இயக்கம் – கார்த்திக்சுப்புராஜ்
நடிகர்கள் – விக்ரம், துருவ், பாபி சிம்ஹா
இரண்டு சிந்தாந்தங்களுக்கு இடையேயான சண்டை தான் மகான்.
தன்னுடைய சுய விருப்பத்தின் படி ஒரு வாழ விருப்பபடும் நாயகன், அதனால் தன் குடும்பத்தின் கோபத்திற்கு ஆளாகி, தனியாளாக மாற நேரிடுகிறது. அதன் பின் அவனது வாழ்கையில் நிகழும் சம்பவங்கள் தான் கதை.
ஆழமான கதையோட்டத்தில் உருவாக்கபட்ட திரைக்கதை. காந்திய சிந்தாந்தங்களில் தான் நீ வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஒரு பக்கம், எனக்கு விருப்பமான தவறுகள் நிறைந்த வாழ்கையை வாழவிடாமல் என்னை தடுக்காதீர்கள் என்ற சுதந்திரம் ஒரு பக்கம் என இருமுனைகளின் போராட்டத்தை கதைகளமாக எடுத்ததற்கு இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும்.
படத்தின் அடிநாதம் அழகாய் அமைந்திருந்தாலும், திரைக்கதையில் கோட்டைவிட்டு இருக்கிறார்கள் படக்குழு. பல காட்சிகள் வெறுமனே ஓடுவது போல் உள்ளது. ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஆழமான தேவை இருக்கிறது, ஆனால் அது எதுவும் திரையில் வரவில்லை. மிகப்பெரிய சிந்தாந்த போராட்டமாக வர வேண்டிய திரைப்படம், ஈர்ப்பில்லாத திரைக்கதையால் கோட்டை விடப்பட்டுள்ளது.
கதையில் நிகழும் முக்கியமான நிகழ்வுகளுக்கு ஆழமான காரணம் இல்லாமல் தொங்கலில் நிற்கிறது. விக்ரம்-சிம்ரன் பிரிவதற்கான காரணம், தனது மகனுக்காக தனது நண்பனை கொல்ல துணிவதற்கான காரணம் என படத்தில் பல சிக்கல் உள்ளது.
கமல்ஹாசன் இயக்கிய ஹே ராம் திரைப்படத்தை போன்று உருவாக வேண்டிய திரைப்படம். அந்த திரைப்படத்திலும் இரு சிந்தாந்தங்களுக்கிடையேயான போராட்டத்திலிருந்து ஒரு தனி மனிதன் என்ன ஆகிறான் என்ற கரு அமைந்துள்ளது. அது சிறந்த படமாகவும் விளங்கியது. அப்படிப்பட்ட கதைக்களத்தில் அமைக்கப்பட்ட இந்த திரைப்படம் அந்த உணர்வை கடத்தாமல் நீர்த்து போகவைத்தது கேளிக்கையாக உள்ளது.
விக்ரம் தனது நடிப்பு திறமையால் படம் முழுக, திரையை ஆக்கிரமித்து இருந்தாலும், சில முக்கியமான இடங்களில் அவரது சோபிக்க தவறிவிட்டார். துருவ் விக்ரம் உண்மையிலயே நடிப்பு திறமையை தனக்குள்ளே வைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்துள்ளார். ஆனால் விக்ரம்-துருவ் விக்ரம் இருவரும் வரும் இடங்களில் விக்ரம் கொஞ்சம் இறங்கி போவது போல் இருப்பது செயற்கையாக உள்ளது.
மிகவும் சிறப்பானதொன்றாக வர வேண்டிய திரைப்படத்தை, திரைக்கதையின் ஓட்டையால் தவறவிட்டுள்ளார்கள் .