தேவதாஸுக்கு இன்றும் உயிர்ப்பு இருக்கிறது!

ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, அமராவதி – அம்பிகாபதி, ஷாஜகான் – மும்தாஜ் ஆகிய காதலர்கள் வரிசையில் தேவதாஸ் – பார்வதி காதலர்களும் இணைந்துள்ளனர்.வரலாறு மற்றும் புராண காதல் ஜோடிகளோடு திரைப்படத்தில் வந்த ஒரு காதல் ஜோடியும் இணைத்து வைத்து பேசப்படுவது திரைப்படத்தின் வெற்றி மட்டுமல்ல அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்த கலைஞர் களின் வெற்றியுமாகும். 1953ம் ஆண்டின் வெளியான தேவதாஸ் படத்தின் கதாநாயகன் நாகேஸ்வர ராவ். இன்றைக்கும் யாராவது காதலில் தோல்வியடைந்து தாடி வைத்திருந்தால், என்ன பெரிய தேவதாஸ் என்று நினைப்போ என்று கேட்கப்படுகிறது. இவ்வாறு  கேட்பவர் களில் பலர் தேவதாஸ் படத்தைக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் காதல் தோல்விக்கு அடையாளமாக தேவதாஸ் மாறிப் போய்விட்டான். தமிழ் சினிமாவில் காதல் தோல்வி படங்கள் எத்தனையோ வந்திருக் கின்றன. ஆனால் அத்தனைக்கும் மூலப் பிரதியாக விளங்குவது தேவதாஸ்தான்.

இந்த படத்தில் இடம் பெற்ற, ‘உலகே மாயம், வாழ்வே மாயம், நிலையேது நாம் காணும் கனவே மாயம்‘ என்ற பாடலும் ‘நிலை இதுதான், நிஜம் இதுதான்‘ என்ற பாடலும் காதலில் தோல்வி யடைந்திருந்தவர்களின் தேசிய கீதங்களாகவே விளங்குகின்றன. இதே படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஓ தேவதாஸ், ஓ பார்வதி படிப்பும் இதானா’ என்ற பாடலும் இன்றளவும் புகழ் பெற்று விளங்கு கிறது.தேவதாஸ் கதை வங்கமொழியில் சரத் சந்திரரால் எழுதப்பட்டது. இந்த நாவலை அவர் எழுதும் போது அவருக்கு வயது 17. காதல் தோல்விக்காக மட்டும் இந்த கதை இன்றளவும் பேசப்படவில்லை. மாறாக, காதலை பிரிக்கும் ஜாதி, வெட்டி கவுரவம் போன்றவையும் இன்றளவும் தொடர்வதால்தான் இந்த காவியம் நினைக்கப்படுகிறது. இந்த நாவல் முதலில் 1927ல் திரைப் படமாக எடுக்கப்பட்டது.அந்த படத்திற்கு மொழி இல்லை. ஏனெனில் அப்போது பேசும் படங்கள் வரவில்லை. 1935ல் வங்கமொழியிலும், 1936ல் இந்தியிலும், 1937ல் அசாம் மொழியிலும், 1953ல் தெலுங்கு மற்றும் தமிழிலும், 1955ல் மீண்டும் இந்தியிலும், 1974ல் மீண்டும் தெலுங்கிலும், 1979ல் மீண்டும வங்க மொழியிலும், 1982ல் மீண்டும் வங்க மொழியிலும், 1989ல் மலையாளத்திலும், 2002ல் மீண்டும் வங்க மொழி மற்றும் இந்தியிலும், 2009ல் இந்தியிலும், 2013ம் ஆண்டு மீண்டும் வங்க மொழியிலும் பலமுறை இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

தேவதாஸாகவும், பார்வதியாகவும் பல்வேறு கலைஞர்கள் நடித்துள்ளனர்.நாகேஸ்வரராவ் நடித்த படத்தில் தேவதாஸ் – பார்வதி மட்டுமின்றி ஒரு சில காட்சிகளில் வரும் நாயும் கூட ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது. காதல் தோல்வியில் குடிகாரனாக மாறி போய்விடும் தேவதாஸ், ஒரு நாயின் அருகில் படுத்துக் கிடப்பார். இப்போதும் கூட காதலிப்பவர்களை எச்சரிக்க கடைசியில் ஒரு நாய் தான் உனக்கு துணையாக இருக்கப் போகிறது என்று கிண்டல் செய்வது வழக்கமாக உள்ளது.தேவதாஸ் வெற்றிக்கு பாடகர் கண்டசாலாவின் குரலும் துணை நின்றுள்ளது. தமிழில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் டி.எம்.சௌந்தரராஜன் குரல் துணைநின்றது போல, நாகேஸ் வரரராவுக்கு கண்டசாலாவின் குரல் அப்படியே பொருந்தி போனது. என்னுடைய வெற்றிகளின் பின்னால் கண்டசாலாவின் குரல் நிழல் போல தொடர்ந்து வந்தது என்று நாகேஸ்வரராவ் குறிப்பிட்டிருக்கிறார்.

