் வருகை தரும் போது அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் வந்தனர். அவர் ஒரு கலைஞர்தானே… எதற்கு அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வரவேண்டும்? என எண்ணினேன். இது தொடர்பாக வாசுசாரிடம் கேட்டபோது. ‘அவர் இப்படித்தான். அவருக்கு சில பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயுதம் எழுதிய காவலர்கள் உடன் வருவார்கள்’ என விளக்கம் சொன்னார். அப்போது அவரைப் பார்த்து வணக்கம் சொல்வதற்கு கூட பயமாக இருந்தது. அதன் பிறகு அவரிடம் என் எண்ணத்தை பகிர்ந்து கொண்டேன். அவர் உடனடியாக ஆயுதம் ஏந்திய காவலர்களிடம் பேசி அவர்களை சற்று தொலைவில் நிற்க வைத்தார். அதன் பிறகு கங்கனாவிடம் பழகத் தொடங்கி, கங்கனா என்றேன். அதன் பிறகு கங்கு என்றேன். படப்பிடிப்பு தளத்தில் அவரும் கலாட்டா செய்வார். மகிழ்ச்சியாக இருப்பார். உற்சாகத்துடன் இருப்பார். நான் பழகியதில் குழந்தை உள்ளம் கொண்ட நடிகை என கங்கனாவை சொல்லலாம் அவர் இந்த படத்தில் நடித்திருப்பது படத்திற்கு பலம். ” என்றார்.