சார்பட்டா பரம்பரை – விமர்சனம்!

மெட்ராஸாக இருந்து சென்னையாக ,மா(ற்)றிய வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையாவிடம் நம் கட்டிங் கண்ணையா முன்பொரு முறை பேசிக் கொண்டிருந்த போது“உண்மையில், சென்னை நகரம் தொடங்கிய இடம் வடக்கு மெட்ராஸ்தான். அரசியலையும் கலாச்சாரத்தையும் பொறுத்தவரை வடக்கு மெட்ராஸ் என்பது மிகவும் துடிப்பான பகுதி. அதே வட சென்னையில்தான் உலகிலேயே அதிகமான ஜீவ சமாதி இருக்கும் இடம் என்பது தெரியுமா? ஆம்.விஞ்ஞானத்தையும் மெய் ஞானத்தையும் நன்கு உணர்ந்த சித்தர்கள் பலர், வட சென்னையில் தான் ஜீவ சமாதி அடைந்து உள்ளனர்” என்று சொல்லி இருந்தார். இப்படியாப்பட்ட வட சென்னையில்தான் ப்ரொஃபஷனல் பாக்ஸிங் என்றொரு கலாச்சாரம் மிகப் பிரபலமாக இருந்தது. அது போன்ற தொழில்ரீதியான குத்துச்சண்டை கற்றுக் கொடுத்து ஆக்ரோசமான போட்டிகளை நடத்துவதற்கென்றே சில அமைப்புகள் இருந்தன. இவற்றைதான் பரம்பரைகள் என்று வட சென்னைவாசிகள் சொல்வது வழக்கம். இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்பச் செட்டியார் பரம்பரை, கறியார பாபுபாய் பரம்பரை’ போன்றவை ப்ரொஃபஷனல் பாக்ஸிங் என்றவுடன் உடனே நினைவுக்கு வரும் பிரலமான பரம்பரைகள். இவற்றை அகாடமி அல்லது ஸ்கூல் அல்லது பயிற்சி மையங்கள் என்று இப்போது குறிப்பிடலாம். அப்படியான ஒரு அமைப்பான சர்பட்டா பரம்பரை என்றொரு டீம் குறித்து பக்காவாக ஆராய்ந்து உருவகப்படுத்தி காண்போரை கைத்தட்ட வைத்திருக்கிறார் பா. இரஞ்சித். அதே சமயம் இப்படத்துக்கு பேமிலி ஆடியன்ஸ் வர வாய்பில்லை என்பதை சரியாக கணித்து ஓடிடியில் ரிலீஸ் செய்தும் கவனிக்க வைத்திருக்கிறார்.

கதை என்னவோ ரொம்ப சிம்பிள்தான்..முந்தைய பேராவில் சொன்னது போல் இரண்டு பாக்ஸிங் குழுக்களுக்கு இடையே நடக்கும் சவால் & சண்டை மட்டுமே முழு படம். கொஞ்சம் விவரிப்பதானால் 1970 ஆண்டுகாலட்டத்தில் பிரபலமாக இருந்த இடியப்ப பரம்பரை, சார்பட்டா பரம்பரை போன்ற அணிகள் அடிக்கடி மோதிக்கொள்ளும். மிகவும் பெருமைக்குரிய இந்த பாக்ஸிங் போட்டியில், இடியாப்ப பரம்பரையை சேர்ந்த வேம்புலி என்கிற பாக்ஸிங் வீரர் எதிரணியில் உள்ள வீரர்களை துவம்சம் செய்ய சார்பட்டா பரம்பரைக்கு அவமானமாகிறது. இந்நிலையில் வேம்புலியை ஜெயிக்க உங்க உங்க அணியில் யாருடா இருக்கா? என்ற நிலை வரும்போது கதையின் நாயகன் ஆர்யா உள்ளேன் அய்யா என்று உற்சாகமாக் குரல் கொடுக்கிறார். பாக்ஸிங்கில் கொஞ்சம் கூட முன்னனுபவமில்லாத ஆர்யா யார்? போட்டி எப்படி நடந்தது? என்பதே கதை. இந்த சவடால் கதைக்குள்ளும் இரஞ்சித் தன் வழக்கமான அரசியலை அள்ளி விட தவறவில்லை, குறிப்பாக திராவிட இயக்கங்களின் போக்கு, மிசா எமெர்ஜென்சி சட்டம், ஆட்சிக் கலைப்பு, கள்ளச் சாராய வணிகம், மாட்டுக் கறி, குடிப் பழக்கத்துக்கு அடிமையா(க்)கும் சூழல், வீரர்கள் அரசியல்வாதிகளின் அடியாள்களாக மாறிய உண்மை என்று அதிரடியாக பல நிஜங்களை அம்பலப்படுத்தி இருக்கிறார்

கபிலன் என்னும் ஹீரோ ரோலில் ஆர்யா அசத்தி இருக்கிறார். அவருடைய திரையுலக வாழ்வில் சிறந்த படங்களில் ஒன்று என்று சொல்லலாம்.’ இந்த ரோலில் தான்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ரஞ்சித்தை தொடர்ந்து நச்சரித்து வாங்கிய கேரக்டரின் பலத்தைப் புரிந்து தூக்கி நிறுத்தி இருக்கிறார். ஆனாலும் சில காட்சிகளில் அய்யே சொல்ல வைக்கிறார். அதை அடுத்து மெயில் வரும் ஜான் விஜய் மற்றும் பசுபதி இருவரும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். கூடவே மாரியம்மாளாக துஷாரா விஜயன் தூள்

ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் 1970-களின் நார்த் மெட்ராஸ் வீதிகளையும், குத்துச்சண்டை நடைபெறும் மைதானமான கண்ணப்பர் திடலை, பரம்பரைகள் பயிற்சி செய்யும் இடங்கள் என சகலத்தையும் தத்ரூபமாக உருவாக்கி சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார். ராமலிங்கத்தின் படைப்பை பக்காவாக கண்ணுக்குள் கொண்டு வந்த முரளியின் கேமராவுக்கும் ஒரு சல்யூட்.

இது போக அட்டகாசம் என்று தொடங்கி அது சரியில்லை., இது இப்படி இருந்திருக்கலாம் என்றெல்லாம் சொல்ல எவ்வளவோ உண்டு என்றாலும் அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா மற்றும் கபாலி என தொடர்ச்சியாக அரசியல் சார்ந்தப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் முந்தைய படங்களில் இருந்த தலித் பிரச்சார நெடியை இதில் முடிந்த அளவு குறைத்து வழங்கி இருக்கிறார் என்பதே பெரும் நிறைவு. அதே சமயம் சமீபகாலமாக குறும்படங்கள் கண்டே குதூகலிக்கும் மனநிலைக்கு வந்து விட்ட ரசிகர்களின் மன நிலையை புரியாமல் எப்படா படம் முடியும் என்று வாய் விட்டு கேட்க வைத்ததிலும் தமிழ் சினிமாவின் வழக்கமான கிளைமாக்ஸாலும் ஆவ்ரேஜ் சினிமா பட்டியலில் இந்த சார்பட்டா சேர்ந்து விட்டது என்பதுதான் உண்மை.

மார்க் 3.5/5

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்