ஹிருதயம் மலையாள படம் எப்படி இருக்கிறது ?

வினித் சீனிவாசனின் ஹிருதயம்
ஒரு அட்டகாசமான காலேஜ் சினிமா !
ஒரு இளைஞனின் வாழ்வில் காலேஜ் முதல் வருடம் முதல், அவன் கல்யாணம் ஆகி செட்டில் ஆவது வரையிலான 10 வருட கால பயணம் தான் இந்தப்படம்.
ஈசிஆரில் இருக்கும் ஒரு கல்லூரியில் நிறைய மலையாளிகள் படிக்கிறார்கள் அப்படி 2010 காலகட்டத்தில் படிக்க வரும் பிரனவ் உடைய வாழ்வு தான் கதை
ஒரு காலேஜ் ஃலைப்பில் என்ன நடக்கும் ராக்கிங், படிப்பு, நண்பர்கள், சண்டை, குடி, ஊர் சுற்றல், நண்பன் மரணம், காதல், காதல் தோல்வி, என வாழ்வின் தருணங்கள் அத்தனையும் படத்தில் அப்படியே வந்து போகிறது. எந்த பரபரப்பும் இல்லாத திரைக்கதை ஆனால் நம் கல்லூரி வாழ்வை, நாம் எப்படி நம் வாழ்வை கடந்து வந்தோம் என்பதை, அப்படியே கண்முன் கடை விரிக்கிறது.
எப்படி இதையெல்லாம் திரைக்கதையாய் யோசிக்கிறார்கள் என, மலையாள சினிமா மீண்டும் மீண்டும் ஆச்சர்யப்படுத்தி கொண்டே இருக்கிறது.
படத்தில் முதல் 10 நிமிடங்கள் இந்த கதை ஃபார்மேட்டுக்குள் செல்ல நமக்கு தடுமாற்றம் இருக்கும், ஆனால் அதன் பிறகு எல்லாம் மறந்து போகும்.
படத்தில் அழகழகாக எத்தனையோ தருணங்கள் வந்து கோண்டே இருந்தது. பிரணவ்,தர்ஷணா இருவரும் அத்தனை இயல்பாய் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையேயான காதல் தருணங்கள் திரையில் அவ்வளவு அழகாய் வந்திருக்கிறது.
தர்ஷணா சில காட்சிகளில் நெஞ்சில் ஈட்டியை இறக்குகிறார். அவர் கண்கள் அய்யோ அத்தனை வலியையும் கவிதையாய் பேசுகிறது. கல்யாணி பிரியதர்ஷன் க்யூட் நடிப்பால் அசத்தியிருக்கிறார். பிரனவ் மீது அவர் கொள்ளும் காதல் பொஸசிவ்னெஸ் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.
10 வருட நீண்ட வாழ்க்கை, எத்தனை தருணங்கள், எவ்வளவு சம்பவங்கள் அத்தனையும் நேர்த்தியாய் ஒரு சினிமாவுக்குள் அடக்கி பிரமிக்க வைத்திருக்கிறார் வினித் சீனிவாசன்
சென்னையை இத்தனை அழகாக தமிழ் சினிமா கூட காட்டியதில்லை. ஒளிப்பதிவு தரம். மியூசிக் பின்னி எடுத்துள்ளது. ஒரு தமிழ்ப்பாட்டு ஒரு இந்திப்பாட்டும் இருக்கிறது. பின்னணி இசை அற்புதம்.
மொத்தமாக மனதை அள்ளும் ஒரு ஃபீல் குட் சினிமா.