அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்
நடிகை நிகிலா விமல் பேசுகையில்,
” இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருந்தது, இந்தப் படத்தின் மூலம் பலருக்கு நான் அறிமுகமாகியுள்ளேன், படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி , இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்குத் தூக்கமே இல்லை. படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் இருந்தது, எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. அசோக் மற்றும் சரத்குமார் சாருக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள், இந்த கதாபாத்திரத்தை எழுதிய இயக்குநருக்கு நன்றி, E4 என்டர்டெயின்மென்ட் இன் முதல் படத்தில் நான் இருந்தேன். அதே போல் இந்தப் படமும் வெற்றி என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,
ஊடக பத்திரிக்கையாளர் அனைவருக்கும் என் நன்றி” என்றார்.
நடிகர் அசோக் செல்வன் பேசுகையில்,
”இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தை தங்கள் படமாகக் கொண்டாடினார்கள். ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக்காட்டினோம். யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விடுவார்களோ..! என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள். உங்கள் எல்லோர்க்கும் நன்றி. கடந்த வருடம் நிறையப் படங்கள் செய்தேன். படம் நல்ல படமென்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகவில்லை. எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் செய்கிறோமா..? என கேள்வி வந்தது. அதற்கெல்லாம் பதிலாக இந்தப்படம் வந்துள்ளது. எல்லோரும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரத்குமாருடன் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. விக்னேஷ் ராஜாவை அனைவரும் பாராட்டுவதைக் கேட்கும்போது, நண்பனாக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவனோடு குறும்பட காலத்திலிருந்து பழகி வருகிறேன், தான் என்ன எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பான். அவன் இன்னும் உயரம் செல்வான். தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு படம் எடுத்ததற்கு நன்றி. ஒரு வசனம் சொல்லி முடிக்கிறேன், இந்தப்படத்தில் ஒரு வசனம் வரும் “உன் வேலையைச் சரியா செஞ்சா மரியாதை தானா வரும்” அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில்,
”விக்னேஷ் ஒரு நல்ல இயக்குநராக வருவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை விடப் பெரிய இயக்குநராக வந்து விட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இயக்குநர் அனைவரையும் செதுக்கி இருந்தார். தனக்குத் தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார். இயக்குநர் ஒரு ஹாலிவுட் தரத்தை இப்படத்திற்குக் கொடுத்துள்ளார். இந்தப் படமும் ஹாலிவுட் பட வெற்றி போலப் பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இன்றும் பல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஒரு புதிய சாதனை படைக்கும். விக்னேஷ் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அசோக் ஒரு நல்ல நடிகர் மற்றும் நடிகை நிகிலா அருமையாகத் தனது கதாபாத்திரத்தை நடித்துள்ளார். படக்குழு அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை நம்பி படமாக்கியதற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் மிகவும் அற்புதமாகப் பணி செய்துள்ளார். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. படக்குழு அனைவருக்கும் நன்றி. இதையெல்லாம் தாண்டி பத்திரிக்கையாளர்கள் உங்களுக்குத்தான் மிகவும் நன்றி கூற வேண்டும். உங்களின் கருத்துதான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் நன்றி” என்றார்.