கார்த்தி வீட்டு அவியலை அனுபவித்து சாப்பிட்டேன்! – தீரன் அதிகாரம் ஒன்று நாயகி ரகுல் பிரீத் ஹேப்பி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான ஸ்பைடர் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு ரகுல் பிரீத் சிங் ரீஎன்ட்ரி ஆனவர். இதைத் தொடர்ந்து தர்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வினோத் இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையொட்டி அவரிடம் பேச்சுக் கொடுத்த போது, ”நான் ஆரமபத்தில் நடித்த 2 தமிழ்ப் படங்கள் சரியாகப் போகாததால் நான் ஏமாற்றமடைந்தேன். அதே சமயம் தெலுங்கு எனக்கு கைகொடுத்தது. இதுக்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக தமிழில் நடிக்க அழைப்புகள் வந்தன. ஆனாலும் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ தெலுங்கிலும், தமிழிலும் உருவானது. அதில் நடிக்க அழைத்த போது நேரம் அமைந்தது.

தற்போது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருக்கிறேன். கார்த்தி மிகச் சிறந்த நடிகர் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அப்பேர் பட்டவருக்கும் எனக்குமான காதல் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வந்துள்ளது. தமிழில் வசனம் பேசி நடிக்கும்போது சிலமுறை என்னுடைய வசனங்களை மறந்துவிட்டேன். அப்போதெல்லாம் என்னுடைய வசனங்களை கார்த்திதான் எனக்கு ஞாபகப்படுத்தி உதவினார். அவருடன் சேர்ந்து நடித்ததை மிகப்பெரிய அனுபவமாகக் கருதுகிறேன். இங்கே ஷூட்டிங் நடக்கும் போது அவருடைய வீட்டில் இருந்து எனக்கு சாப்பாடு வரவழைத்து கொடுத்தார். அவருடைய அம்மா தயாரித்த சிறுதானிய உணவுகள் அருமை. அவியலை அனுபவித்து சாப்பிட்டேன்.

இந்த படத்தைப் பொறுத்த வரை என்னுடைய ரியல் லைஃப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். நான் ஒரு கிராமத்தில் வளர்ந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணாக, போலீஸ் அதிகாரியின் மனைவியாக நடித்துள்ளேன். இது எனக்கும் புதிய அனுபவமாக இருந்தது. என்மீது நம்பிக்கை வைத்து என்னை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்த இயக்குநர் வினோத்- க்கு இந்தத் தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய கதாபாத்திரத்துக்காக அவர் மிகவும் மெனக்கெட்டுள்ளார். என்னுடைய நடை, உடை, பாவனை, உடல் மொழி அனைத்துக்கும் குறிப்புகள் காட்டினர். அவர் கூறியவாறு ஒரு தமிழ் பெண்ணாக அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன்.

மேலும் சில படங்களில் நடிக்கும்போதுதான் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே நேர்மறையான எண்ணமும், நடிப்புக்கான ஆவலையும் தூண்டும். அந்த மாதிரியான அனுபவம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது சில நேரங்களில் படப்பிடிப்பு முடிய இரவு 9 மணிக்கு மேல் ஆகும். ஆனாலும் படத்தின் காட்சிகள் முடியும் வரை இருந்து அதை சரியாக நடித்துக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்து நடித்தேன். உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய கதை என்பதால் இயக்குநர் கூறியவாறு நடித்துள்ளேன். இறுதியாகப் படத்தை பார்க்கும்போது இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அப்படியே பிரதிபலிப்பது போன்று அமைந்துள்ளது. இதற்காக நான் மட்டுமல்லாது அனைவருமே மனப்பூர்வமாக உழைத்துள்ளோம். “ என்றவர் அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதும் கார்த்தியுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் அடிசினல் தகவல்.