தண்டட்டி திரை விமர்சனம்

 

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிக்க, பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, தீபா சங்கர், செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா நடிப்பில் ராம் சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி உள்ள படம் தண்டட்டி.

தண்டட்டி என்பது, கிரமாத்து வயதான பெண்கள், காது வளர்க்க அணியும் தங்க ஆபரணம். தற்போது வழக்கொழிந்து வரும் இந்த தண்டட்டியின் பின்னால் ஒரு அழகிய கதையை கிரமாத்து வாழ்வியலை கண்முன் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்கள்.

இன்னும் கொஞ்ச நாளில் ஒய்வு பெற வேண்டிய வயதில், ஒரு குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால்  மனித உரிமை அமைப்பின் விசாரணைக்கு ஆளாகி மாற்றல் வாங்கி புதிய பகுதிக்கு வந்திருக்கும் காவலர் (பசுபதி). அருகே இருக்கும் பிரச்சனைக்குரிய கிராமத்தில் யாருக்கு பிரச்சனை என்றாலும் போலீஸ் போகாது, ஆனால் அங்கே இருந்து தன் அம்மாவை காணவில்லை என மூன்று பெண்களும் பேரனும் வருகிறார்கள்.

இறந்து போன அவரை கண்டுபிடிக்கும் பசுபதி, அவரது இறுதி சடங்கிற்கு காவலுக்கு செல்கிறார். அவர் காதில் அணிந்திருக்கும் தண்டட்டி மதிப்பால், அதை அடைய அவர் குடும்ப வாரிசுகள் போட்டி போடுகிறது. விடிகாலையில் தண்டட்டி காணாமல் போய்விடுகிறது. அதன் பிறகு நடக்கும் களேபரங்களே படம்


படத்தின் ப்ளஸ் அச்சுஅசலான கிராம வழக்குகளும், அந்த மனிதர்களும் திரையில் வந்திருப்பது தான். தண்ட்டட்டி பின்னால் இருக்கும் கதை உண்மையில் சிலிர்க்க வைக்கிறது. மண்ணும் மனிதர்களும் பின்னிப்பிணைந்து ஒரு கதை எழுதியதில் அறிமுக இயக்குநர் ராம் சங்கையா வென்றிருக்கிறார்.

பசுபதியை தனியாக சொல்லத் தேவையில்லை. மிடுக்கான போலீஸ், கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும் இடத்தில் அசத்துகிறார். ரோகிணி பிணமாக நடிக்க வேண்டும் அதிலும் அவர் அசத்தியிருக்கிறார். தீபா சங்கர், விவேக் பிரசன்னா இருவரும் மனதை கவர்கிறார்கள்.

படத்தின் மைனஸ் திரைக்கதை தான், தண்டட்டி காணாமல் போவாது தான் படத்தின் மையம் ஆனால் அது நடைபெறுவது இடைவேளை காட்சியில் அதுவரை திரையில் எதுவுமே சுவாரஸ்யமாக இல்லை. படத்தின் க்ளைமாக்ஸ் மட்டும் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

கதையின் பரபரப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் தடுமாறுகிறது. அதை சரி செய்திருந்தாலே பாதிப்படம் நன்றாக வந்திருக்கும். இசை படத்திற்கு தேவையானதை தந்துள்ளது.

நாம் அறியாத உலகின் கதை இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பாகியிருக்கும்.