தேவதாஸ் – பார்வதி காதல் நிறைவேறாத நிலையில் பார்வதியை ஏற்கெனவே திருமணமான ஒருவருக்கு இரண்டாம் தாரமாக கட்டிக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் பார்வதியின் காதலை மறக்க முடியாமல் திரிவான் தேவதாஸ். கடைசியில் இருள் அடர்ந்த ஒரு குளிர் இரவில் பார்வதி வீட்டு வாசலில் இருமி இருமி செத்துக் கிடப்பான் தேவதாஸ். காலையில் கதவை திறந்தவுடன் தேவதாஸ் பிணத்தை நோக்கி ஓடிவருவாள் பார்வதி. ஆனால் அவளை பிடித்துக் கொள்வார்கள். நிகழ்விடம் வேறாக இருக்கலாம். தர்மபுரி தண்டவாளத்தில் கிடந்த இளவரசன் நிலையும் இது தானே?அண்ணாவின் கதையான ‘ஓர் இரவு’ திரைப்படத்திலும் நாகேஸ்வரராவ் நடித்துள்ளார். அந்தப் படத்தில்தான் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’ என்ற புகழ் பெற்ற பாடல் இடம் பெற்றது. இந்த திரைப்படத்தின் இசை யமைப்பாளர் ஆர்.சுதர்சனம். ஆனால் இந்தப் பாடலுக்கு மட்டும் இசையமைத்தவர் எம்.எம். தண்டபாணி தேசிகர். தேஷ் ராகத்தில் அமைந்த பாடல் இது.

கிராமப்போன் ரெக்கார்டு காலத்திலிருந்து எம்.பி.3 காலம்வரை நிலைத்து நிற்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.தனது 17வது வயதில் ‘தர்ம பத்தினி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நாகேஸ்வரராவ். ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், துவக்கத்தில் நாடகங்களில் நடித்துள்ளார். ராமன், கிருஷ்ணன் போன்ற வேடங்கள் என்றாலே என்.டி.ராமாராவ்தான் நினைவுக்கு வருவார். ஆனால் நாகேஸ்வரராவ் ராமனாக நடித்த சீதாராமஜனனம் என்ற படமும் தெலுங்கில் பரபரப்பாக ஓடிய படங்களில் ஒன்று.

காதல் தோல்விக்காக பெரிதும் பேசப்படும் படங்களில் ஒன்று சிவாஜிகணேசன் நடித்த வசந்த மாளிகை. இந்த படமும் தெலுங்கில் நாகேஸ்வரராவால் நடிக்கப்பட்டு பின்னர் தமிழில் எடுக்கப்பட்டதுதான்.தேவதாஸ் படத்தின் சாயலில் நாகேஸ்வரராவ் பிற்காலத்தில் நடித்த படம் ‘பிரேமாபிஷேகம். இந்த படம்தான் தமிழில் கமலஹாசன் -ஸ்ரீதேவி நடித்த வாழ்வே மாயம் படத்தின் மூலம் ஆகும். இந்த படத்தில் கவிஞர் வாலி எழுதிய வாழ்வே மாயம் பாடலும் புகழ் பெற்றது. தேவதாஸ் படத்தில் இடம் பெற்ற பாடலில் சாயல் இருக்கக் கூடாது என்று நினைத்து தான் இந்த பாடலை எழுதினேன். ஆனால், என்னை அறியாமலே அந்த வரிகள் உள்ளிருந்து என்னை இயக்கியுள்ளன என்று குறிப்பிட்டார் கவிஞர் வாலி.தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் நாகேஸ்வரராவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்தனைக்கும் அவர் பொருத்தமானவர்தான்.தெலுங்கு மொழிக் கலைஞர்கள் தமிழ் திரைப்பட உலகிற்கு பல அருங்கொடைகளை வழங்கியுள்ளனர். ரெங்காராவ் துவங்கி நாகையா வரை, கண்ணாம்பாள் துவங்கி சாவித்திரி வரை, கண்டசாலா துவங்கி பி.சுசீலா, ஜானகி, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் வரை தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பலர் தமிழ் திரையுலகின் மகுடங்களாக விளங்குகின்றனர். ஒருசில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கு திரைப்பட உலகின் சக்கரவர்த்திகளில் ஒருவரான நாகேஸ்வரராவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனியொரு சிம்மாசனம் உண்டு.தேவதாஸ் பாத்திரத்தில் பலர் நடித்திருந்தாலும் தேவதாஸ் என்றவுடன் மனதில் தோன்றும் முகம் நாகேஸ்வரராவ்தான். அந்த கலைஞனுக்கு மரணம் இல்லை. அவரி படைப்வ்புக்கு இன்றும், என்றும் உயிர்ப்பு இருக்கிறது.

அகஸ்தீஸ்வரன்