நியாயத்தின் பக்கம் நிற்பாளா கார்கி?- கார்கி விமர்சனம்

கார்கி

பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட தன் அப்பா நிரபராதி என நிரூபிக்க போராடும் ஆசிரியாய் வேலை செய்யும் ஒரு பெண்ணின் கதை.


படத்தின் மிகப்பெரிய பிளஸ் படம் ஆரம்பிக்கும் இடமும், முடியும் இடமும் தான். சிறிது நேரம் கூட தாமதிக்காமல் முதல் பிரேமில் இருந்து கதைக்குள் போக ஆரம்பித்துவிட்டார்கள். எடுத்துகொண்ட கதைக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்து படத்தை நிமிர செய்துவிட்டார் படத்தின் எழுத்தாளர்.

லைவ் சவுண்ட், லைவ் லோகேஷன், நிஜத்தில் வாழும் கதாபாத்திரங்கள் என படத்தை நம்முடன் இணைக்க கடினமாக உழைத்து அதில் வெற்றி கண்டு இருக்கிறார்கள் படக்குழு. ஒளிப்பதிவாக இருக்கட்டும், எடிட்டாக இருக்கட்டும், இசையாக இருக்கட்டும் தனியாய் தெரியாமல் கார்கி உலகத்தோடு இணைந்திருக்கிறது. அதுவே திரைப்படத்தை மிகச்சிறப்பாக மாற்றி இருக்கிறது.

அடுத்தாக இந்த திரைப்படத்தின் நடிகர்கள் பற்றி கூற வேண்டும். இந்த படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். முதலில் இந்த படத்தில் ஆச்சர்ய பேக்கேஜாக இருந்த சரவணன்(பிக்பாஸ் புகழ், பருத்திவீரன் புகழ் என எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டு கொள்ளுங்கள்). பாதிக்கபட்ட குழந்தையின் தந்தையாக வரும் அவர், தான் ஒரு பிரம்மாதமான நடிகர் என ஆணித்தனமாக நிரூபித்துள்ளார். ஒரு தந்தையாக அவர் சந்திக்கும் மன போராட்டத்தை, தன் வார்த்தைகளை கொட்டும் விதம், கோபத்தை ஆள் பார்த்து காட்டும் விதம், மகளை எப்படி எதிர்கொள்வது என அவர் சிக்கிதவிக்கும் இடம் என தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிகாட்டியுள்ளார். அடுத்ததாக சாய்பல்லவி, அப்பாவையும் காப்பாற்ற வேண்டும், தன் மனதிற்குள் இருக்கும் சிக்கல்களையும் கடக்க வேண்டும் என ஒரு இயல்பான கதாபாத்திரத்தை திரையில் காட்டியுள்ளார் சாய்பல்லவி. அடுத்ததாக காளி வெங்கட், வக்கீல் கதாபாத்திரத்தில் வரும் அவர் எங்கு என்ன தேவை என தெரிந்து நடித்து இருக்கிறார்.

இவர்கள் அனைவரையும் நேர்கோட்டில் இழுத்து பட்டது சிறப்பாக உருவாக்கியுள்ள இயக்குனருக்கு வாழ்த்துக்கள். ஒரு சிறப்பான படத்தை மிஸ் செய்துவிடாதீர்கள்.